தந்தையின் ஆளுமை தனயனிடம் இல்லாமல் போனது ஏன்? | தினகரன்

தந்தையின் ஆளுமை தனயனிடம் இல்லாமல் போனது ஏன்?

தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்த ஓராண்டுக்குள் தமிழக அரசியலின் தட்பவெப்ப சூழல்கள் அடியோடு மாறிவிட்டன. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க, கருணாநிதி இல்லாத தி.மு.க என களச்சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் அரியணையில் அமரத் துடித்துக் கொண்டிருக்கின்றன சில அரசியல் கட்சிகள்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்தாண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அதே காலகட்டத்தில் தன்னுடைய உடலைப் பெரிதும் பாதித்த மீசெல்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. அவருடைய குரலையோ அறிக்கையையோ பார்க்க முடியாமல் தி.மு.க உடன்பிறப்புகள் பதறித் துடித்தார்கள். செயற்கை சுவாசக் கருவி எனப்படும் 'ட்ரக்யோஸ்டமி' பொருத்தப்பட்ட பிறகுதான், 'கருணாநிதிக்குப் பிறகு தி.மு.கவுக்கு ஸ்டாலின் தலைமை அவசியம்' எனப் பேசத் தொடங்கினார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

‘கருணாநிதி உயிரோடு இருக்கும் வரையில் வேறு ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என அழகிரி போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாக, செயல் தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்தது தி.மு.க பொதுக்குழு.

1. செயல் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றபோது, தி.மு.க தொண்டர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டுக் கிடந்த ஒன்று, செயல்பாட்டுக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட உற்சாகம் அது. ஆனால், அதன் பிறகு ஓர் இனம்புரியாத விரக்தி மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஒரே காரணம், குடும்ப உறுப்பினர்களின் தலையீடு. கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அழகிரி, தமிழரசு, கனிமொழி ஆகியோரது குடும்பத் தலையீடுகள் அதிகமாக இருந்தன.

இதனை உலகமே வேடிக்கை பார்த்தது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும் குடும்ப ஆதிக்கம் ஒரு காரணமாக அமைந்தது. அதுவே, செயல் தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக வேதனைப்படுகின்றனர் மாவட்டச் செயலாளர்கள். இந்த விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைக்க முடியாமல் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் மனதுக்குள் போட்டுப் புகைந்து கொண்டிருக்கிறார்கள்.

‘அவரது குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்கிறார்கள்’ என்பதைவிட, ‘தங்கள் கருத்தைக் கேட்காமல் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டுக் கொண்டு முடிவெடுக்கிறார் ஸ்டாலின்’ என்ற குமுறல் நிர்வாகிகள் மத்தியில் வலம் வருகிறது.

அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிப்பதால்தான், மாவட்டச் செயலாளர்களின் வேகம் பாதியாகக் குறைந்து விட்டது. அதுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிரொலித்தது. தலைநகர் சென்னையில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில், பிரசாரத்துக்கென 14 நாட்கள் அவகாசம் இருந்தன. தொடர்ந்து பத்துநாட்கள் தீவிர பிரசாரத்தில் ஸ்டாலின் இறங்கியிருந்தால், இப்படியொரு அவமானகரமான தோல்வி ஏற்பட்டிருக்காது. வெறும் மூன்று நாள்கள் மட்டும் ஆர்.கே.நகர் பிரசாரத்துக்குச் சென்று, மிக அலட்சியமாகவே அவர் தேர்தலை எதிர்கொண்டார். 'செயல் தலைவராக பதவிக்கு வந்தால் மட்டும் போதாது; செயல்படும் தலைவராகவும் ஸ்டாலின் இல்லாமல் போனதன் விளைவு அது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடம் மனம் திறந்து பேச அவர் தயாராக இருக்க வேண்டும். செயல் தலைவரான பிறகு எந்த மாவட்டச் செயலாளரிடமும் அவர் மனம் விட்டுப் பேசியதில்லை. கட்சி நிர்வாகிகளை தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும். கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகள் யாராவது பத்திரிகை கொடுக்க வந்தால், அதை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறார். கட்சி நிர்வாகிகள் எதாவது பேச விரும்பினால்கூட, எப்போதும் இரண்டு பேர் கூடவே இருக்கின்றனர். முதலில், தன்னுடன் இருக்கும் சிலரை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்.'நாம்தான் வெற்றி பெறுவோம்; மக்கள் நம்மைத்தான் நம்புகிறார்கள்' என இனியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாடம் கற்பித்துவிட்டது.

3. 'எதிரி எனத் தீர்மானித்துவிட்டால், அவர்களை முற்றாக அழித்துவிட வேண்டும்' என்ற சாணக்கிய நீதியைப் பயன்படுத்துவதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் சேர்ந்தே எழுகிறது. காலம் கொடுத்த அற்புதமான வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சசிகலா தலைமையில் கூவத்தூர் அரசியல் நடந்தபோது, தன்னுடைய அரசியல் ஆளுமையை அவர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அன்றைக்குப் பன்னீர்செல்வம் தன்பக்கம் சில எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயற்சித்தபோது, ஸ்டாலினும் சில சித்து விளையாட்டுக்களைக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த ஆட்சி எப்போதோ வீட்டுக்குச் சென்றிருக்கும்.

அதைச் செய்யத் தவறிவிட்டார். இதன்பிறகு, ஐந்து மாதங்கள் கழித்து தினகரனை நோக்கி சில எம்.எல்.ஏ-க்கள் சென்றபோதும், தன்னுடைய ஆளுமையைப் பயன்படுத்தி சில எம்.எல்.ஏ-க்களைத் தி.மு.க பக்கம் இழுத்திருக்க வேண்டும். அரசியல் என்பதே ஆட்டத்தைக் கலைப்பதுதான். ஆட்சியைக் கவிழ்க்கக் கிடைத்த இரண்டாவது அரிய வாய்ப்பையும் அவர் தவறவிட்டார். இப்போது மூன்றாவது வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, மூன்றாவது ஆட்டம் தொடங்க இருக்கிறது. 'இந்த வாய்ப்பு ஆட்சி அமைக்கக் கிடைத்த இறுதி வாய்ப்பு' என உணர்ந்து கொண்டு செயல் தலைவர் செயல்பட வேண்டும்.

5. குடும்ப உறவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற தெளிவுக்கு ஸ்டாலின் வர வேண்டும். இன்றைக்குக் கட்சியில் அழகிரி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் கருணாநிதியின் மகன். கட்சி நிர்வாகிகளால் முரட்டு மனிதனாகவே பார்க்கப்படுபவர். எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை.

'இந்தச் செயல் தலைவர் இருக்கும் வரையில் தி.மு.க வெற்றி பெறாது' என அழகிரி கூறும் வார்த்தைகள், நாளையே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வாயில் இருந்தும் வரலாம். 'அழகிரிக்குப் பின்னால் கனிமொழியும் இருக்கலாம்' என்ற எச்சரிக்கையோடுதான் ஸ்டாலின் தன்னுடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

6. 'கருணாநிதி இருந்திருந்தால்...' என ஸ்டாலினை நோக்கி அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதே பலவீனம்தான். இனி இதுபோன்ற வார்த்தைகள் பொதுவெளியில் வெளிப்படாமல் இருக்க வைப்பது என்பது ஸ்டாலின் கைகளில்தான் இருக்கிறது. ' தமிழக அரசியலில் ஒரு முக்கியமான திருப்பமாக அமையும் வகையில், செயல் தலைவரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தாய்க்கழகம் உரிமையோடு பாராட்டுகிறது' என கடந்தாண்டு இதேநாளில் நெகிழ்ந்தார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.இனி என்ன செய்யப் போகிறார் செயல் தலைவர்? 


Add new comment

Or log in with...