எதிரணியின் கூச்சல் குழப்பம்; அவை ஜன. 23 இற்கு ஒத்திவைப்பு (UPDATE) | தினகரன்

எதிரணியின் கூச்சல் குழப்பம்; அவை ஜன. 23 இற்கு ஒத்திவைப்பு (UPDATE)

 

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட தொடர்ச்சியான இடையூறுகளை அடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், பிணை முறி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று (10) சபையில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார் (குறித்த உரை நாளைய தினகரன் பத்திரிகையில்) இதன்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரஞ்சித் சொய்சா, காமினி லொக்குகே, சிசிர ஜயகொடி, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடுவே வந்து கூச்சல், கோசமெழுப்பினர்.

இதனையடுத்து, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

அதன் பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமானது, இதன்போது, முறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி அவையில் சமர்ப்பிக்கப்படும் என அரச கணக்காய்வு குழுவின் தலைவரும் பிரதியமைச்சருமான அமைச்சர் லசந்த அளகியவண்ண தெரிவித்தார். 

ஆயினும் தொடர்ச்சியான எதிரணியின் குழப்பம் காரணமாக,  பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

குறித்த சம்பவத்தின் போது, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன மயக்கமுற்று வீழ்ந்ததோடு, அவருக்கு பாராளுமன்ற வைத்தியசிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. அவர் இன்று காலை உணவு உட்கொள்ளாமை காரணமாகவே இவ்வாறு மயக்கமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 

முறி அறிக்கை அடுத்தவாரம் அவையில்; எதிரணி கூச்சல் குழப்பம்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், பிணை முறி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பிணை முறி தொடர்பில் இன்று (10) இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சபை நடுவில் சென்று கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.

இதனையடுத்து, கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டத்திற்காக பாராளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...