Friday, March 29, 2024
Home » இஸ்லாத்தின் பார்வையில் அல் அக்ஸா

இஸ்லாத்தின் பார்வையில் அல் அக்ஸா

by sachintha
November 3, 2023 10:52 am 0 comment

பலஸ்தீன் பெறுமதியான ஒரு தேசமாகும். இஸ்லாத்தின் ஒளியில் பலஸ்தீனை நோக்கும்போது அதன் அந்தஸ்தையும், முக்கியத்துவத்தையும் சரியாக அறிந்து கொள்ளலாம். அதனால் தான் முஸ்லிம்களின் பார்வை அதன் மீது சாய்கிறது. உள்ளங்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறது. அருள்நிறைந்த அல் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அங்குதான் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் மூன்றாவது புனிதஸ்தலமுமாக விளங்குகிறது.

பலஸ்தீனினதும் அல் அக்ஸாவினதும் சிறப்புக்கள் குறித்து அல் குர்ஆன் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்தியம்பியுள்ளது. பலஸ்தீனை அருள்புரியப்பட்ட பூமி என்று அது குறிப்பிட்டுள்ளது.

‘தனது அடியானை இரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அருள் சூளப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்து சென்றவன் மிகவும் தூய்மையானவன்’ (இஸ்ரா:01). இங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ அருள் செய்திருப்பதாக, பரகத் உள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த அருள், அறிவு, பொருளாதாரம், ஆன்மீகம், உற்பத்தி… போன்ற பல துறைகளில் காண்கிறோம்.

அதேநேரம், ‘நாம் அவரையும் (இப்றாஹீம் – அலை) லூத் அலை அவர்களையும் அருள்செய்யப்பட்ட பூமியில் பாதுகாத்தோம்’ (அன்பியா:71) என்றும் அல் குர்ஆன் தெரிவித்திருக்கிறது.

இது ஷாம் தேசத்தைக் குறிப்பதாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். பலஸ்தீனை குறித்துக்காட்டும் ஒரு வசனம் என்பதே அவரது கருத்தாகும்.

மேலும், ‘நாம் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வேகமாக வீசும் காற்றைக் கொடுத்தோம். அது அவரின் கட்டளைப்படி எந்த பூமிக்கு நாம் பரகத் செய்தோமோ அந்த பூமிக்கு அவரை கொண்டு சென்றது’ (அன்பியா: 81) என்று குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அல் அக்ஸாவினதும் பலஸ்தீனினதும் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்பும் பல வசனங்கள் அல் குர்ஆனில் காணப்படுகின்றன.

அதேபோன்று நபி (ஸல்) அவர்களும் இதன் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் பல சந்தர்ப்பங்களில் எடுத்தியம்பியுள்ளார்கள். அதாவது மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன்நபவி, அடுத்து அல் அக்ஸா முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பள்ளிவாசல்களைத் தரிசித்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது நபிவழியாகும். இறைவிசுவாசிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கும் மூன்று பள்ளிவாசல்களும் இவைதான். இந்த மூன்று பள்ளிவாசல்களைத் தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளக் கூடாது.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம், இப்னு மாஜா, அபூதாவுத்)

அந்த வகையில் மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் மடங்கு நன்மைகளையும், எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்நபவி) தொழுவது 1000 மடங்கு நன்மைகளையும், பைத்துல் முக்கதிஸில் தொழுவது 500 மடங்கு நன்மைகளையும் பெற்றுத்தரும் என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு முதலாவது முறை சென்ற போது அன்சார்களின் காணியில் இறங்கி பைத்துல் முக்கதிஸை நோக்கி தொழுதார்கள். (ஆதாரம்: புஹாரி) அன்னார் மக்காவில் இருக்கும்போது (ஹிஜ்ரத்துக்கு முன்னர்) பைத்துல் முக்கதிஸை நோக்கி தொழுதார்கள். ஹிஜ்ரத்தின் பின்னர் 16 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முக்கதிஸை நோக்கி தொழுதமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னரே அன்னார் கஃபாவை நோக்கி முகத்தை திருப்பினார்கள். (ஆதாரம்: இமாம் தபரி)

மேலும், ‘பூமியில் தோன்றிய முதலாவது பள்ளிவாசல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘மஸ்ஜிதுல் ஹராம்’ என்றார்கள். அதன்பிறகு எது எனக் கேட்க’ அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்றார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம், நஸாஈ)

பைத்துல் முக்கதிஸ் தொடர்பாக எங்களுக்கு சொல்லுங்கள் என்று நாம் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘அங்கு சென்று தொழுகையை நிலைநாட்டுங்கள். உங்களுக்கு அங்கு போக முடியாவிட்டால், விளக்கெறிக்க எண்ணெய் அனுப்புங்கள்’ என்றார்கள். (ஆதாரம்: அபூ தாவுத், இப்னு மாஜா)

இவ்வாறு நபிமொழிகள் பலவும் காணப்படவே செய்கின்றன.

இவை இவ்வாறிருக்க, பலஸ்தீனில் பல நபிமார்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்களில் இப்றாஹீம் (அலை), இஸ்மாஈல் (அலை), இஸ்ஹாக், யஃகூப், யூசுப், லூத், தாவூத், ஸுலைமான், ஸாலிஹ், ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா (அலை) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அவர்களில் பலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கலீலி என்ற நகரிலுள்ள அல்ஹரம் அல் இப்ராஹிமி என்ற பள்ளியில் காணப்படுகிறது. அங்கு இப்றாஹீம் (அலை) அவர்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் ஸாலிஹ் (அலை) அவர்களுடன் தொடர்பான ஏழு இடங்கள் பலஸ்தீனில் காணப்படுவதாகவும் அவர் இறங்கிய ஒரு இடமாக ரம்லா நகரின் ஒரு பகுதியும் கருதப்படுகிறது. இங்கு ‘துல் கரம்’ நகரில் ‘இர்தாஹ்’ என்ற ஊர் அமைந்துள்ளது. இது யஃகூப் (அலை) அவர்கள் ஓய்வாக இருந்த இடமாகப் பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது.

ஷுஐப் (அலை) அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லறைகள் காணப்படுகின்றன. ஜெரிக்கோவுக்கு அருகாமையில் மூஸா (அலை) அவர்களும், தாவூத் (அலை) அவர்கள் குத்ஸிலும் அடக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இறுதித்ததூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து இஸ்ரா (இராப்பயணம்) பயணம் மூலம் அல் அக்ஸாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கு நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடாத்திய நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்கான விண்ணுலக பயணத்தை (மிஃராஜ்) மேற்கொண்டார்கள்.

இவ்வாறு இந்த மஸ்ஜிதையும், பலஸ்தீன் பூமியையும் அல்லாஹ்தஆலா சிறப்பித்து கண்ணியப்படுத்தி வைத்துள்ளான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT