இளைஞர் மாதிரி ஐ.நா மாநாடு முதன்முறையாக புத்தளத்தில் | தினகரன்

இளைஞர் மாதிரி ஐ.நா மாநாடு முதன்முறையாக புத்தளத்தில்

 

ஐக்கிய நாடுகள் சபை குறித்த அறிவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும், ஐ. நா சபையில் பின்பற்றப்படும் சபை நடவடிக்கை முறைகளை அறிமுகம் செய்து அதற்கு மாணவர்களை தயார்படுத்தவுமென 'இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சித் திட்டம்' வருடா வருடம் உலகெங்கிலுமுள்ள நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் இலங்கையில் கடந்த 10 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்நாட்டில் முதற் தடவையாக கொழும்புக்கு வெளியே வட மேல் மாகாணத்திலுள்ள புத்தளத்தில் புத்தளம் இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை_ - 2017 (Puttalam Youth Model United Nations20170 நடாத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் 31 ஆம் திகதிகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் புத்தளம் தொகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பான சர்வதேச நிகழ்ச்சித் திட்டமொன்று புத்தளத்தில் நடத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதனை புத்தளத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில இளைஞர் யுவதிகள் முன்னின்று புத்தளம் வளங்களை மாத்திரம் பயன்படுத்தி வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் இறுதி நாள் பரிசளிப்பு வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி (Resident Coordinator) திருமதி உனா மேக்குயூலி(Una McCauley) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இது விஷேட அம்சமாகும். புத்தளத்தில் நடைபெற்ற இவ்வாறான ஒரு நிகழ்வில் இவர் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறையாகும். இது புத்தளம் வரலாற்றின் ஒரு முக்கிய ஒரு நாளாகும்.

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை – Model United Nations (MUN) என்பது ஒரு சர்வதேச மட்டத்தில் பரவலாக நடாத்தப்படும் ஒரு மாநாடு ஆகும். ஐக்கிய நாடுகள் சபை பற்றிய அறிவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும் மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் பின்பற்றப்படும் சபை நடவடிக்கை முறைகளை அறிமுகம் செய்து அதற்கு மாணவர்களை தயார்படுத்தவுமே இவ்வாறான மாதிரி ஐக்கிய நாடுகள் சபைகள் நடத்தப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1945 இல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த பின்னர் முதலாவது மாதிரி ஐ.நா. சபை மாநாடு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பலநாடுகளில் இந்த மாதிரி ஐ. நா சபை மாநாடு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் நடத்தப்பட்டது. இன்று உலகில் மா. ஐ. நாடுகள் சபை மாநாடு என்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் பங்குகொள்ளும் மாணவர்கள் உண்மையான ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை பிரதிநித்துவபடுத்தும் பிரதிநிதிகளாக (Delegates) கலந்து கொள்வர். ஐ.நா வில் பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு சபை (Security Council), மனித உரிமைக்கான ஐ. நா பேரவை (UNHRC) மற்றும் உலக சுகாதார சபை (World Health Assembly) என எவ்வாறு பல குழுக்கள் இருக்கின்றனவோ அதேவகையான குழுக்கள் அடிப்படையில் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் உலகில் உள்ள பொதுவான மற்றும் நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து, விவாதித்து அவற்றுக்கான சிறந்த தீர்வை முன்வைப்பர்.

இதன் மூலம் மாணவர்களது பேச்சுச் திறன், விவாதிக்கும் திறன், குழுவாக செயற்படல் என்பன விருத்தியடைகின்றன. மேலும் இவ்வாறு மாணவர்கள் சர்வதேச விடயங்களைப் பற்றி கலந்துரையாடும் போது சர்வதேச தொடர்புகள் மற்றும் இராஜதந்திரம் என்பனவற்றுக்கு பழக்கப்படுகின்றனர். இவை மாணவர்களின் தேடலை அதிகரித்து சிறந்த இராஜதந்திரிகளாக மாற வழிவகுக்கின்றன.

இலங்கையிலும் கடந்த காலங்களில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைகள் சில தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அவை ஸ்ரீலங்கா மா. ஐ. நாடுகள் சபை (SLMUN) மற்றும் தேசிய இளைஞர் மா. ஐ. நாடுகள் சபை (NYMUN) என்பன ஆகும்.

எனினும் இலங்கையில் மா. ஐ. நாடுகள் சபை மாநாடு என்பது கொழும்பு மற்றும் கொழும்பை அண்டி வசிப்போருக்கு மாத்திரம் மட்டுபடுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. இந்நிலைமையை மாற்ற கொழும்பில் நடைபெற்ற SLMUN மற்றும் NYMUN களில் பங்கு கொண்ட புத்தளத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் முன்வந்து புத்தளத்திலும் அவ்வாறான மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு ஒன்றை முதன் முறையாக நடத்த எடுத்த முயற்சி இறுதியில் எதிர்பார்த்ததை விட அதிகளவு வெற்றியைக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

கடந்த காலங்களில் Silent Volunteers மூலம் புத்தளத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில இளைஞர், யுவதிகளுக்கு இவ்வாறான தேசிய மட்ட மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவற்றில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறான மாநாட்டை புத்தளத்திலும் நடத்த திட்டமிட்டனர். சர்வதேச ஒழுங்குகளை பின்பற்றி இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த வருட இறுதி இரு தினங்களில் பு த்தளம் சாஹிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் பொதுச்செயலாளராக ஹனஸ் மொஹிடீன் ஹனான் அஹ்மதும், தலைவராக ஜவ்பர் மரிக்கார் சஜ்ஜாத் மற்றும் உதவி பொது செயாலராக பாத்திமா ருஹ்ஷத்ராபி ஆகியோரும் என 17 பேர் கொண்ட நிர்வாக குழுவே இம்மாநாட்டை சிறப்பாக நடாத்தினர்.

புத்தளம் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கு கொண்டனர்.

இம்மாநாட்டின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கு கொண்ட இலங்கைக்கான ஐ. நா வதிவிடப் பிரதிநிதி திருமதி உனா மேக்குயூலிகூறுகையில், “கொழுப்பு மற்றும் அண்டிய பிரதேசம் தவிர்ந்த வெளி மாவட்டங்களிலும் இவ்வாறு மாதிரி ஐ. நா மாநாடு நடைபெறுவது இதுவேமுதல் தடவையாகும், இவ்வாறு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்வந்த இந்த இளைஞர் குழுவினர் கட்டாயம் பராட்டப்பட வேண்டியவர்கள். இது புத்தளத்தில் மா. ஐ. நாடுகள் சபை மாநாடு இற்கான சிறந்த அத்திவாரம், இதை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கான உதவியையும், வழிகாட்டல்களையும் இலங்கை ஐ. நா அலுவலகம் தர தாயராக உள்ளது” எனக் குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் விவாதிப்பதை பார்த்த அவர், அவர்களின் திறமையை கண்டு புத்தளத்திலும் இவ்வாறான திறமையானவர்கள் உள்ளார்கள் என்று கூறி வியந்தார்.

பொதுச்செயலாளர் கூறுகையில், “இதுவெறும் ஆரம்பம் மட்டுமே, இதைத் தொடந்து ஒவ்வொரு வருடமும் நடத்துவதே எமது இலக்கு ஆகும், சிறப்பம்சம் என்னவென்றால் முதல் தடவையே நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு திருப்தி எமக்கு கிடைத்துள்ளது. புதிய விடயமாக இருந்தாலும் இம்மாணவர்கள் குறுகிய காலத்திற்குள் அவற்றை விளங்கி, தங்களை தயார்படுத்தி சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். எம்மவர்களிலும் இவ்வாறான திறமையுடையவர்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்களுக்கான சந்தர்ப்பங்கள், களங்கள் அமைத்து கொடுக்கபடாமை அல்லது அதை தேடுவதற்கு வழிகாட்டல்கள் வழங்கபடாமை இவர்கள் வெளிக்கொனரபடாமைக்கான காரணம் ஆகும்" எனத் தெரிவித்தார்.

மேலும் இம்மாநாட்டுக்காக பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழு ழுசார்பாக நன்றியைத் தெர்வித்து கொள்கின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை

ஊடகப் பிரிவு 


Add new comment

Or log in with...