வேட்பாளர்கள் பட்டியல் அச்சிட தாமதம்; தபால் வாக்கு விநியோகம் தாமதம் | தினகரன்


வேட்பாளர்கள் பட்டியல் அச்சிட தாமதம்; தபால் வாக்கு விநியோகம் தாமதம்

 

நாளைய தினம் (11) இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

தபால் மூல வாக்குகளுடன், வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பெயர் பட்டியலை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக குறித்த பணிகள் தாமதமடைந்ததால் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க தகுதியானோருக்கான வாக்குகளின் விநியோகம் நாளை (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 5 இலட்சத்து 60,536 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு, வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி 22 மற்றும் 25 - 26 ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளது.

  • தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களில் - ஜனவரி 22
  • ஏனைய அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் - ஜனவரி 25, 26

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 1 கோடி 57 இலட்சத்து 68,814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு, அவர்களுக்கான வாக்காளர் அட்டைகள், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, ஜனவரி 19 ஆம் திகதி அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

வாக்காளர் அட்டைகள், எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, ஜனவரி 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வாக்களிப்பு விநியோக விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 03 ஆம் திகதி வரை வாக்களர் அட்டைகள் கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...