நாட்டை சீரழிவுக்கு இட்டுச் சென்றது யார்? | தினகரன்

நாட்டை சீரழிவுக்கு இட்டுச் சென்றது யார்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 2015 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர். இருந்தும் 'நாம் ஸ்ரீ.ல.சு. கட்சியினர்' என்று கூறிக் கொள்கின்றனர்.

இவர்களின் பின்புலத்தில் அண்மையில் 'பொதுஜன பெரமுன' என்ற அரசியல் கட்சியும் உருவாக்கப்பட்டது. இக்கட்சியை நாட்டின் பல பிரதேசங்களில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இருந்தும் அந்நடவடிக்கைகளில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எவரும் பகிரங்கமாகப் பங்கு கொள்ளவில்லை.

ஏனெனில் இவ்வரசியல் கட்சி இவர்களது பின்புலத்தில் ஸ்தாபிக்கப்பட்டாலும் அதற்கு அவர்களால் நேரடியாகவோ, பகிரங்கமாகவோ ஆதரவு நல்க முடியாது. இவர்கள் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஐ.ம. சு. முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களாவர். அதனால் அவர்கள் இவ்விரு கட்சிகள் தவிர்ந்த வேறு கட்சிகளுக்கு ஆதரவு நல்குவது, வெற்றி பெற்ற கட்சியின் சட்ட ஒழுங்கு விதிகளை மீறும் செயலாக அமைவதோடு, அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வழி செய்யும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் தாம் உருவாக்கிய கட்சி விடயத்தில் திரைமறைவில் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் அவர்களை தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாத தர்மசங்கட நிலைமைக்குள் தள்ளிவிட்டுள்ளது. அதனால் பொதுஜன பெரமுன கட்சியை உத்தியோகபூர்வமாக அங்குரர்ப்பணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு உள்ளக சுகததாச அரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் ஐ.ம.சு. முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ' ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ.ல.சு கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை சீரழிவுக்கு இட்டுச் செல்கின்றது. அதிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவே பொதுஜன பெரமுன கட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ 2006 முதல் 2014 வரையும் இந்நாட்டை ஆட்சி செய்தவராவார். ஐ.தே.க வும், ஸ்ரீ.ல.சு. க. வும் இணைந்து 2015 ஆம் ஆண்டில்தான் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. அதனால் முன்னாள் ஜனாதிபதி எந்த ஆட்சிக் காலத்தில் நாடு சீரழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது என்பதை ஒரு தரம் திரும்பி பார்க்க வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றார்.

ஏனெனில் 2015 ஜனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்கியுள்ளது. நீதிச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாக செயற்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் கடத்தப்படவுமில்லை, தாக்கப்படவுமில்லை, நாட்டை விட்டு தப்பிச் செல்லவுமில்லை. ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்படவுமில்​ைல.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய போன்ற அமைப்புக்கள் மதவாதத்தை தூக்கிப் பிடித்தன. அதனூடாக இந்நாட்டின் சிறுபான்மை இன மக்கள் பீதியுடன் வாழும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வமைப்புகள் சிறுபான்மையினரின் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து வந்தன. அத்தோடு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்து தேடுதல் நடத்து-ம் அளவுக்கு இவ்வமைப்புக்களின் அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடின. நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்ததே இதற்கான காரணமாகும். அன்று ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சீர்குலைவுகளின் விளைவாக சர்வதேச சமூகம் இலங்கையிலிருந்து தூரமானது. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர்தான் சர்வதேச சமூகம் மீண்டும் இலங்கையுடன் நெருங்கி வந்துள்ளது. உலகின் எல்லா நாடுகளும் இலங்கையுடன் நெருக்கமான உறவை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய யூனியன் இடைநிறுத்திய ஜி.எஸ்.பி பிளஸ் நிவாரணம் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ளது.

நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட எந்தவித அடக்குமுறையோ, உரிமை மறுப்புகளோ, அச்சுறுத்தல்களோ இப்போது கிடையாது. இன்று நாடு துரித முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவை எதனைக் காட்டுகின்றன என்பதை முன்னாள் ஜனாதிபதி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாடு முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதையா முன்னாள் ஜனாதிபதி நாடு சீரழிவுக்கு இட்டுச் செல்லப்படுவதாகக் கூறுகின்றார் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து ஜனநாயகம் நசுக்கப்பட்ட யுகத்திற்கு மீண்டும் செல்வதற்கு இந்நாட்டு மக்கள் சொற்பளவேனும் தயாரில்லை.

ஆகவே முன்னாள் ஜனாதிபதியும் அவர் சார்ந்தோரும் கடந்த ஆட்சிக் காலத்தையும், தற்போதைய ஆட்சிக் காலத்தையும் காய்தல்உவத்தலின்றி பார்க்க முன்வர வேண்டும். அப்போது நாடு சீரவுக்கு எந்த ஆட்சிக் காலத்தில் இட்டுச் செல்லப்பட்டது என்பதை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...