முற்போக்கு மிக்க அரசியல் கலாசாரம் | தினகரன்

முற்போக்கு மிக்க அரசியல் கலாசாரம்

இலங்கை மத்திய வங்கி 2015.02.27 அன்று மேற்கொண்ட பிணைமுறி வழங்கல் விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுத்த அறிக்கையின் பின்புலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததற்கு அமைய பாராளுமன்றம் இன்று 10 ஆம் திகதி கூடுகின்றது.

இந்நடவடிக்கையானது இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து கடந்த மூன்றாம் திகதி ( ஜனவரி 2018) ஜனாதிபதி விஷேட அறிக்கையொன்றை விடுத்தார். அதனூடாக இலங்கை அரசியலில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் இவ்விவகாரம் தொடர்பில் விவாதிக்கவென பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்தைக் கோரின.

அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியினதும், ஏனைய எதிர்க்கட்சிகளினதும் கோரிக்கைக்கு மதிப்பளித்த பிரதமர் பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கேற்ப எதிர்வரும் 23 ஆம் திகதி கூட்டவென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்றத்தை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14 இன் கீழ் இன்று 10 ஆம் திகதி கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையிலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நடப்பதிலும் இணக்கப்பாட்டு அரசாங்கம், இந்நாடு கண்ட கடந்த ஆட்சிகளுக்கு ஒரு போதுமே இரண்டாம் பட்சமாகாது.

இப்பிணைமுறி வழங்கல் விவகாரம் ஆரம்பம் முதல் இந்நாட்டு அரசியலில் ஒரு பேசுபொருள் நிலையைத் தோற்றுவித்தது. இப்பின்புலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விசாரிக்கவென விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவ்வாணைக்குழு கடந்த பத்து மாத காலப்பகுதியில் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை செய்து 1257 பக்கங்களில் முழுமையான அறிக்கையை கடந்த வருட இறுதிப் பகுதியில் ஜனாதிபதியிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்நாட்டு அரசியலில் பரப்பு நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் அடிப்படையாக வைத்து கடந்த 3 ஆம் திகதி விஷேட அறிக்கை விடுத்தார். தமது தலைமையிலான கட்சி இணைந்து அமைத்திருக்கும் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனமொன்றில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க ஆணைக்குழுவையே நியமித்த ஜனாதிபதி, அக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கூட அவர் நாட்டு மக்கள் முன்வைக்கத் தவறவில்லை. இவ்வாறு வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு ஜனாதிபதியை இந்நாடு முன்னொரு போதுமே கண்டதில்லை.

கடந்த காலங்களில் ஊழல், மோசடி முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள விரும்புவதில்லை. அதனையும் மீறி அழுத்தம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் விசாரணைக் குழுக்களை நியமிப்பர். அவ்வளவுதான், அதன் பின்னர் அந்தக் குழுவின் விசாரணை, அறிக்கை என்பன குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளப்படுவதே இல்லை. அப்பாரம்பரியத்தை மாற்றியமைத்திருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதேநேரம் இவ்வறிக்கை வெளியானதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கி ஆணையாளர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு உத்தரவிட்டார். இவ்வாறான நிலையில் பப்பர்சுவர்ஸ் ட்ரசிஸ் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பிரதமர், 'பிணைமுறி விவகாரம் தொடர்பில் எதனையும் மூடி மறைக்கவோ, யாரையும் பாதுகாக்கவோ அரசாங்கம் முற்படாது. இது விடயத்தில் சட்ட மாஅதிபருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ஜ.தே.க. வின் விஷேட சம்மேளனத்தில் குறிப்பிட்டார். அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப்பாராளுமன்றத்​ைத உடனடியாகக் கூட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆக இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆரம்பம் முதல் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலைமையை இந்நாடு முன்னொரு போதுமே கண்டதில்லை.

அதேநேரம் இப்பிணைமுறி அறிக்கையில், 2008 முதல் பிணைமுறி வழங்கலில் முறைகேடுகள் இடம்பெற்று வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை எதுவும் 2015 பிணைமுறி விவகாரம் வரையும் வெளிப்படவில்லை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் அவை அந்தளவுக்கு மூடி மறைக்கப்பட்டன.

ஆனால் எவர் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டுக்குரிய சொத்து, செல்வங்கள் மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2015 அம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் முன்னெடுத்துவரும் அரசியல் கலாசாரம் இந்நாடு முன்னொரு போதுமே கண்டிராத முற்போக்கு மிக்க வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசியல் கலாசாரம். இக்கலாசாரம் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே சகலரதும் எதிர்பார்ப்பும் கூட.


Add new comment

Or log in with...