எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும் | தினகரன்

எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்

உள்ளூராட்சி தேர்தலானது ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் இக்கட்சி எவ்வளவு செல்வாக்குப் பெற்று நிற்கின்றது என்பதை கணிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தேர்தல் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திலே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.

நியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அதனை நாங்கள் வாய்ப்பாக மாற்றியுள்ளோம்.

அதற்காக மாற்று உபாயங்களை கையாண்டுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பல வகைகளில், வித்தியாசமாக நான்கு கட்சிகளில் போட்டியிடுகிறது.

இந்த தேர்தல் முறை சம்பந்தமாக எல்லோரும் புடம்போட்டுப் பார்க்கின்ற முதலாவது கலப்புத் தேர்தல். இதனை பெரிய கட்சிகளே கொண்டுவந்தன.

ஆனால், சமூகத்தின் பிரதிநிதித்துவம் பறிபோகக்கூடாது என்று சிந்திக்கின்றவர்கள், சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தங்களது சமூகப் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவே பயன்படுத்துவார்கள்.

இந்த வட்டார தேர்தலில் எங்களுடைய சமூக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலும் நாம் செயற்பட்டால், எமக்கான சபைகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்றார். 


Add new comment

Or log in with...