Daily news நூற்றாண்டு கால சாதனைப் பயணம் | தினகரன்

Daily news நூற்றாண்டு கால சாதனைப் பயணம்

 

முயற்சியை மூலதனமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு துறையிலும் ‘நூறு வருடங்கள்’ என்பது உண்மையில் தனித்துவம்மிக்கதோர் சாதனையாகும். நீண்ட காலம் பயணித்து, தனது வாசகர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வசதிகளை வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவரும் பத்திரிகையொன்றுக்கு அது இரட்டிப்பான சாதனை எனலாம்.

பத்திரிகைத் துறையில் கால் பதித்து கடந்த 03 ஆம் திகதி தனது நூற்றாண்டு கால சேவையைப் பூர்த்திசெய்துள்ள எமது சகோதர ஆங்கில தினசரியான ‘டெய்லி நியூஸ்’ அனுகூலங்களும் இடைஞ்சல்களும் நிறைந்த அதன் நீண்ட கால பயணத்தின் பின்னர் அது சாதித்துள்ளவற்றை பெருமையுடன் திரும்பிப் பார்க்க முடிகின்றது. மேற்படி பத்திரிகை படிமுறை வளர்ச்சியடைந்த கால கட்டங்களின் போது அதனை இன்றுள்ள நிலைக்கு மாற்றியமைப்பதில் அரும்பாடுபட்ட அனைவரும் போற்றிப் புகழப்பட வேண்டியவர்களாவர்.

இலங்கைத் திருநாடு அமைதிப் பூங்காவாக விளங்கிய அந்த நாட்களில் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை பிரபல்யமாக விளங்கக் காரணமாக இருந்த துறைசார் பத்திரிகையாளர்களின் பேனாக்கள் மூலம், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்றிருந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த நிகழ்வுகள், கிளர்ச்சிகள், யுத்தங்கள் மற்றும் பட்டினிக் கொடுமைகள் ஆகியவற்றை 'டெய்லி நியூஸ்' மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மேற்படி பத்திரிகை பல்லாயிரக்கணக்கான தனது வாசக நெஞ்சங்களை யோசிக்க வைத்திடும் சேவைதனை வழங்குவதில் இத்தகு தரத்தினைப் பேணுவதற்கென தொடர்ந்தும் ஈடுபாடு காட்டி வருகின்றது. வாசகப் பெருமக்களிடமிருந்து அதற்குக் கிடைத்துவரும் பின்னூட்டலானது உண்மையில் தட்டிக்கொடுக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இத்தகைய அரும்பெரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ள 'டெய்லி நியூஸ்' பத்திரிகையின் தோற்றம், அதன் படிமுறை வளர்ச்சி என்பவற்றை நாம் ஆராய்ந்து பார்ப்போமாயின், அது எத்தகைய இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்து இமாலய சாதனை படைத்துள்ளதென்பதனை எம்மால் அறிந்து கொள்ள முடியும்.

சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர், இலங்கைத் திருநாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்திருந்த இளைஞரான டீ. ஆர். விஜேவர்தன தனது மனதில் தெளிவான இலக்கொன்றைக் கொண்டவராக தாயக மண்ணில் காலடி பதித்தார். அதாவது, பத்திரிகையொன்றுக்கு தான் சொந்தக்காரராக இருந்தால், அதற்கு ‘சிலோன் டெய்லி நியூஸ்’ என்று பெயரிடப் போவதாக அவர் தீர்மானித்திருந்தார்.

இலாபம் ஈட்டுவதனை நோக்கமாகக் கொண்டிராத அவர், வௌயீட்டகமொன்றை நிறுவினார். ஆயிரம் விழுதுகளை இறக்கி ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு நிழல் தரும் ஆலவிருட்சமாக கொழும்பு மாநகரின் மத்தியில் இன்று எழுந்து நிற்கும் கட்டடமே ‘லேக்ஹவுஸ்’ நிறுவனமாகும். ‘த சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகை 1918 ஆம் ஆண்டு ஜனவரி 03 ,ல் அச்சு வாகனம் ஏறியது. அந்தக் கணம் தொட்டு, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த முக்கியமான அனைத்து நிகழ்வுகளிலும் இன, மத பேதமற்ற வகையில் நாட்டில் வெகுஜன ஊடகப் பரப்பில் தனக்கென தனியானதோர் இடத்தைப் பேணி வந்துள்ளது.

முதலாம் உலகப் போரின் கெடுவிளைவுக் காலத்திலும் கடந்த 1915 இல் இலங்கையின் தேசபக்தர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் வாட்டி வதைக்கப்பட்ட இனக்கலவர காலப் பகுதியிலும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை உதயமானது குறிப்பிடத்தக்கது. காலனித்துவ ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையில் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டின் பொறுப்புவாய்ந்த செய்தி ஊடகமாகத் திகழ்ந்த ‘டெய்லி நியூஸ்’ மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஓங்கி ஒலிக்கும் ‘குரலாக’ தன்னை மாற்றிக் கொண்டது.

‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் வரலாறானது, இலங்கையின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததொன்றாகும். பிரசித்தி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பத்திரகையாளர்களின் அயராத உழைப்புடன் அன்றைய இலங்கையின் சுதந்திர சமூக வாழ்வுக்கு புதிய பரிமாணங்களை உருவாக்கிட ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகைக்கு இயலுமாக இருந்தது. டொனமூர் ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி நடாத்தப்பட்ட அரசியல் போராட்டத்தின் பின்புலத்தில் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை உயிர் நாடியாகத் திகழ்ந்ததெனலாம்.

ஜவகர்லால் நேரு மற்றும்கடந்த1926 இல் தற்செயலாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சரோஜினி நாயுடு போன்ற இந்திய சுந்திரப் போராட்ட வீரர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி இலங்கைக்கு சுயராஜ்ஜியம் அல்லது சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென முதன் முதலாக போர்க்கொடி உயர்த்திய குழுக்களில் கொழும்பு பாலிய முன்னணி ஏ. ஈ. குணசிங்க தலைமையிலான தொழிற்சங்க இயக்கம் மற்றும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இணைந்திருந்தன.

இலங்கை தேசிய காங்கிரஸின் தாயக சுதந்திரப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் ‘சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகை தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கி வந்தது. 1948 இல் இலங்கை முழு அளவிலான இறைமைகொண்ட சுதந்திர நாடாகியதுடன் டி. எஸ். சேனநாயக்க அதன் முதல் பிரதமராகப் பதவியேற்றார். இத்தகைய அனைத்து நிகழ்வுகளும் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கான நிலையான சாட்சியமொன்றாக ‘த சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் காலக்கிரமமாகத் தொகுத்தளிக்கப்பட்டிருந்தன. 1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பாட்டாளி வர்க்கத்தினரின் ஆதரவுடன் ஆட்சியமைத்த அரசியல் புரட்சியாய் இருக்கட்டும். 1962 ,ல் நிகழ்ந்த சதிப்புரட்சியாய் இருக்கட்டும். 1971 இல் நிகழ்ந்த ஜே. வி. பி. தலைமையிலான கிளர்ச்சியாக இருக்கட்டும், அவை அனைத்தும் ‘சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் பதிவாகியிருந்தமை கவனிக்கத்தக்கது. அத்துடன், சந்திரனில் முதலாவது மனிதனின் காலடி பதித்தல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எவ். கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற இன்னோரன்ன முக்கியமான வெளிநாட்டு நிகழ்வுகளுக்கும் ‘டெய்லி நியூஸ்’ தனது பக்கங்களில் உரிய இடம் கொடுத்திருந்தது.

கடந்த 1964 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் மிகக்கொடிய பத்திரிகைச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவென பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையைத் தோற்கடிப்பதில் ‘த சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகை முன்னணி வகிபாகத்தைக் கொண்டிருந்ததும், அதன் விளைவாக மேற்படி அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகை இதுவரையில் பிரசித்தி பெற்ற 27 ஆசிரியர்களின் அயராத உழைப்பினால் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் தகவல் தாகத்தை தணித்து வந்துள்ளது. அதன் முதலாவது ஆசிரியராக எஸ். ஜே. கே. குரோதர் (1919 – 1931) அரும்பணியாற்றினார்.

இலங்கையின் முதல்தர ஆங்கில நாளிதழான ‘டெய்லி நியூஸ்’ கடந்த 1919- 2015 பெப்ரவரி வரையிலான காலப் பகுதியில் பத்திரிகை உலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த 27 ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையில் வீறு நடைபோட்டு வந்தது. தற்போதைய பிரதம ஆசிரியர் லலித் அழகக்கோன் தலைமையிலான வினைத்திறனமிக்க ஊடகவியலாளர்களின் கடின உழைப்பின் பயனாக ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை பல்சுவை அம்சங்களுடன் பவனி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை, முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பிதழுக்கு ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்தலைவர் கிரிசாந்த குரே வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில், லேக்ஹவுஸ் நிறுவன தாபகர் டி. ஆர். விஜேவர்தன அவர்களின் அயரா முயற்சியினால் ‘சிலோன் டெய்லி நியூஸ்’ பத்திரிகை உதயமானதெனலாம். ‘இவரின் இரத்தக் குழாயில் இரத்தத்திற்குப் பதிலாக ‘மை’ தான் ஓடியதென இன்று கூட நாட்டு மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். அதுவே டி.ஆர். விஜேவர்தனவின் இரத்தம், அவரது ‘மை’ அவரது சிந்தனை மற்றும் நோக்கு என்பதாகும். இதனையே நாம் இன்று ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்தின் கொடிக்கப்பல் பத்திரிகையாக வீறுநடை போட்டுவரும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் 100 ஆவது ஆண்டுப் பூர்த்தியன்று கொண்டாடுகின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையும் அதன் வெளியீட்டாளரும் இருண்ட நாட்களைப் பார்த்துள்ள அதேவேளையில், அவை நாட்டு மக்களின் நல்லதுக்காக குரலெழுப்பிய நாட்கள் மறக்கப்பட முடியாதவை. நாட்டின் ஒளிமயமான மற்றும் இருண்ட காலத்தின் ஊடாக, ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை மீது அன்று அடி விழுந்தது. ‘டெய்லி நியூஸ்’- தோல்வி மேல் தோல்வியை அப்போது எதிர்கொண்டது. அதன் பயண வழியில் புதிய நூற்றாண்டு மற்றும் புதிய காலங்கள் உருவாகுமென்ற அசையாத நம்பிக்கையில் பலம் பெற்று அனைத்து சவால்களையும் முறியடிக்கத் தயாராகியது. 100 வயதை எட்டியுள்ள ‘டெய்லி நியூஸ்’ இன்றும் இளமைக் கோலத்துடனேயே வீறுநடை போட்டு வருகிறதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழில்:
இரா. இராஜேஸ்வரன்


Add new comment

Or log in with...