அ.தி.மு.கவைப் போன்று தி.மு.கவையும் அழிப்பதே இலக்கு! | தினகரன்

அ.தி.மு.கவைப் போன்று தி.மு.கவையும் அழிப்பதே இலக்கு!

 

ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா?' என்ற தமிழக மக்களின் 20 ஆண்டு கால கேள்விக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியன்று தனது அழுத்தமான பதிலைத் தெரிவித்து விட்டார் ரஜினிகாந்த்! இப்போது, 'ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தி.மு.க-வை அழிப்பதற்காகத்தான்' என்ற சந்தேகக் கேள்வி தமிழக அரசியல் களத்தில் பரவலாக வலுத்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிப்பதற்காக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று திரும்பிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, "தி.மு.க-வுக்கு உறுதுணையாக, பக்கபலமாக ம.தி.மு.க என்றைக்கும் செயல்படும் என்பதை கருணாநிதியிடம் தெரிவித்தேன். நான் சொல்வது நன்றாகக் கேட்கிறதா என்று என் ஆரூயிர்த் தளபதி ஸ்டாலின், கருணாநிதியிடம் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக கருணாநிதி, மகிழ்ச்சியோடு தலையசைத்தார். வேறு எந்த அரசியலும் இங்கே பேச விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்த வைகோ, "கடந்த 2 மாத காலமாக ஒவ்வொரு நாளும் என் கனவில் கலைஞர் வந்தார். இன்று அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். கலைஞர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். என்னிடம் அவர் பேச முற்பட்டார். உணவுக் குழாய் பொருத்தப்பட்டிருந்ததால் பேச முடியவில்லை. நான் போய்விட்டு அப்புறம் வருவதாகக் கூறியதும், என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற வைகோ_ - கருணாநிதி இடையிலான முதல் சந்திப்புக்கும் சில மாத இடைவெளிக்குப் பிந்திய இப்போதைய சந்திப்புக்கும் இடையில் அரசியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் வெளிப்படையாக நிகழ்ந்து விடவில்லை. ஆனால், 'தி.மு.க வெற்றி பெறும்' என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே நகர் தேர்தல் நி​ைலவரம், தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துச் சென்றுள்ளது. இதன் விளைவாக டி.டி.வி தினகரன், தமிழக சட்டசபைக்குள் புதிய உறுப்பினராக அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களைக் கைப்பற்றி விட்ட பி.ஜே.பி-க்கு தமிழ்நாட்டில் மட்டும், காலூன்றக் கூட இடம் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், 'ஆன்மிக அரசியல்' என்ற கோஷத்தோடு அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைக்கும் ரஜினியின் அரசியல் பிரவேசம், முழுக்க முழுக்க பி.ஜே.பி-யின் பின்னணியிலேயே இயக்கப்படுகிறது என்பது தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் திராவிட இயக்கத்தவர்களின் சந்தேகமாக முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப வீரபாண்டியன், "பகவத் கீதையைச் சொல்லி ரஜினிகாந்த் தன் உரையைத் தொடங்கியிருப்பதுவும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தோ அல்லது மத்திய அரசு குறித்தோ பேசாமல் இருப்பதுவும் ஆன்மிக அரசியல் செய்யவிருப்பதாக அவர் சொல்வதும்... இயல்பான ஐயம் அல்லது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் மறைமுக நிழலாக பி.ஜே.பி இருக்கிறதோ என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது.

எப்போது வரும் என்பது தெரியாத சூழலில் இருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்திருக்கும் ரஜினி, 2019-இல் திட்டவட்டமாக வரும் என்ற நிலையில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மட்டும் உறுதியாக எதுவும் பேசாமல் இருப்பது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று தனது சந்தேகங்களுக்கு ஆதாரம் சேர்க்கிறார். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே ரஜினி எதிர்ப்பாளர்கள் அனைவரும் சந்தேகம் கிளப்பி வரும் சூழலில், வைகோ_ - கருணாநிதியின் இரண்டாவது சந்திப்பும் 'தி.மு.க-வுக்கு உறுதுணையாக - பக்கபலமாக ம.தி.மு.க எப்போதும் துணை நிற்கும்' என்ற வைகோவின் உறுதியான வார்த்தைகளும் தமிழக அரசியல் களத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

சந்திப்பு குறித்துப் பேசும் ம.தி.மு.க ஆதரவாளர்கள், "1993-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது, தமிழகத்தின் பெரும்பான்மையான இளைஞர்களும் பொதுமக்களும் வைகோவுக்கு ஆதரவாக நின்றது உண்மைதான். ஆனால், அதன்பிறகான தேர்தல்களில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வோடு வைகோ கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டதும் உண்மைதான். அப்போதெல்லாம், வைகோவின் அரசியல், 'சந்தர்ப்பவாதம்' என்ற ரீதியில் அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அரசியல் ஒரு விநோத விளையாட்டு. ஆண்டாண்டு காலமாக எதிரெதிர் துருவமாக நின்று கொண்டிருப்பவர்களும் கூட கைகோர்த்துப் பயணிக்கும் விந்தையும் தேவையும் உள்ள களமும் இதே அரசியல்தான். காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இங்கே சமரசங்களையும் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது" என்று விமர்சனம் செய்கின்றனர். அடிப்படைக் கொள்கைகளைப் பலியிட்டுவிடாமல், சுயநலத்துக்குத் துளியும் இடம் இன்றிச் செயல்படும் போது, சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் சில முடிவுகளை மேற்கொள்ள நேரிடுகின்றது. அந்தவரிசையில்தான், தி.மு.க _- ம.தி.மு.க கூட்டணி நட்பையும் பார்க்கவேண்டும்.

ஏற்கெனவே, அ.தி.மு.க கூடாரம் கலகலத்து விட்டது. அடுத்த பலமிக்க கட்சியான தி.மு.க-வுக்கும், 'ரஜினி வரவு' கடுமையான சவாலாக இருக்கப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு தோள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ம.தி.மு.க போன்ற திராவிட இயக்கச் சிந்தனை உள்ள கட்சிகளுக்கு இருக்கிறது.

நடந்து முடிந்த இடைத்தேர்தல் தோல்வியைப் பொதுத்தேர்தலுக்கான உதாரணமாகப் பார்க்க முடியாது; அப்படிப் பார்க்கவும் கூடாது. தமிழக மக்களின் மனநிலை தி.மு.க-வுக்கு ஆதரவாக இருப்பதையறிந்து கொண்டுதான் ஆதிக்க சக்திகள் தங்களது சதி வேலைகளை பின்னத் தொடங்கியிருக்கின்றன. அவர்களது இந்த முயற்சியைப் பலவீனமாக்கும் முயற்சியில் ம.தி.மு.க தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இவ்வாறு கூறுகிறார்கள் வைகோ ஆதரவாளர்கள்.

 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...