Home » மலையகத்தில் மிகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள்!

மலையகத்தில் மிகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள்!

by sachintha
November 3, 2023 6:00 am 0 comment

தோட்டச் செய்கையாளர்கள் பாதிப்பு, தொழிலாளர்களுக்கு நாட்சம்பளம் வழங்க முடியாத நிலைமை!

நுவரெலியா மாவட்டம் மரக்கறிப் பயிர்ச்செய்கைக்கு பிரபல்யம் மிக்கதாகும். நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, ஹய்பொரஸ்ட், நானு ஒயா, இரதாலை, லிந்துலை, மெராயா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்கள் மரக்கறி விவசாயத்தில் சிறப்ப் பெற்ற பிரதேசங்களாக விளங்குகின்றன.

அதிலும் நுவரெலியா, கந்தப்பளை பிரதேசம் மரக்கறி விவசாயத்தில் ‘தங்கம் விளையும் பூமி’ என காலம் காலமாக போற்றப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தில் விவசாயம் செய்யப்படும் உருளைக்கிழங்கு, லீக்ஸ், கோவா, பீட்ரூட், கரட், ராபு, நோக்கல், சலாது, கொத்தமல்லி இலை, மிஞ்சி இலை உட்பட பலதரப்பட்ட மரக்கறி வகைகளுக்கு நமது நாட்டில் நன்மதிப்பு உள்ளது. வெளிமாவட்ட பொதுச்சந்தைகள் மற்றும் கிராமப்பகுதிகளில் அவற்றுக்கு நல்ல மதிப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் நுவரெலியாவில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் மரக்கறி செய்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரக்கறி விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழ்கின்ற சிறிய, நடுத்தர மற்றும் விவசாயப் பண்ணை நடத்தும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

விவசாயச் செய்கைக்கு செலவிட்ட பணத்தைக் கூட மீளப்பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் கடன் காரணமாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாகினர். அவர்கள் பாரிய பொருளாதாரச் சிக்கலுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நுவரெலியா மாவட்டத்தில் லீக்ஸ், கரட், பீட்ரூட், கோவா போன்ற மேலும் பல மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி கண்டதால் இப்பயிர்ச்செய்கை மூலம் இலாபத்தை நம்பியிருந்த விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை முன்னெடுக்கும் தோட்ட உரிமையாளர்களிடம் தினச்சம்பளத்திற்குத் தொழில் செய்யும் தொழிலாளர்களும் வருமானம் இழந்துள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமையில் மரக்கறித் தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். மரக்களிகளின் விலை வீழ்ச்சி தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தோட்டச் செய்கையாளர்களும் அவர்களிடம் தொழில் புரியும் தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதம் முதல் நுவரெலியாவில் லீக்ஸ் விலை மோசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ லீக்ஸ் 30 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரை மொத்த விலைக்கு சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்காகக் கொள்வனவு செய்யப்படுகிறது.

இம்மாவட்டத்தில் ஏனைய பயிர்களை விட லீக்ஸ் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று மரக்கறிச் செய்கையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மரக்கறிச் செய்கையாளர்கள் கடன் பெற்று இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்கு மரக்கறிகளை உற்பத்தி செய்ய உரம், மருந்து, ஆட்கூலி என அதிகளவான செலவுகளை செய்கின்ற போதும், அறுவடை காலத்தில் விலை வீழ்ச்சி ஏற்படுவது பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. மரக்கறி விலையைத் தீர்மானிப்பதில் இடைத்தரகர்கள் செல்வாக்கு செலுத்துகின்றனர். தரகர்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் மரக்கறிச் செய்கை முதலாளிமார்களுக்கும் தொடர்பு உள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT