ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் மற்றொரு அபத்தம்! | தினகரன்

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் மற்றொரு அபத்தம்!

தமிழ்நாடு அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அரங்கேறி வருகின்ற பாமரத்தனமான காட்சிகளில் மற்றொன்றுதான் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு!

சினிமாக் கவர்ச்சியானது இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருவது ஒன்றும் புதுமையானதல்ல. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை நிறைந்த இருபெரும் முதலமைச்சர்களை உருவாக்கியமைக்கு சினிமாக் கவர்ச்சிதான் நேரடியான காரணம். அது மாத்திரமன்றி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மேலுமிரு தலைவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதற்கும் சினிமாக் கவர்ச்சி கணிசமான மறைமுக பங்களிப்பைச் செய்துள்ளது என்பதையும் மறைப்பதற்கில்லை.

அரசியலில் சினிமாக் கவர்ச்சி ஆதிக்கம் செலுத்துகின்ற பிற்போக்குத்தனம் தமிழ்நாட்டுக்கு மாத்திரமே உரியதும் அல்ல. அயல் மாநிலங்களில் என்.டி.ராமராவ், ராஜ்குமார் போன்றவர்களெல்லாம் முதலமைச்சர் பதவி வரை முன்னேறிச் சென்றதற்கான காரணமே அங்குள்ள மக்களின் சினிமா மீதான அதீத மோகம்தான்.

சினிமாவின் கதாபாத்திரத்தன்மையே அங்கு மக்கள் மத்தியிலான செல்வாக்கைத் தீர்மானிக்கின்றது. அநீதிகளை எதிர்த்துப் போராடி, அடிமட்ட மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் பாத்திரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற கதாநாயகனை மக்கள் ஆதர்ஷ புருஷராக ஏற்றுக்கொண்டு நிஜவாழ்வில் அவனுக்கு தலைமைத்துவத்தை வழங்க இலட்சியம் கொள்கின்றனர்,

அவனது சினிமாப் பாத்திரத்தையும் நிஜவாழ்வையும் ஒன்றித்து பொருத்திப் பார்க்கின்ற பாமரத்தனமே அந்நாட்டில் இன்னும் கூட ஆதிக்கம் செலுத்துவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. மக்களின் இத்தகைய அப்பாவித்தனமான மனோபாவம் காரணமாகவே கல்விப் புலமை உள்ளவர்களாலோ அல்லது மக்கள் நலன் மீது உண்மையான கரிசனை கொண்ட ஆளுமைகளாலோ தமிழ்நாட்டின் அரசியலை சீராக வழிநடத்திச் செல்ல முடியாத துரதிர்ஷ்டமான சூழல் இன்னுமே தொடர்ந்தபடி செல்கின்றது. சினிமாக் கவர்ச்சியும், போலித்தனங்களும் தமிழ்நாட்டு அரசியலை முழுமையாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன. உலகம் போற்றுகின்ற பெரும் சான்றோர்களையெல்லாம் ஈன்றெடுத்த அந்த மண்ணில் இப்போது அரங்கேறுகின்ற அபத்தங்களையெல்லாம் உலகம் கேலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான கடந்த சுமார் ஒரு வருட காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைவரம் வேடிக்கையானதாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஒருவருட காலத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்ற இரண்டு முதலமைச்சர்களை அம்மாநிலம் கண்டுவிட்டது. அதேசமயம் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சசிகலா நடராஜன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான சிறுகாலகட்டத்தில் ஆளும் அ.தி.மு.கவையே கைப்பற்றி முதலமைச்சர் ஆசனத்தையே நெருங்குகின்ற அளவுக்கு உயர்ந்து சென்றார். இவ்வாறான பரபரப்புக் காட்சிகள் அனைத்துமே கடந்து போயுள்ள இன்றைய நிலைமையில், அ.தி.மு.கவின் தலைமையையும் முதல்வர் நாற்காலியையும் கைப்பற்றிக் கொள்ளும் பெரும் தந்திரோபாயத்துடன் காய்நகர்த்தி வருகின்றார் தினகரன்! ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் இவ்வாறு செல்வாக்குச் செலுத்தி வருகின்ற அனைவருமே பெரும் ஊழல் மோசடிகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்பதுதான் இங்குள்ள வேடிக்கை!

தமிழகத்தின் இவ்வாறான வேடிக்கை அரசியல் போக்கு தற்போது வேறொரு திசையை நோக்கி நகர்ந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. நடிகர் கமல்ஹாசனின் அரசியல் ஈடுபாடு தமிழகத்தின் கற்றோர் மட்டத்தில் ஓரளவு செல்வாக்குச் செலுத்தியிருப்பது உண்மையாக இருப்பினும், பாமர மக்கள் மத்தியில் அது பாரிய தாக்கத்தைச் செலுத்தியிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அரசியல் பிரவேச அறிவிப்பானது, தமிழகத்தின் அரசியலில் கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. தமிழகத்தின் கற்றோர் மட்டம் குறைவாக இருப்பதனாலும், அடிமட்ட பாமரமக்களே மாநிலத்தின் அரசியலைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதனாலுமே ரஜினியின் அரசியல் பிரவேசம் அங்கு இப்போது களேபரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர் பட்டாளம் நடத்திய மகிழ்ச்சிக் களிப்புக் குதூகலக் கொண்டாட்டங்களில் பற்கேற்றோரின் முகங்களில் பாமரத்தனமே வெளிப்பட்டதை நன்றாகவே காண முடிந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தின் மீட்பராகவே ரஜினியை அவரது ரசிகர்கள் அங்கே சித்தரித்திருந்தனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 2020 இல் நடைபெறப் போகின்றது. தி.மு.க மற்றும் அ. தி.மு.க ஆகிய இரு பிரதான அணிகளும், மற்றொரு புறத்தில் தினகரன் தரப்பும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்ற இவ்வேளையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பெரும் தாக்கத்தைச் செலுத்தாமல் இருக்கப் போவதில்லை. ஏனெனில் கல்வியறிவற்ற பாமர மக்களே தமிழக அரசியலைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

ரஜினி என்பவர் ஜனரஞ்சகமான ஒரு சிறந்த நடிகர். எவ்வகையான ரசிகர்களையும் இரண்டரை மணி நேரம் அவரது சினிமாவில் மனம் லயித்து வைத்திருக்கவல்ல ஆற்றல் நிறைந்த தனித்துவமான நடிகர் அவர். சினிமாவுக்கு அப்பால் நோக்குகையில் ரஜினி என்பவர் நலிவுற்ற மக்களுக்காகவும் கூட எதுவுமே இதுவரை செய்ததில்லை.

சினிமாவில் அவர் ஏற்கின்ற கதாநாயகப் பாத்திரங்களும், அவர் பேசுகின்ற வார்த்தைகளும் கதையுடனேயே பொருந்திப் போகின்றன. சினிமா கதாபாத்திரம் போலவே பொதுவாழ்விலும் அவர் விளங்குவாரென்று எண்ணுவது அறிவீனத்தின் உச்சம். தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் எத்தனை காலத்துக்கு இதுபோன்ற அபத்தங்கள் தொடரப் போகின்றன என்பதுதான் தெரியாதிருக்கின்றது. 


Add new comment

Or log in with...