Home » இலங்கைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு

இலங்கைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு

by gayan
November 4, 2023 9:42 am 0 comment

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று முதல் அணியாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் இலங்கை அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்தபோதும், அது உத்தியோகபூர்வமாக தொடர்ந்தும் அரையிறுதிக்கான போட்டியில் உள்ளது.

இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்திருப்பதால் அந்த அணியின் நிகர ஓட்ட விகிதம் –0.275 இல் இருந்து –0.653 வரை சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டினால் அதிகபட்சமாக எட்டு புள்ளிகளை பெறலாம். எனவே மற்ற போட்களின் முடிவுகள் தமக்கு சாதகமாக இருந்தாலே இலங்கை அணிக்கு அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

அதாவது மொத்தம் ஆறு அணிகள் மொத்தமாக எட்டுப் புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்ய வாய்ப்பு தொடர்ந்தும் இருக்கிறது. இந்த ஆறு அணிகளும் அரையிறுதிக்கான இரண்டு இடங்களுக்கு போட்டியிட முடியும். இதன்போது நிகர ஓட்ட விகிதம் முக்கிய பங்கு வகிக்கும். அப்படி நிகழ்ந்தால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் நிகர ஓட்ட விகிதத்தில் இலங்கை போட்டியிட வேண்டி இருக்கும். இதில் ஒர் அணியேனும் பத்துப் புள்ளிகளுக்கு முன்னேறினால் இலங்கையின் வாய்ப்பு மேலும் கடினமாகிவிடும்.

அதாவது, இலங்கை அணி தனது கடைசி இரு போட்டிகளிலும் 300 ஓட்டங்களை பெற்று அந்த இரண்டு போட்டிகளில் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட விதம் –0.023 என முன்னேற்றம் காண முடியும். எனவே இலங்கைக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தபோதும் நடைமுறையில் சாத்தியம் குறைவாக உள்ளது.

மறுபுறம் ஐந்து அணிகள் மொத்தம் பத்துப் புள்ளிகளுடன் லீக் போட்டிகளை நிறைவு செய்ய சாத்தியம் இருப்பதால் அரையிறுதி வாய்ப்பில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை நிலவி வருகிறது.

இதன்போது இந்தியாவுடன் 12 புள்ளிகளுடன் இருக்கும் தென்னாபிரிக்காவும் அரையிறுதியை உறுதி செய்துவிடும். எஞ்சிய இரண்டு இடங்களுக்காகவும் போட்டி நிலவும். பாகிஸ்தான் தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டினால், அவர்கள் மொத்த 10 புள்ளிகளை பெறுவார்கள் என்பதோடு நியூசிலாந்து பாகிஸ்தானிடம் தோற்று இலங்கையிடம் வெற்றியீட்டினால் அந்த அணியின் புள்ளிகளும் 10 ஆக இருக்கும்.

அவுஸ்திரேலிய அணிக்கு 10 புள்ளிகளை தாண்ட வாய்ப்பு அதிகம் இருந்தபோது அந்த அணி தனது எஞ்சிய மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மாத்திரம் வென்றால் அந்த அணியும் 10 புள்ளிகளில் சிக்கிக்கொள்ளும். ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கும் 10 புள்ளிகளை பெற வாய்ப்பு இருந்தது.

எனினும் அவுஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து 3 போட்டிகள் இருப்பதோடு ஏற்கனவே அது 8 புள்ளிகளுடன் 0.970 நிகர ஓட்ட விகிதத்தையும் பெற்றுள்ளது. எனவே அந்த அணியில் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே, உலகக் கிண்ணப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் அணியை கணிப்பது தற்போதைய சூழலில் கடினமாக உள்ளது.

நியூசிலாந்து எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வென்றால் 12 புள்ளிகளை பெறலாம் என்றாலும் அந்த அணி கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT