போலி அமைப்புகள் களையப்பட வேண்டும் | தினகரன்

போலி அமைப்புகள் களையப்பட வேண்டும்

 

மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளிலும் அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அரச சார்பற்ற அமைப்பு என்ற முத்திரையை குத்திக்கொண்டே இயங்கி வருகின்றன. போர்க்காலத்தின் போது இவ்வாறான அமைப்புகள் பரவலாகக் காணப்பட்ட நிலையில் அவை பெரும்பாலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் என்ற பிரதிபலிப்பே வெளிக்காட்டப்பட்டு வந்தது. இதன் பின்னணியில் கூட ஒருவகை அரசியல் கலந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவே இருந்தது.

அந்த மனித உரிமைகள் அமைப்புகள், அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்காக குரல் கொடுப்பது மிக முக்கியமானதாகவே காணப்பட்டது. இதன் காரணமாக தென்னிலங்கையில் பல அரச சார்பற்ற அமைப்புகள் புற்றீசல்கள் போன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. இவை அனைத்தும் அன்று ஆட்சிக்கு எதிரான குரல் எழுப்புபவையாகவே காணப்பட்டன. வட புலத்தை மையப்படுத்தி அந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கோரும் அரசியல் உரிமை நியாயமானதே என்றுகூட அன்று தென்னிலங்கைச் சக்திகள் கோஷமிட்டன.

பேரினவாதச் சக்திகள் எனக் கூறப்பட்ட தென்னிலங்கை பெரும் இனவாத சக்திகள் சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக குறிப்பாக அன்று தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிட்ட போது, அவை உள்நாட்டுடன் மட்டுப்படுத்தப்படாமல் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் தனிப்பட்ட மனித உரிமைகள் அமைப்புகளும்தான் முனைப்புடன் செயற்பட்டன என்பது மூடிமறைக்கப்படக் கூடியதொன்றல்ல.

2015 வரை இந்த அமைப்புகள் நாட்டில் கொடிகட்டிப் பறந்ததென்றே கூறவேண்டியுள்ளது. நாட்டின் அன்றைய அரசியல் செயற்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது அத்தகைய அமைப்புகள் அவசியம் தேவையென்றே கருதப்பட்டன. பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்திற்காக தம்மாலான பங்களிப்பை அவை வழங்கத் தவறவுமில்லை. அன்று போர் காரணமாக அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு சக்தியாகவே இந்த அமைப்புகள் காணப்பட்டன. அத்துடன் அவை இந்த அகதிகளுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் கூடுதல் கரிசனை காட்டத் தவறவில்லை.

இவ்வாறான நிவாரண நடவடிக்கைகளின் போது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மேற்படி அமைப்புகள் மீது நிறையவே விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. அவற்றில் சில நியாயமானவையாகவும் வேறுசில பொய்க்குற்றச்சாட்டுக்களாகவுமே காணப்பட்டன. பல அமைப்புகள் தமது பணிகள் தொடர்பில் அரசுக்கோ, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கோ எந்தவிதமான தெளிவுபடுத்தல்களையும் வழங்காமல் தம்மிஷ்டப்படி நடந்துகொண்டன. இது குறித்து அந்த அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றி எவரும் அலட்டிச்கொள்ளவில்லை.

மற்றொரு பார்வையில் நோக்குகின்ற போது இவ்வாறான அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் அதன் பார்வையை முழுமையாக திருப்புவதற்கு வாய்ப்பேற்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வரை இலங்கை விவகாரம் கொண்டு செல்லப்படுவதற்கு இந்த அமைப்புகளின் பின்புலமே காரணமெனலாம். ஜனநாயக ரீதியில் பார்க்கின்ற போது மக்களின் உரிமைக்காக அந்த மக்களே குரல் எழுப்புகின்ற போது அவர்களுக்கு கைகொடுப்பவர்கள் போன்று இந்த மனித உரிமைகள் அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கியமை பாராட்டத்தக்கனவாகவே கருதப்பட வேண்டும். அது தப்பென எவராலும் விமர்சிக்க முடியாது.

ஆனால் 2015 ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அனைத்து இனங்களுக்குமிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பாரிய பணியை நல்லாட்சி அரசு முன்னெடுக்கத் தொடங்கியது. அந்த நல்லிணக்கப் பயணம் அடிமேல் அடி வைத்து முன்கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருப்பதன் மூலம் இனவாதச் சக்திகளால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக ஆட்சியை விமர்சிக்கும் கைங்கரியத்தை இந்த இனவாதச் சக்திகள் தம் கைகளில் எடுத்துக்கொண்டுள்ளன. அதேசமயம் சுயநல அரசியல் நோக்கம் கொண்ட சில சக்திகள் அந்த இனவாதச் சக்திகளுக்கு தேவையான பின்புலங்களை ஏற்படுத்திக் கொடுத்துவருகின்றன.

இந்தச் சக்திகள் விடயத்தில் அரசு விழிப்புடன் செயற்பட வேண்டிய தேவை இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமானதென்பதை வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது. இனவாதச் சக்திகள் தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தவர்களிடம் கொண்டு செல்லும் நச்சுக் குரல்கள் சிலவேளை தேசத்தை மீண்டுமொரு பேரழிவுக்குள் இட்டுச் செல்லப்படக்கூடிய அவலத்தை ஏற்படுத்தலாமென்ற அச்சம்கூட ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று நாட்டில் மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் போலி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடுகம தெரிவித்திருக்கின்றார். சில அமைப்புகள் மனித உரிமைகளுக்காக உண்மையாக குரல் கொடுப்பவர்கள் தாங்களே எனக் கூறி பொதுமக்களிடம் பணம் சூறையாடும் ஒரு காரியத்திலீடுபட்டு வருவது கண்டறியப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருப்பதோடு பொதுமக்கள் இதுபோன்ற சக்திகளிடம் சிக்கக்கூடாதெனவும் தெரிவித்திருக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் தரப்பின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் மக்களை ஏமாற்றும் சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தவறு செய்பவன் எந்த வழியிலும் அதனைச் செய்யவே முனைவான். ஆனால் மக்கள் விழிப்புடன் செயற்பட்டால் அந்த வலைக்குள் விழாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம்.


Add new comment

Or log in with...