தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை | தினகரன்

தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை

தமிழகத்தில் அரச பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழ்நாடு அரச போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 இலட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 31-ம திகதி முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு தொடர்பாக குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் செயலர் டேவிதார், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

2.57 சதவீத ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறையும் 2.44 சதவீத உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறையும் 2.37 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் இதை ஏற்க மறுத்தனர்.

3 ஆண்டுக்கு ஒருமுறை 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் 3 ஆண்டுகளுக்கு 2.44 சதவீத உயர்வுதான் வழங்கப்படும் என அரச தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களில் நேற்று முன்தினம் மாலை இந்தத் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் . பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவரத்தை சமாளிப்பது குறித்து தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, "சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை 22 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.57 காரணி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க அரசு ஒப்புக் கொண்டது. இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு 1000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசியலுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கம் உட்பட 36 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக்கூறினார்.


Add new comment

Or log in with...