உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு | தினகரன்

உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு

 

2018 ஆம் ஆண்டு ஆரம்பமானதை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சுயேச்சைக் குழுவும் தத்தம் பலத்தையும் மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்திக் கொள்வதில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கான முயற்சிகளையும் அவை முன்னெடுத்துள்ளன.

இதன் நிமித்தம் தற்போது பல்வேறு பிரதேசங்களிலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளும், தெருவிளக்கு பொருத்துதல்களும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு இது வருடத்தின் தொடக்க காலமாக இருப்பதால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை விநியோகிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அத்தோடு பிறந்த நாள் பரிசில்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இவை இவ்வாறிருக்க, பொருட்கள் ரீதியிலும் வாக்காளர்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு வாக்களிப்பு காலம் அண்மிக்கும் போது நிதி ரீதியிலான ஊக்குவிப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ஏற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றும் உள்ளன.

உண்மையில் மக்கள் பிரதிநிதியாக விரும்புபவர்கள், அவர்கள் மக்களுக்கு சேவையாற்றியபடி மக்களோடு மக்களாக இருக்கக் கூடியவர்களாவர். அவ்வாறானவர்கள்தான் உள்ளூராட்சித் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். இதைவிடுத்து தம் சுயகௌரவத்திற்காகவும், அதனை ஒரு வருமானம் ஈட்டும் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர்களும்தான் தேர்தலில் எவ்வாறாவது வெற்றி பெற்றிட முயற்சி செய்வர். இதற்கு கடந்த காலத்தில் நிறையவே உதாரணங்கள் உள்ளன. அப்படியாவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அவர்கள் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுவர். ஏனெனில் அவர்கள் வாக்காளர்களுக்கு உதவிகளை வழங்கி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதே இதற்கான காரணமாகும்.

இதன் விளைவாகக் குறித்த வாக்காளர்கள் குறித்த உள்ளூராட்சி சபையின் பதவிக் காலம் முடியும் வரையும் உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகம் கொடுப்பர். இவை கடந்த கால அனுபவங்களாகும். அவ்வாறான நிலைமை எதிர்காலத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இந்தப் பின்புலத்தில்தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இத்தேர்தலை நீதியாகவும் நேர்மையதாகவும் நடாத்தி விடுவதில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது. இதன் நிமித்தம் அவ்வப்போது ஒழுங்குவிதிகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

அந்தவகையில் தற்போதைய தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் சகல உதவிகளுக்கும் தடை விதித்துள்ள சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள், அபேட்சகர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஊடாக அறிவித்தும் இருக்கின்றது.

இந்த அறிவிப்பின்படி, 'உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது கடசிகளின் ஊக்குவிப்புக்காக அரச நிதியொதுக்கீட்டின் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ நிதியுதவிகளை வழங்குதல் அல்லது பொருட்களை வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இத்தடை உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பின் ஊடாக தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சியையோ அல்லது சுயேச்சைக் குழுவைவோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கவென அரச நிதியில் இருந்தோ அல்லது சொந்த நிதியில் இருந்தோ பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் சட்ட விரோதமான செயல்களாக ஆக்கப்பட்டுள்ளது.

அதனால் இவ்வாறான செயற்பாடுகள் அரச நிதியின் மூலம் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் அரச அதிகாரிகளும், அவ்வாறான வைபவங்களில் பங்குபற்றும் அரசியல்வாதிகளும் அபேட்சகர்களும் அவை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை எற்படும். அதேநேரம் இவ்வாறான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அவ்வைபவங்களில் பங்குபற்றிய அரசியல்வாதிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அபேட்சகர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்த நிதி மூலம் பணமாகவோ பொருட்களாகவோ உதவிகளைப் பகிர்ந்தளித்தலானது தேர்தல் சட்டங்களில் காணப்படும் இலஞ்சம் வழங்குதல் சட்டத்தைச் சார்ந்தவை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.

ஆகவே இத்தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளையோ, சுயேச்சைக் குழுக்களையோ, வேட்பாளர்களையோ, வாக்காளர்களையோ ஊக்குவிக்கக் கூடியவகையில் நிதி ரீதியாகவோ, பொருள் ரீதியாகவோ எந்த உதவியையும் அளிக்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் இந்த ஏற்பாட்டின் ஊடாக உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு வாக்காளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுடையதாகும். 


Add new comment

Or log in with...