ஜனாதிபதியின் சந்தேகத்தை தீர்க்க ஐவரடங்கிய நீதிபதி குழு | தினகரன்

ஜனாதிபதியின் சந்தேகத்தை தீர்க்க ஐவரடங்கிய நீதிபதி குழு

 

2021 வரை தனக்கு ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கு ஏதேனும் தடைகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு, உச்ச நீதிமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோள் தொடர்பில் ஆராய 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நாளைய தினம் (10) இக்குழு ஆராயவுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஈவா வனசுந்தர, புவனகே அலுவிஹார, கே.ரி. சித்ரசிறி, சிசிர டி அப்ரூ ஆகியோரே, இந்த ஐந்து உறுப்பினர்களை கொண்ட உச்சநீதி மன்ற குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தா அல்லது ஆறா என்பது தொடர்பில் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14 அல்லது அதற்கு முன்னர் அறியத்தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி ஒருவரது பதவிக் காலம் ஆறு வருட காலமாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யாப்பிற்கு அமைய பதவியேற்றார்.
ஆயினும் தற்போதைய அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

எனவே, குறித்த திருத்தத்தை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக இருந்த, தனது ஜனாதிபதி பதவிக் காலம் எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பில் அறிவதற்காக குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...