மொத்த பொருளாதார இழப்பை கண்டறிய கணக்காய்வு அவசியம் | தினகரன்

மொத்த பொருளாதார இழப்பை கண்டறிய கணக்காய்வு அவசியம்

குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டுமென்பதே சு.க வின் எதிர்பார்ப்பு

மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை திரட்டியுள்ள தரவுகள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இச்செயற்பாட்டின் பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தில் இதுவரைக் காலமும் இடம்பெற்ற மொத்த இழப்பை கணக்காய்வு (forensic audit) மூலம் கண்டறிய வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் முறை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் முறை ஆகியன தொடர்பில் பூரண விளக்கத்தை முன்வைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளுக்கமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென்பதே சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பாகுமென்றும் தெரிவித்த அமைச்சர் தற்போது குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை அப்பதவிக்கு நியமித்தது ஜனாதிபதியோ அல்லது சுதந்திரக் கட்சியோ அல்ல. அதனால் அவரை நியமித்து காப்பாற்ற முயற்சித்த குழுவினர் எவ்வாறான பொறுப்பை ஏற்க்க வேண்டுமென்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அர்ஜூன மஹேந்திரன் வெளிநாட்டுப் பிரஜை என்கின்றபோதும் அவருக்கெதிராக தண்டனை எடுக்க முடியும்.அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் மஹிந்த ஆதரவு அணி ஆகியன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அது பொதுமக்கள் அறிக்கையாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியின் காரணமாகவே மத்திய வங்கியின் முறிகள் சர்ச்சையை விசாரிப்பதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிராவிட்டால் நடந்தது என்ன என்பது மக்களுக்கு தெரியாமல் போயிருக்கும். ஏற்கனவே கோப் குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தபோதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அத்துடன் கோப் அறிக்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீள வசூலிப்பது ஆகியன எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதி அணைக்குழுவை நியமித்ததன் மூலமே சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறுக்கு கேள்விகளைக் கேட்டு உண்மையை வெளிக் கொணர முடிந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...