Thursday, March 28, 2024
Home » “இது இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியல்ல”

“இது இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியல்ல”

நவீட் நவாஸ்

by gayan
November 5, 2023 6:11 am 0 comment

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மோசமான ஆட்டம் பரந்த அளவில் இலங்கைக் கிரிக்கெட்டின் வீழ்ச்சியல்லவென்று இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை குழாம் இன்னும் இளமையாக இருப்பதாகவும் அவர்களுக்கு மேலும் உலகக் கிண்ணங்களில் ஆட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு எதிராக 302 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற நவீட் நவாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடிய இலங்கை அணியில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நான்கு வீரர்களே இடம்பெற்றிருந்தனர். இவர்களிலும் கசுன் ராஜித்த (30) மற்றும் துஷ்மன்த சமீர (31) இருவருக்கும் மற்றுமொரு உலகக் கிண்ண போட்டியில் ஆட முடியுமாக உள்ளது.

“உண்மையில் இது கவலைக்குரிய விடயம்தான், என்றாலும் இது இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியாக நான் பார்க்கவில்லை” என்றார் நவாஸ். “எம்மிடம் இளம் வீரர்கள் இருக்கிறார்கள், ஒருசில வீரர்களே 100க்கும் அதிகமான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளனர். எனவே நாம் அணியை கட்டியெழுப்பும் தருணத்தில் இருக்கிறோம். சில வீரர்கள் தொடர்ந்து கற்று வருகிறார்கள்” என்றார்.

 

2007 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அணி உலகக் கிரிக்கெட் உச்சத்தை தொட்டிருந்ததோடு அந்தக் காலப்பகுதியில் இலங்கை அணி ஐந்து உலகத் தொடர்களில் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அதில் பங்களாதேஷில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தையும் அது வென்றது. தவிர அந்த அணி மேலும் இரு பிரதான தொடர்களின் அரையிறுதி வரை முன்னேறியது. 2015 தொடக்கம் இலங்கை அணி ஏழு முயற்சிகளில் உலகத் தொடர்களில் அரையிறுதி ஒன்றுக்குக் கூட முன்னேறவில்லை. அவர்கள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுவதற்கு தகுதிகாண் போட்டிகளில் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

“சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு (2025) தகுதி பெறுவதற்கு உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பிடிப்பது தான் முக்கியமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அணியை ஊக்குவித்து அவர்களை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது அவசியமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

ஜூனில் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆடும்போதும் இதே பிரச்சினையை நாம் சந்தித்தோம்.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக நாம் சிம்பாப்வே சென்றபோது எந்த உத்தரவாதமும் இருக்கவில்லை” என்றும் நவீட் நவாஸ் கூறினார்.

இந்தியாவின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க துடுப்பாட்ட வீரர்களை தயார்படுத்தும் பொறுப்பு பயிற்சியாளர்களுக்கு இருந்தபோதும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அதனை செயற்படுத்தவில்லை என்கிறார் நவாஸ். இலங்கை அணி இந்த ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நூறுக்கும் குறைவான ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இது மூன்றாவது முறையாகும்.

“பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார்கள். அதற்கான பாராட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “ஆனால் அது எப்படி நடந்தது என்பதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். நெருக்கடியான சந்தர்ப்பங்களில், ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் கையாள்வதற்கும் யாரும் முன்வரவில்லை.

அஞ்சலோ (மத்தியூஸ்) அதனை செய்ய முயன்றார், ஆனால் மற்றவர்கள் தமது விக்கெட்டை பறிகொடுத்தார்கள். இந்தத் தொடரில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாம் 300, 340 ஓட்டங்களை பெற்றோம். ஆனால் எமது போராட்ட குணம் இன்று குறைவாக இருந்தது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT