அமெரிக்காவில் நிலச்சரிவில் 13 பேர் பலி: பலரும் காயம் | தினகரன்

அமெரிக்காவில் நிலச்சரிவில் 13 பேர் பலி: பலரும் காயம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடும் மழை, வெள்ளத்திற்கு மத்தியில் இடம்பெற்ற நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால் சுமார் 163 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நிலச்சரிவினால், சான்டா பார்பரா நகரின் கிழக்கு பகுதியில் 300 பேர் வரை சிக்கியுள்ளனர். கலிபோர்னியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் கிழக்கு சாண்டா பார்பராவிலுள்ள ரோமியோ கன்யோனில் செவ்வாய்கிழமை பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கலிபோர்னிய பொலிசார், குறித்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகள் பார்ப்பதற்கு முதலாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டது போல் காணப்படுகிறதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த மாதம் காட்டுத்தீ பரவியது.

இதனால் அதிகமான மரங்கள், மற்றும் வனப்பகுதிகள் அழிந்தன. இதனால் தண்ணீரை உறிஞ்ச வழி இல்லாததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையினால் மோண்டிசிட்டோவில் இடுப்பளவு சேற்றுநீர் உள்ளது என தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். சிறிய காரின் அளவுடைய பாறைகள் மலையில் இருந்து உருண்டு வந்து வீதிகளை மறித்துள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டின் இடிபாடுகளில் பல மணி நேரமாகச் சிக்கிக்கொண்டிருந்த 14 வயதான ஒரு சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்பு பணிக்கு உதவுவதற்காகப் பல விமானங்களை அமெரிக்காவின் கடலோர காவல்படை அனுப்பியுள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களாக இயற்கை அனர்த்தங்கள் பல ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...