போதைப் பொருளை ஒழிப்பதில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை | தினகரன்

போதைப் பொருளை ஒழிப்பதில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை

 

இன்றைய காலகட்டத்தில் இலங்கை முகம் கொடுத்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருட்கள் ஆகும். இவற்றின் கடத்தல், விற்பனை, விநியோகம் மற்றும் பாவனை காரணமாக நாடு பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அவற்றில் சமூக, பொருளாதார, ஆரோக்கிய ரீதியிலான பாதிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

அதனால் இப்போதைப்பொருட்களின் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விஷேட கவனம் செலுத்தியுள்ள தற்போதைய அரசாங்கம், அதற்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகின்றது.இதன் நிமித்தம் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அடிமட்டம் முதல் பரந்தடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இருந்தும் சட்டவிரோத போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்து சேரவே செய்கின்றன. அதன் வருகையில் அதிகரிப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்நாடு நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதும், யுத்தம் இல்லாத சூழலும் சாதகமானதாக அமைந்துள்ளது.

இவ்வாறு வந்து சேரும் போதைப்பொருட்களின் கடத்தலும், விற்பனையும், விநியோகமும், பாவனையும் கிராமம், நகரம் என்ற வேறுபாடுகள் இன்றி பட்டிதொட்டியெல்லாம் வியாபித்துள்ளது. அதனால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையும், அதற்கு பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியமும் பரவலாக உணரப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தனர். அச்சமயம் பிரதமர், 'கிராம மட்டங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது. இது துரதிர்ஷ்டகரமான நிலைமையாகும். தற்போது போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் போராடி வரும் நிலையில், போதைப்பொருளுக்கு எதிரான தேசிய இயக்கமொன்றை இளைஞர் பாராளுமன்றம் உருவாக்க முன்வர வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த அறிவுரையும், அழைப்பும் போதைப்பொருள் எவ்வளவு தூரம் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது தான் உண்மை நிலை.

முன்பு இந்நாட்டினர் கேள்விப்பட்டிராத போதைப்பொருட்களைக் கூட இந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அண்மைக் காலத்தில் கைப்பற்றி உள்ளனர். குறிப்பாக கெனபிஸ், ஹசீஸ், ஹெரொய்ன், கொக்கையன் மாத்திரமல்லாமல் கேரளா கஞ்சா, சம்பியா நாட்டில் விளைவிக்கப்படும் கஞ்சா செடி போன்ற போதைப்பொருள், மாவா, போதை தரும் பாக்குகள், மாத்திரைகள் எனப் பல வகையான போதை தரும் பொருட்கள் அவற்றில் அடங்கும்.

இப்போதைப்பொருட்களை இலங்கைக்குள் கடத்தி வந்து, அவற்றை இந்நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு கடத்திச் செல்கின்றனரா? இச்செயற்பாட்டுக்காக இந்நாடு தளமாகப் பாவிக்கப்படுகின்றனவா? என்றவாறான சந்தேகங்களும் பாதுகாப்புத் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் போதைப்பொருட்களின் வருகையில் அண்மைக் காலத்தில் அந்தளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையில் இப்போதைப்பொருட்களைப் பாவிப்போரினதும், விற்பனை செய்வோரினதும், கடத்துவோரினதும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பேராசியர் ரவிந்திர பெர்னாண்டோவின் தகவல்களின்படி 'இந்நாட்டில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும், ஐம்பதாயிரம் பேர் ஹெரோய்ன் பாவனையாளர்களாகவும் உள்ளனர். இதற்கு போதைப்பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதே அடிப்படைக் காரணமாகும்.

இதன் விளைவாக பாடசாலை மாணவர்கள் கூட இப்​ேபாதைப்பொருட்களைப் பாவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட இடங்கள் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் மாணவர்கள் வகுப்புக்கு வருகை தந்திருந்தமை வகுப்பாசிரியர்களால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டமையும் தெரிந்ததே.

இவ்வாறு இந்நாட்டில் போதைப்பொருள் பாவனை, கடத்தல், விற்பனை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினர் கடுமையாக உழைத்து வருகின்ற போதிலும், சமூகத்தினுள் பரவலடைந்துள்ள இப்போதைப்பொருட்களின் விற்பனையும், பாவனையும், கடத்தலும் பெரும்பாலும் வளமான வயதினர் மத்தியில் தான் அதிகரித்துள்ளன.இது அவர்களது உடலுழைப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்துவதோடு பொருளாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகவே உள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. இதன் பாரதூரத்தை உணர்த்தும் வகையில்தான் பிரதமர் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். இது காலத்திற்கு தேவையான அழைப்பு என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

ஆகவே போதைப்பொருள் பாவனை, கடத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்தவென அரசாங்கம் போராடி வரும் இச்சந்தர்ப்பத்தில் பிரதமரின் யோசனையும் அழைப்பும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பக்கத் துணையாகவே அமையும். அதனால் போதைப்பொருள் அற்ற இலங்கையை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் மாத்திரமல்லாமல் மதவழிபாட்டு தளங்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும். அதனைத் தம் பொறுப்பாகவும், கடமையாகவும் கருதி செயற்பட வேண்டும். அது காலத்தின் அவசியத் தேவையாக விளங்குகின்றது. அதன் மூலம் தான் நாட்டில் வளமான எதிர்காலப் பரம்பரையைக் கட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...