இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 37வது கூட்டத்தொடர் | தினகரன்

இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 37வது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 முதல் மார்ச் 23 ஆம் திகதி வரை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவிருக்கின்றது. இந்த 37வது கூட்டத் தொடர் இலங்கையைப் பொறுத்தளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு தினங்கள் இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவிருக்கின்றது. மார்ச் 16 ஆம் திகதியும், 21 ஆம் திகதியுமே இலங்கை தொடர்பிலான விவாத நாட்களாகும். இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கின்றார்.

இது தவிர, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கை தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் இலங்கையும் தனது அர்ப்பணிப்பு தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்களையும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கத் தயாராகி வருகின்றது. அரசு இது விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த வகையில் இம்முறை நடைபெறும் 37வது கூட்டத் தொடரானதுஇலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் மிக முக்கியமானதாகவே நோக்கப்பட வேண்டும்.

இம்முறை ஜெனீவா கூட்டத் தொடரின் போது பலதரப்புப் பிரசாரங்கள் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. அரசாங்கம் ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்பு போலவே உயர் மட்டத் தூதுக்குழுவை அனுப்பத் தீர்மானித்துள்ளது. 2015 இல் நடந்த மனித உரிமைகள் மாநாட்டு அமர்வுகளில் இலங்கை விடயங்களை எவ்வாறு கையாண்டது? அதன் பின்னர் இதுவரையில் விடயங்களை எவ்வாறு அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பன தொடர்பாக விரிவானதொரு அறிக்கையை முன்வைக்கவிருக்கின்றது.

2015க்குப் பின்னர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசு எந்தளவு தூரம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை இந்த அறிக்கையின் மூலம் பகிரங்கப்படுத்த அரசு தயாராகி வருகின்றது. அரச மட்டத்தில் இந்த கூட்டத் தொடர் குறித்து மிக ஆழமான முறையில் சகல விடயங்களையும் மீளாய்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது. கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை அரசு நன்குணர்ந்த நிலையிலேயே காய்நகர்த்தல்களை மேற்கொணடு வருகின்றது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்த்தரப்புகள் இந்தக் கூட்டத் தொடரை எந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆராய்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை மீண்டுமொரு தடவை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்குக் கொடுத்த சலுகைகள், அழுத்தங்கள் உரிய பயனைத் தரவில்லையென ஜெனீவா கருதுகின்ற நிலையில், தமிழர் தரப்பு குரல் இந்த அமர்வில் காத்திரமானதாக எடுபடலாமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

அதேபோன்று தென்னிலங்கையிலிருந்தும் இராணுவத்தரப்புக்கு ஆதரவானதொரு குரலும் அங்கு ஒலிக்கவிருப்பது கவனிக்கத்தக்கதாகும். அதற்காக தென்னிலங்கைத் தரப்பு ஏற்கனவே ஜெனீவாவில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வில் உறுப்புரிமை கொண்ட அனைத்து நாடுகளிலும் இவர்கள் தமது பிரசாரப் பணியை முடுக்கிவிடத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவற்றையெல்லாம் வைத்து நோக்குகின்ற போது இந்த 37 வது கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாகவும் அழுத்தம் மிக்கதாகவும் விமர்சனப் போக்குகள் நிறைந்ததாகவும் அமையப் பெறலாம் என்றே பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தளவில் நல்லிணக்கம் என்ற கோஷத்தையே எழுப்புகின்றது. இது ஒருவகையில் நியாயமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவுபெற்றிருக்கும் நிலையில் சர்வதேசம் திருப்திப்படக் கூடியதான செயற்பாடுகளைக் காண்பிக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ, சர்வதேசமோ இலங்கைக்கு மற்றொருமுறை காலஅவகாசம் கொடுக்க முன்வருமா என்பது கேள்விக்குறியானதாகும். அரசு தனது பதவிக்காலத்தில் அரைவாசியை நிறைவுசெய்திருககும் நிலையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்களில் எந்தளவுக்கு முன்னேற்றம் காணப்படுகின்றது என்பதில் தளம்பல் நிலைதான் காணப்படுகின்றது. இந்தச் சவாலை வெற்றிகொள்ள முதலில் உள்நாட்டில் சகலரையும் இணைத்து நல்லிணக்கத்தை கட்டயெழுப்புவதில் கூடுதல் முனைப்புக்காட்ட வேண்டும். அதுவொன்றே சர்வதேசத்துக்கு சாதகமாக அமைய முடியும்.

எது எவ்வாறாக இருந்த போதிலும் பெப்ரவரியில் ஆரம்பிக்கும் மனித உரிமைகள் பேரவையின் 37 வது கூட்டத் தொடர் இலங்கைக்கு சவாலாக அமையாமல் சாதகத்தன்மையை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை இலங்கை கையாள வேண்டுமென்பது கட்டாயமானதாகும். அரச உயர் மட்டம் இவ்விடயத்தை பரந்தளவில் கவனத்தில் கொண்டு சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டும். ஏனெனில் நல்லிணக்கப் பொறிமுறையை அமுல்படுத்துவதில் அரசுக்கு இன்னமும் பின்னடைவே காணப்படுகிறது. அது வடக்கு கிழக்கு மக்களுக்கு கூட திருப்தி தரவில்லை.

அரசு முதலில் அனைத்து இன மக்களதும் மனங்களை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும். மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படுவதன் மூலமே நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.


Add new comment

Or log in with...