இலங்கைப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் காலநிலை | தினகரன்

இலங்கைப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் காலநிலை

இந்து சமுத்திரத்தில் முத்தாக விளங்கும் இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்நாட்டின் அமைவிடமானது வருடம் முழுவதும் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் காணப்படுகின்றது. அதாவது வட கீழ், தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலைகள் மூலம் மாத்திரமல்லாமல் வருடத்தின் ஆரம்பப் பகுதியிலும், இறுதிப் பகுதியிலும் இடைப்பருவப் பெயர்ச்சிக் காலநிலை மூலமும் இந்நாடு மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றது.

அதேநேரம், இந்நாட்டில் இயற்கையாகவே உருவான 103 ஆறுகளும் கங்கைகளும் காணப்படுகின்றன. அத்தோடு 50 இற்கும் மேற்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களும், நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களும் உள்ளன. இவ்வாறு வருடத்தில் 365 நாட்களும் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலான நீர்வளத்தைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குகின்றது. இதனால் இந்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் 40 வீதத்திற்கும் மேற்பட்ட பங்கு மின்சாரம் நீரை அடிப்படையாகக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதன் பயனாக இந்நாடு ஆரம்ப காலம் முதல் விவசாய உற்பத்தி நாடாக விளங்கி வருகின்றது. அத்தோடு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பெருந்தோட்ட விவசாய உற்பத்தி நாடாகவும் இந்நாடு திகழுகின்றது. இதன் மூலம் இந்நாட்டுக்கு வருடாந்தம் பெருந்தொகை அந்நிய செலாவணி கிடைக்கப் பெறுகின்றது. இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணி வழங்கும் முக்கிய துறைகளில் இவையும் இடம்பிடித்திருக்கின்றன.

இருந்த போதிலும் அண்மைக் காலமாக காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்நாட்டு விவசாய உற்பத்தித் துறையிலும் பெருந்தோட்ட விவசாய உற்பத்தித் துறையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. இது நாட்டின் அந்நிய செலாவணியிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.

இக்காலநிலை மாற்றம் காரணமாக 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையின் விவசாய உற்பத்தி மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறைகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டதாக இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நெல் உற்பத்தியில் 8.3 வீத வீழ்ச்சியும், தேயிலை உற்பத்தியில் 11வீத வீழ்ச்சியும், இறப்பர் உற்பத்தியில் 10.7 வீத வீழ்ச்சியும், தேங்காய் உற்பத்தியில் 1.5 வீத வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

நெல் உற்பத்தியைப் பொறுத்த வரையில் 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் சாதகமான மழைவீழ்ச்சி காணப்பட்டதன் பயனாக நெற்செய்கை பண்ணப்பட்ட பரப்பளவு 1.2 வீத அதிகரிப்பைக் காண்பித்ததோடு, 667,483 ஹெக்டேயர்கள் செய்கை பண்ணப்பட்டவையாகக் காணப்பட்டன. என்றாலும் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட இலைச்சுருள் நோய், வெப்புநோய் காரணமாக ஹெக்டேயருக்கான நெல் அறுவடை 0.3 வீதத்தால் வீழ்ச்சி அடைந்தது. அதாவது 4363 கிலோ கிராமிலிருந்து 4349 கிலோ கிராம் வரை அறுவடை குறைந்தது.

அதேநேரம் 2016 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு காலப்பகுதியில் வீசிய கடும் காற்றின் விளைவாக அதேயாண்டின் சிறுபோக அறுவடை 21.9 வீதம் வீழ்ச்சியடைந்தது. நெல் உற்பத்தி செய்யப்பட்ட பரப்பளவும் 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 343,506 ஹெக்டேயர்களானது.

இவை இவ்வாறிருக்க, பெருந்தோட்ட உற்பத்திப் பயிர்களில் ஒன்றாக விளங்கும் தேயிலை உற்பத்தியிலும் 2016 இல் வீழ்ச்சி ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தேயிலை உற்பத்திப் பிரதேசங்களில் வரட்சி நிலவியதன் விளைவாகவும், அவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேகமூட்டத்துடனான வானிலை நிலவியதன் காரணமாகவும் ஆண்டின் இறுதிப் பகுதி அறுவடையில் பாரிய தாக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்கனவே 328.8மில்லியன் கிலோ கிராம் அறுவடை செய்யப்பட்ட தேயிலை 2016 ஆம் ஆண்டில் 292.6 மில்லியன் கிலோ கிராம் வரை குறைவடைந்து 11 வீத வீழ்ச்சியைக் காண்பித்தது.

மேலும் இந்நாட்டிலுள்ள மற்றொரு பெருந்தோட்ட பயிரான இறப்பர் உற்பத்தியிலும் 10.7 வீத வீழ்ச்சி 2016 இல் பதிவானது.

இவை இவ்வாறிருக்க, இந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததாகக் காணப்படும் பெருந்தோட்டப் பயிரான தென்னையின் மூலம் 2016 இல் 3011 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 1.5 வீத வீழ்ச்சி காணப்பட்டது.

சிறு ஏற்றுமதிப் பயிர்கள்:

சிறுஏற்றுமதிப் பயிர்ச்செய்கை மூலமான அறுவடை 2015 இல் 12.9 வீதமாகக் காணப்பட்ட போதிலும், 2016 இல் அதுவும் 9.7 வீத வீழ்ச்சியைக் காட்டியது. குறிப்பாக மிளகு அறுவடையில் அதன் பூ மற்றும் காய்ப் பருவத்தில் நிலவிய வரட்சி காரணமாக 2016 இல் மாத்திரம் 34.4 வீத வீழ்ச்சி ஏற்பட்டது. இதேபோன்று ஏனைய பயிர்களின் அறுவடையிலும், பழ உற்பத்தியிலும் வீழ்ச்சி பதிவானது.

இவ்வாறு விவசாய உற்பத்தியிலும் பெருந்தோட்ட விவசாய உற்பத்தியிலும் வீழச்சி ஏற்பட காலநிலை மாற்றம் முக்கிய பங்காற்றி உள்ளது. இதே தாக்கம் 2017 ஆம் ஆண்டிலும் நீடித்தது. அதன் காரணத்தினால் நெல், தேங்காய் உள்ளிட்ட எல்லா விவசாய உற்பத்திகளிலும் வீழ்ச்சிகள் பதிவாகின.

இவ்வாறான நிலையில் இந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம், 'கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி சில பிரதேசங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

ஆனால் வருடத்தின் முதல் மூன்று நான்கு மாதங்கள் இலங்கைக்கு அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதில்லை. இது வழமையானது. அதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை இவ்வருடமும் இந்நாட்டின் விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறைகள் எதிர்கொள்ளக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்திகளைப் பிரதான பொருளாதார மூலங்களாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு காலநிலை மாற்றம் தொடர்ந்தும் தாக்கமாக அமையுமாயின் அது அந்நாட்டின் பொருளாதாரத்தில் பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதன் காரணத்தினால் கிடைக்கப் பெறும் தண்ணீரைக் கொண்டு உச்சபயனைப் பெற்றுக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அண்மைக் காலமாக சொற்ப நேரத்தில் அளவுக்கு அதிகமான கனத்த மழை பொழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக வெள்ள நிலைமையும் கூட ஏற்படுகின்றது. இதனால் கிடைக்கப்படும் தண்ணீரில் பெரும்பகுதி எவ்விதத்திலும் பயன்படுத்தப்படாது கடலில் கலக்கின்றது. இதனைத் தவிர்த்து கிடைக்கப் பெறும் நீரைக் கொண்டு உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நீர் முகாமைத்துவத் திட்டம் குறித்து அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் அவசியமானது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறைகளில் ஏற்படும் தாக்கங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...