Friday, March 29, 2024
Home » இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரை சுற்றிவளைப்பு; தொடர்ந்தும் மோதல்

இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரை சுற்றிவளைப்பு; தொடர்ந்தும் மோதல்

- அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் மீண்டும் இஸ்ரேல் விரைவு

by gayan
November 4, 2023 6:36 am 0 comment

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது நேற்றும் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தியதோடு அதன் தரைவழி படையினர் காசா நகரை சுற்றிவளைத்ததாக அறிவித்துள்ளது.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலை சென்றடைத்துள்ளார்.

இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசாவில் உணவு, எரிபொருள், நீர் மற்றும் மருந்துகள் தீர்ந்து வரும் சூழலில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கும் முயற்சியில் பிளிங்கன் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இஸ்ரேல் சென்றிருக்கும் பிளிங்கன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் எந்த ஒரு போர் நிறுத்தமும் தற்காலிகமானதும், உள்ளூர் மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதோடு அது இஸ்ரேலிய தற்பாதுகாப்பை நிறுத்துவதாக இருக்கக் கூடாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

“இடிந்த கட்டடங்களில் இருந்து பலஸ்தீன சிறுவர்கள் வெளியே எடுக்கப்படுவதை பார்க்கும்போது இஸ்ரேல் அல்லது வேற இடங்களில் சிறுவர்களை பார்க்கும்போது ஏற்படுத்துவது போன்ற மனத் தாக்கத்தையே என்னில் ஏற்படுத்தியது” என்று இஸ்ரேலுக்குப் புறப்படும் முன் பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“எனவே இது தொடர்பில் எமக்கு பொறுப்பு இருப்பதோடு நாம் அதனை செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு காசா மற்றும் காசா நகரில் பல இடங்களில் நேற்று மோதல் தீவிரம் அடைந்திருந்தது. காசாவின் மிகப்பெரிய மற்றும் அதிக சனநெரிசல் மிக்க காசா நகரை சுற்றிவளைத்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. இதன்போது ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு இடையே நேரடி மோதல் வெடித்துள்ளது.

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவத்துடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வான் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு குறிப்பாக சுமார் 14,000 பேர் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகருக்கு அருகில் உள்ள அல் குத்ஸ் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் தாக்குதல் தீவிரமடைந்திருந்தன. மருத்துமனைக்கு 500 மீற்றருக்கு அப்பால் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் இடையே கடும் மோதல் நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் காசாவின் முக்கிய வீதி மற்றும் கரையோர வீதி ஆகிய இரு வீதிகளையும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் மக்கள் தெற்கை நோக்கி வெளியேறுவது கடினமாகியுள்ளது. காசாவின் தென் பகுதியில் இருக்கும் மக்களுக்கே எகிப்தில் இருந்து வரும் உதவிகள் ஓரளவுக்கேனும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் வடக்கு காசாவில் இடம்பெறும் மோதல்களில் மேலும் நான்கு இஸ்ரேலிய துருப்புகளை கொன்றதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. பெயித் லஹியா சிறு நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள அல் அம்ரிகியாவில் போராளிகள் இஸ்ரேலிய துருப்புகள் மீது அதிரடி தாக்குதலை நடத்தி நான்கு படையினரை குறுகிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றதாக அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட “யாசின் 105” ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளுடன் பல இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் வாகங்களை இலக்கு வைத்து தமது போராளிகள் தாக்குதல்களை நடத்தியதாக அல் கஸ்ஸாம் படை முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் காசாவில் நீடிக்கும் தரைவழி மோதல்களில் கடந்த வியாழக்கிழமை மேலும் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இதன்படி அங்கு கொல்லப்பட்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் கூறப்படுவதை விடவும் இஸ்ரேலிய துருப்புகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ ஒபைதா தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார். “படைகளாகிய நீங்கள் கறுப்புப் பைகளிலேயே திரும்புவீர்கள்” என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் தொடர்பில் உளவுத் தகவல்களை சேகரிக்க காசாவுக்கு மேலால் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி சுமார் 1400 இஸ்ரேலியர்களை கொன்ற ஹமாஸ் போராளிகள் 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை பிடித்தனர். இவர்களில் நால்வரை விடுவித்தபோதும் மற்ற பணயக்கைதிகள் எங்கே என்பது உறுதி செய்யப்படவில்லை.

எனினும் காசா மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் பயணக்கைதிகள் பலரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு 9 ஆயிரத்தைத் தாண்டி அதிகரித்து வரும் நிலையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் அரபு நாடுகள் சில தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலுடன் அண்மையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியம் உடனடி போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயன்று வரும் நிலையில் மோதல் தீவிரம் அடைந்தால் அது பிராந்தியத்திற்கு பரவிவிடும் என்று எச்சரித்துள்ளது. எனினும் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

காசாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட காயமடைந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்கள் வெளியேறுவதற்காக எகிப்துடனான ராபா எல்லைக் கடலை மூன்றாவது நாளாக நேற்றும் திறக்கப்பட்டது. இந்த ராபா எல்லை வழியாக முந்தைய இரண்டு தினங்களில் 700க்கும் அதிகமான வெளிநாட்டு பிரஜைகள் காசாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 196 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது 16 வெவ்வேறு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதன்போது 3,826 சிறுவர்கள் மற்றும் 2,405 பெண்கள் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர். குறைந்தது 23,516 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் சுமார் 2,100 பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர். இதில் 1,200 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் புதையுண்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தவிர கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களில் குறைந்தது 141 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மேற்குக் கரையில் மாதந்தம் கொல்லப்படும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பாக உள்ளது.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நேற்று ஜும்மா தொழுகையின்போது இஸ்ரேலிய படை வழிபாட்டாளர்கள் மீது நடத்திய துப்பிக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT