Home » மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்

மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்றுவதே நோக்கம். ‘நாம் 200’ நிகழ்வில் ஜனாதிபதி

by gayan
November 4, 2023 6:04 am 0 comment

இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதே நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாரதத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ‘நாம் 200’ எனும் தேசிய நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால் இன்றைய நிகழ்வைக் கூட சாதகமாக நடத்தியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கும் என்றும், அவர்களுக்கான காணி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன,

நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை அவர்களே வழங்கியுள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள். தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். மலையக மக்களின் கஷ்டத்தையும் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10,000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது. உங்களுக்கு கல்வி,சுகாதார,மருத்துவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான்

எதற்காக இந்த நிகழ்வு? எதற்காக இந்த அங்கீகாரம் என நிறையப் பேர் வினவுகிறார்கள். காடுகளை தோட்டங்களாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் கொடுப்பதற்குப் பங்களித்த மக்களை நாம் இன்று அங்கீகரிக்கின்றோம்.

இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளில் 30 வீதமானவர்கள் மாத்திரம் தான் கல்வி கற்கின்றனர். வெறும் 40 சதவீதத்தினருக்குத் தான் சுகாதாரம் கிடைக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசியல் ரீதியான தீர்மானங்களை விட உண்மையான மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரிய பங்களிப்பை செய்கிறார். அவரால் 2013 இல் இருந்து இன்று வரை 14 ஆயிரம் வீட்டுத் திட்டம் கிடைத்தது. இந்திய அரசின் ஊடாக வேறு வேலைத்திட்டங்களும் கிடைத்தன.

நாம் ஒன்றும் தாழ்ந்தவர்கள் கிடையாது. இன்று ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர். மலையகத் தமிழர்களின் முழுமையான தொகை 13 இலட்சமாக உள்ளது. இருப்பினும் மேற்படி எண்ணிக்கையிலான தொழிலாளர்களே 13 இலட்சம் பேருடைய அடையாளமாக விளங்குகின்றனர்.

எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர். 200 வருடங்கள் நாம் கஷ்டப்பட்டுளோம்.

மலையக சமூகத்தை வைத்து வாக்கு வேட்டை தான் செய்துள்ளார்களே தவிர இந்த சமூகத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவர சரியான திட்டம் யாரும் கொண்டுவரவில்லை. நமது அமைச்சின் ஊடாக வழமையாக 3000 மில்லியன் கிடைக்கும் இம்முறை 14 மில்லியன் கிடைத்துள்ளது.

10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம். நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்ற இந்த தேசிய நிகழ்வில் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி இந்நிகழ்வில் இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழகத்தின் நிதி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை, கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் கலாநிதி ராம் மாதவ் உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

அத்துடன் இந்நிகழ்வில் 5,000ற்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்ததோடு, தமிழ் சம்பிரதாய முறைமைகளுக்கமைய ஜனாதிபதிக்கு கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இதன்போது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

மலையகத்தின் எழுச்சிக்காக பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய அன்பளிப்பான 10,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் மலையகத்தின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து காணொளியூடாக திறந்து வைத்தனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மண்டபமும் கணினிக் கூடமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

இதன்போது, மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், மலையக பாடசாலைகளுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மலையக மண்ணின் தொன்மைவாய்ந்த கலைகளையும் பாரம்பரியத்தையும் உலகறியச் செய்யும் நோக்கில், பல கிராமியக் கலை வடிவங்களும் ‘நாம் 200’ தேசிய நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT