அமெரிக்காவுக்கு வஞ்சகம் செய்ததாக பாகிஸ்தான் மீது டிரம்ப் குற்றச்சாட்டு | தினகரன்

அமெரிக்காவுக்கு வஞ்சகம் செய்ததாக பாகிஸ்தான் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு பொய்கள் மற்றும் ஏமாற்றத்தையே தந்ததாக பாகிஸ்தான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

டிரம்ப் புத்தாண்டில் வெளியிட்ட முதலாவது ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் அடைக்கலமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ட்்விட்டர் பதிவுக்கு கடும் கோபத்தை வெளியிட்டிருக்கும் பாகிஸ்தான், அனைத்து நிதிகளுக்கும் கணக்கு இருப்பதாகவும், ஆப்கானில் அமெரிக்காவின் தோல்வியால் டிரம்ப் கசப்படைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானுக்கு ஓகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு அதிகமான நிதியை தாமதப் படுத்தி இருக்கும் அமெரிக்கா அதனை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதில் அமெரிக்கா போதுமான அளவு செயற்படவில்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. “கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்களுக்கு அதிக தொகையை கொடுத்தபோதும் எமது தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் எமக்கு பொய்யையும் ஏமாற்றத்தையும் தவிர வேறு ஒன்றையும் தரவில்லை” என்று டிரம்ப் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

இதில் அவர் மேலும் குறிப்பிடும்போது, “போதிய உதவி இன்றி ஆப்கானில் நாம் பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். இது தொடர முடியாது!” என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தான் ஜியோ தொலைக்காட்சிக்கு குறிப்பிடும்போது, “அமெரிக்கா அளித்த உதவித்தொகை குறித்த அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்றார். டிரம்பின் இந்த ட்விட்டருக்கு எதிர்ப்பு வெளியிட்டு பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருக்கு பாக். வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. 


Add new comment

Or log in with...