உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளரின் குழப்பங்கள் | தினகரன்

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளரின் குழப்பங்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற விதி இறுக்கமாக உள்ளதால், தேர்தலில் போட்டியிடுகின்ற தரப்புகள் அத்தனையும் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. இதற்காக அவை பெண்கள் வேட்பாளர்களுக்கு வலை விரித்துத் தேடிப்பிடித்த கதைகள் பல உள்ளன. ஆண் வேட்பாளர்களைக் கண்டு பிடிப்பதற்கே பல கட்சிகளும் ஆலாய்ப்பறந்ததையும் அல்லற்பட்டதையும் காண முடிந்தது.

இதுதான் இன்றைய தேர்தல் கள நி​ைலவரமாக இருக்கின்றது.

சில இடங்களில், சில தரப்புகளில் பொருத்தமான நல்ல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பட்டியலை நிரப்புகின்ற விதமாகவே பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் இந்தத் தடவை தமது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. குற்றச் செயல்கள், சமூகத்துக்குப் பொருத்தமில்லாத காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களாகவே இந்த வேட்பாளர்களில் சிலர் உள்ளனர். இதனால்தான் “இந்தத் தேர்தலில் குற்றவாளிகளில் பலர் வேட்பாளர்களாக உள்ளனர்” என்று கஃபே அமைப்புக் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆகவே, இது மக்களுக்கு ஒரு சோதனைக் களமாகவே உள்ளது. நல்லவர்களையும் வல்லவர்களையும் பொருத்தமானவர்களையும் எப்படித் தெரிவு செய்வது என்பதுதான் பிரச்சினை. மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் யார்? மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவர்கள் எவர் என அறிந்து கொள்வதில் ஒரு நெருக்கடி. அதுமட்டுமல்ல, இது வட்டார அடிப்படையிலான தேர்தல் என்பதால் வேட்பாளர்களாக நிற்பவர்கள் அத்தனை பேரும் ஊர்க்காரர்களாக, அயலவர்களாக, சொந்தக்காரராக, தெரிந்தவர்களாக, கூடப்படித்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே தெரிவு என்பது முதற்கட்டத்தில் குழப்பங்களை உண்டாக்கக் கூடியது.

மக்களுக்குப் போதிய அரசியல் தெளிவு இருந்தால் மட்டுமே இதில் வெல்ல முடியும். இல்லையென்றால், கையில் வைத்திருக்கும் வடையை காகத்திடம் பறி கொடுத்த கதையாகி விடும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த காலத் தேர்தல்களில் படித்த பாடங்களை மக்கள் மனதில் கொள்வது அவசியம்.

இதேவேளை, நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் சிலர் சொந்த வீட்டிலேயே செல்வாக்கைப் பெற முடியாதவர்கள். சில கட்சிகள் முகம் தெரியாதவர்களைத் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் நிரப்பியுள்ளன. இவர்களையெல்லாம் எப்படித் தெரிவு செய்வது? இவர்களைத் தெரிவு செய்தால், நிலைமை எப்படியிருக்கும்?

ஆனால், நமது தற்போதைய அரசியற் சூழலில் பல பிரச்சினைகளோடும் சிக்கல்களோடும் உள்ளவர்களே அதிகமாக அரசியல் அரங்கிற்கும் அதன் வழியாக அதிகாரத்துக்கும் வருகிறார்கள். விலக்குகள் உண்டு. ஆனால், அது குறைவு.

அரசியலும் அதில் கிடைக்கின்ற அதிகாரமும் தங்களுடைய பிரச்சினைகளுக்குக் கவசமாகும் என்ற நம்பிக்கை இவர்களை அரசியலில் குதிக்க வைக்கிறது. பிறகு, தங்களுக்குத் தெரிந்த உபாயங்களை வைத்துக் கொண்டு, கில்லாடி வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். கட்சிகளுக்கும் ஆட்கள் தேவை என்பதால், அவை தாம் சேர்த்துக் கொள்கின்ற நபர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? எத்தகைய தகமைகளைக் கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இப்படியான ஒரு அரசியல் நிச்சயமாகப் பாதகமான விளைவுகளையே மக்களுக்கு உண்டாக்கும். ஏற்கனவே விடிவற்ற நிலையிலிருக்கும் சமூகத்துக்கு மேலும் பொருத்தமும் தகுதியுமற்றவர்களும் நம்பிக்கையைக் கொள்ளையடிக்கும் கட்சிகளும் வந்தால், நிலைமை எப்படியிருக்கும்?

இதுகுறித்து நமது ஊடகங்களும் பொறுப்பாகச் சிந்திக்க வேண்டிய தரப்பினரும் பேசாது இருப்பதைப் பார்க்கிறோம். இது ஏன்? இந்தக் கள்ள மௌனத்திற்கான காரணம் என்ன? இந்த மௌனம் தவறுகளுக்கு உடந்தையானது. மக்களுடைய நலன்களுக்கு எதிரானது.

கட்சி அபிமானம், வேட்பாளர் சிநேகம், சின்னங்களின் மீதான விருப்பம், தலைமை மீதான விசுவாசம் அல்லது பிடிப்பு என்பவை எல்லாம் ஒரு வகையில் மூடத்தனத்தின் வெளிப்பாடே. இவையெல்லாவற்றையும் விட அரசியல் ரீதியாக ஒரு கட்சி, ஒரு தலைமை, ஒரு சின்னம் எப்படியான பெறுமதியைக் கொண்டிருக்கின்றது என்று பார்ப்பதே அவசியமானது.

தேர்தல் அரசியலில் இலங்கை, எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டது. தமிழர்கள் தமது அரசியல் மீட்சிக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக ரீதியான அரசியல் (தேர்தல் அரசியல்) ஆயுதப் போராட்ட அரசியல் என இரண்டு அரசியலிலும் தமிழர்கள் பெற்றதை விட இழந்ததே அதிகம். இப்பொழுது இதுவரையிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழக்கும் நிலையே உருவாகியுள்ளது.

எனவே மீளவும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், வெற்றிகரமான அரசியல் முன்னெடுப்பு அவசியம். இதற்குச் சரியான அரசியல் நெறிமுறை வேண்டும். வெற்றியை நோக்கிச் செல்லக் கூடிய, இலக்கை எட்டக் கூடிய வினைத்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க செயற்பாட்டாளர்கள் தேவை. அதிகாரத்துக்கு மண்டியிடவும் கூடாது. அதிகாரத்தை தம் தலையில் கொண்டு ஆடவும் கூடாது என்ற சமநிலைப் பண்பு கட்டாயம். இதையெல்லாம் எந்த அரசியற் கட்சிகள் தமக்குள் கொண்டிருக்கின்றன?

வாக்களிக்காமல் விடக் கூடாது. பதிலாகத் தேர்வுகளைச் செய்யும்போது, முடிந்தளவுக்கு சரியானவர்களைத் தெரிவு செய்யலாம். சில கட்சிகளில் சற்றுக் கூடுதலானவர்கள் பொருத்தமானவர்களாக இருப்பர். சில இடங்களில் இதற்கே வாய்ப்பில்லாமல் போகலாம். கட்சி, சின்னம் என்பதற்கு அப்பால், சரியானவர்களை, நல்லவர்களை, வல்லவர்களை, நேர்மையானவர்களை, சமூகப் பற்றுள்ளவர்களை, அர்ப்பணிப்பாகச் செயற்படக் கூடியவர்களைத் தெரிவு செய்வதன் மூலமாக ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க முடியும். இது வலுவற்ற சபைகளின் உருவாக்கத்துக்கல்லவா சந்தர்ப்பத்தை அளிக்கும் என்று யாரும் கேட்கக் கூடும். நிச்சயமாக இல்லை. இத்தகைய ஒரு நிலை குறித்த அரசியற் கட்சிகளை ஒரு கணம் நின்று நிதானமாகச் சிந்திக்க வைக்கும். தம்மை மீளாய்வு செய்யக் கூடிய நிலையை உருவாக்கும்.

தவிர, தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் அத்தனை பேரும் பொருத்தமானவர்கள், சரியானவர்கள், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்தால், பிரதேசத்தின் முன்னேற்றத்திலும் பிரதேச மக்களின் நலனிலும் அக்கறையுடையோராகவே இருப்பர். அத்துடன், சரியானவர்கள், பொருத்தமானவர்கள், நல்லவர்கள் என்பதால், கூடிச் செயற்படும் பண்புடையோராகவே இருப்பர். கட்சி நலனுக்கு அப்பால் மக்கள் நலனிலேயே கரிசனை மிக்கவர்களாகவும் இருப்பர்.

ஆகவே தெரிவுகள் ஒன்றும் பிரச்சினையில்லை. அதற்கான முறைமையைக் கூறி வழிப்படுத்த வேண்டியதே பொறுப்பான தரப்புகளின் பணியாகும். கட்சி, தலைமை, சின்னம், கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் சிந்திப்பதற்குப் பதிலாக மக்களுக்கே இவை எல்லாம் என்று சிந்திக்கப் பழக வேண்டும். உண்மையில் மக்களுக்கானவையே இவையெல்லாம்.

கருணாகரன்


Add new comment

Or log in with...