ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகள்! | தினகரன்

ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகள்!

 

புதிய வருடம் பிறந்த கையோடு நேற்றுமுன்தினம் பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டது. பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன விடுத்த வேண்டுகோளையடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 23 ஆம் திகதி கூடவிருந்த பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும், அது குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாகவும் விவாதிப்பதற்கே இந்த அவசர பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் 1400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் பிரதிகளை உறுப்பினர்களுக்கு வழங்குவதில் தாமதமேற்படுவதாகவும், எதிர்வரும் 17 ஆம் திகதியே மொழிபெயர்ப்புடன் கூடிய பிரதிகளை வழங்க முடியுமெனவும், சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த எதிரணித் தரப்பு சபையில் ஆவேசம் கொண்டு ஆர்ப்பரிக்க முற்பட்டது.

இந்தப் பாராளுமன்ற அமர்வு விஷேட அமர்வாகக் காணப்பட்ட போதும், அமர்வின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரமுற்றவர்கள் சபை நடுவுக்கு வந்து ஒழுக்கத்தை மீறும் வகையில் நடந்து கொண்டமையானது அருவருக்கத்தக்க விடயமாகும். பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வகையிலேயே எதிரணி உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். பாராளுமன்றம் ஒரு விளையாட்டுக்களமாக மாறிக் காணப்பட்டது.

பிணைமுறி விவகார விசாரணை ஆணைக்குழு அறிக்கையைத் தராமல் அரசாங்கத் தரப்பு தம்மை ஏமாற்றி விட்டதாக ஒன்றிணைந்த எதிரணியினர் கூறுகின்றனர். ஆனால் அந்த அறிக்கை உரிய காலத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமெனவும், தம்மிடம் அவசர பாராளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டார்களே தவிர அறிக்கைப் பிரதிகளை கேட்டிருக்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆளும் தரப்பினரும் தெரிவித்தனர். உண்மையிலேயே ஒன்றிணைந்த எதிரணி இந்த அமர்வை சண்டைக்களமாக மாற்றும் நோக்கத்துடனேயே செயற்பட்டிருப்பதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பாராளுமன்றம் என்பது நாட்டின் உயரிய சபையாகும். நீதித்துறைக்குச் சமமான உன்னத இடமாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடமே பாராளுமன்றம்தான். அதன் புனிதத் தன்மைக்கு களங்கமேற்படுத்தப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னரும் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நேற்றுமுன்தினம் நடந்தது போன்று அநாகரிகமான செயற்பாடுகள் முன்னர் நடக்கவில்லை. உறுப்பினர்கள் அநாகரிகமான வெட்கப்படக் கூடிய விதத்தில் நடந்து கொண்டமையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டைக் கட்டியெழுப்பும் சீரான பணிக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் ஆவர். அந்தச் சபையின் கதிரைகளுக்கு வருபவர்களிடம் பாரிய பொறுப்பு உள்ளதை மறந்து விடக் கூடாது. தேர்தல் மேடைகளில், களியாட்ட விடுதிகளில் நடந்து கொள்வது போன்று இங்கு நடந்து கொள்ள முடியாது. புத்திசாலித்தனமாகவும், புத்திக்கூர்மையுடனும் செயற்பட வேண்டிய கடப்பாடு அவர்களுக்கிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் பாராளுமன்றம் மோசமானதாகவே காணப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்டோர் வெட்கப்பட வேண்டும். தேசத்தின் மானம், மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, தமக்குக் கிடைக்காது என்பதை ஒன்றிணைந்த எதிரணியினர் முன்கூட்டியே அறிந்திருந்த நிலையிலும் இப்படி நாகரிகமற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.

அந்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்றம் விவாதிக்கும் போது மற்றொரு விடயத்தையும் இந்தச் சபை மறந்துவிடக் கூடாது என பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியதை ஒன்றிணைநத எதிரணியினரால் சீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆத்திரமுற்று சபையின் ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளனர்.

கேவலமானதும், வெட்கப்படவேண்டியதுமான நாகரிகமற்ற இந்தச் செயற்பாடுகளால் முழு நாட்டுக்குமே அபகீர்த்தி ஏற்பட்டிருக்கின்றது. இந்த அவமானத்தை துடைத்துச் சுத்தப்படுத்த முடியுமா? பாராளுமன்ற வரலாற்றில் மற்றொரு கறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபையின் வரலாற்றுப் புத்தகத்தில் மற்றொரு கறுப்புப் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு வரும் எந்தவொரு பிரதிநிதியும் முதலில் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பேணி நடப்பது மிக முக்கியமானதொன்றாகும். இந்தக் கைகலப்பில் தொடர்புபட்டவர்கள் புதியவர்கள் எனக்கொள்ள முடியாது. நாலுவிடயத்தையும் நன்கறிந்தவர்கள். இவர்களால் எப்படி ஒழுக்கத்தை மீறிச் செயற்பட முடிந்தது?எதிர்காலத்தில் இவர்களை நம்பி எப்படி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

பிரச்சினைகளைப் பேசித் தீர்க்குமிடமாகவே பாராளுமன்றம் காணப்படுகிறது. அந்தப் புனித இடத்தை சண்டைக்களமாக மாற்றிய செயலை மன்னிக்க முடியாது. ஒன்றிணைந்த பொது எதிரணியினர் சண்டைக்கென்றே கச்சை கட்டிக்கொண்டு அரசுடன் மோதி வருகின்றனர். மனச்சாட்சியை தொட்டுப்பார்த்து தாங்கள் செய்வது சரியானது தானா என்பதை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மற்றொரு கறுப்புப் பக்கம் இணைக்கப்படாதிருப்பதை ஒவ்வொரு உறுப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதையும் வலியுறுத்துகின்றோம்.


Add new comment

Or log in with...