Wednesday, April 24, 2024
Home » அக்கரைப்பற்று கடற்கரையை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணியில் சன்றைஸ் கழகத்தினர்

அக்கரைப்பற்று கடற்கரையை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணியில் சன்றைஸ் கழகத்தினர்

by sachintha
November 3, 2023 1:16 pm 0 comment

அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவரும் அக்கரைப்பற்று சன்ரைஸ் விளையாட்டுக்கழக அங்கத்தினர்கள், தமது ஓய்வு நேரத்தை களிக்கவரும் பொதுமக்களை மிகவும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுமாறும், குப்பைகளையும் கழிவுகளையும் கடற்கரையில் வீசி மாசுபடுத்த வேண்டாம் என தங்களது குழந்தைகளுக்கு அறிவுரை கூறுமாறும் வேண்டியுள்ளனர்.

சன்ரைஸ் கழகத்தினர் ஒவ்வொரு மாதத்தின் முதலாவது சனிக்கிழமைகளில் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின் றனர். இவர்கள் கடற்கரையில் அங்குமிங்கும் வீசப்படும் வெற்றுப்போத்தல்கள், பிளாஸ்டிக் கழிவுகள், பாவித்த கடதாசிகள் போன்றவற்றை அகற்றி அப்பிரதேசத்தை துப்புரவு செய்கின்றனர்.

இங்கு ஓய்வு நேரங்களைக் களிக்க வரும் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தாம் பாவித்த பொருட்களை கடற்கரையில் வீசுகின்றனர். சாப்பிட்ட எச்சங்களைக்கூட கண்டபடி வீசுகின்றனர். அது மாத்திரமன்றி ஓய்வுநேரத்தை நிம்மதியாகக் கழிக்க வருவோர் கூட பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் கடற்கரைச்சூழல் மாசடைகின்றது. இந்த ஒழுங்கற்ற செயல்களால் சுத்தமான காற்றையும் அழகிய சூழலையும் நாடிவரும் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளளாகின்றனர். இதனை நன்கு உணர்ந்தே சன்ரைஸ் கழகத்தினர் இந்தப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பொதுமக்கள் இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் இனிமேலாவது ஈடுபடக் கூடாதென்று சன்ரைஸ் கழகத் தலைவர் எம்.எச்.ஜெயினுதீன் வேண்டுகின்றார். இது தொடர்பாக அவர் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் “இது நமது கடற்கரை. இதனைப் பாதுகாப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும். அந்த உணர்வு எம்மத்தியில் எப்போதும் இருக்க வேண்டும். நாம் இதனைப் பாதுகாப்பதற்கு உதவ முடியாவிட்டாலும் இதனை மோசமான நிலைக்குத் தள்ளக் கூடாது”என மிகவும் வினயமாக வேண்டியுள்ளார். கடந்த பத்து வருடங்களாக மாதத்தின் முதலாவது சனிக்கிழமைகளில் இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தப்பணிக்கு அக்கரைப்பற்று மாநகரசபை தமது கழிவகற்றும் வாகனங்களை வழங்கி வருகின்றது. இப்பகுதியிலுள்ள வோக்கேர்ஸ் யூனியன் அமைப்பினர் வை.எம்.எம்.ஏ, இயக்கத்தினர்,அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினர், புல்லட்ஸ் விளையாட்டுக்கழகம், சிவில் அமைப்புகள் மற்றும் முற்போக்கு எண்ணம் படைத்த சகலரும் உதவிகளும் உற்சாகமுமளித்து வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, இந்தப் பணியில் பங்குகொள்ளும் தொண்டர்களுக்கும் சமுக ஆர்வலர்களுக்கும் தனவந்தர்களும் அமைப்புகளும் சிற்றுண்டிகள் வழங்கி இப்பணிக்கு மேலும் உற்சாகமூட்டி வருவதாகவும் ஜெய்னுதீன் மேலும் தெரிவித்தார்.

கலாபூசணம் எம்.எ.பகுர்தீன்…

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT