Tuesday, April 23, 2024
Home » நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணைக்குழு நியமனம்!

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணைக்குழு நியமனம்!

- முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 10 பேர் கொண்ட குழு

by Rizwan Segu Mohideen
November 3, 2023 5:18 pm 0 comment

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி வெவகே பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 2,3 ஆம் சரத்துக்கமைய புதிய ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சுந்தரம் அருமைநாயகம், சேனநாயக்க அலிசெண்ராலாகே, ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ஜயந்த அபேசேகர, ராஜித நவின் கிறிஸ்டோபர் சேனாரத்ன, அஹமட் லெப்பை மொஹமட் சலீம், சாகரிகா தெல்கொட, எஸ்தர் ஸ்ரீயானி நிமல்கா பெர்னாண்டோ, விதரனகே திபானி சமந்தா ரொட்ரிகோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள தேர்தல் சட்டங்களை ஆய்வு செய்வது, அவற்றைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தத் தேவையான பரிந்துரைகளை வழங்குவது ஊடகங்களை சரியாக கையாள்வது தொடர்பிலான நெறிமுறைகளைத் தயாரிப்பது ஆகிய பணிகளை இந்த ஆணைக்குழு முன்னெடுக்கும்.

அத்துடன், பொது விவகாரங்களின் போது அரசியல், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் நடத்தை தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு வழங்கும். அத்துடன், அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையுடன் பொறுப்புக்கூறும் சட்டங்களை வலுப்படுத்தத் தேவையான தகவல்களையும் ஆணைக்குழு திரட்டும்.

பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் நாள் வரையிலான இடைவெளியை குறைத்தல், தேர்தலின் போது வாக்குச்சீட்டு முறைமைக்கு மாறாக இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள், உள்ளக பாராளுமன்ற ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக முன்மொழிந்திருக்கும் நியதிகள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்தும்.

தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசார நிதிச் செலவுகளில் துரித அதிகரிப்பு, அரசியலில் பணத்தின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விரிவாக கவனம் செலுத்தவுள்ளது.

குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் கட்சிகளில் நுழைதல், நிலையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக குறுகிய காலத்தில் வலுவிழக்கும் கூட்டணிகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை குறித்த ஆணைக்குழு ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளது.

2356-29_T

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT