தென்னிலங்கையில் யார் தலைவர்? உள்ளூராட்சி தேர்தல் தீரமானிக்கும் | தினகரன்

தென்னிலங்கையில் யார் தலைவர்? உள்ளூராட்சி தேர்தல் தீரமானிக்கும்

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

தென்னிலங்கையில் யார் தலைவர் என்பதனை நிர்ணயிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி தேர்தல் அமைந்துள்ளது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமைந்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது எதிர்கொள்ளப் போகும் தேர்தலில் மக்களுக்குப் பாரிய ஆதங்கம் உள்ளது. எமது பிரதேச அபிவிருத்தி விடயங்களில் கரிசனை காட்டவில்லை என்ற ஆதங்கமும் உள்ளது. அதில் உண்மையும் உள்ளது.

இது தேசிய கரிசனை சார்ந்த தேர்தல். தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நிர்ணயிக்கும். அந்தளவிற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எமது அரசியல் போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில் பாரிய ஆட்சி மாற்றத்தினை உருவாக்கியவர்கள் என்றவகையில் நாங்கள், இந்த தேர்தலில் கரிசனை கொள்ள வேண்டிய சமயம் இது.

யாரைத் துரத்தி அடித்தோமோ, அவர் மீண்டும் வந்துவிடுவாரோ, வருவதற்கு இந்ததேர்தல் படிக்கற்களாக அமைந்துவிடுமோ என்பதற்கும் நாங்கள் கரிசனை கொள்ள வேண்டும். நாங்கள் இங்கு சொல்வது அங்கே எதிரொலிக்கின்றது. மக்கள் மத்தியில் கொடுத்த ஆணை என்ன, ஒரு சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வு சமஷ்டிக் கட்டமைப்புக்குரிய கேள்விகள் தற்போது, தமிழ் தரப்பில் எழும்புகின்றபோது, ஒரு விடயத்தினை திரும்ப திரும் சொல்கின்றார்கள்.

சமஷ்டிக்கும் அப்பால் போகின்ற ஒன்று. கனடாவிலும் இந்தியாவிலும் அதிகளவான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால்,அதிகாரங்களைத் திருப்பிக்கொடுக்கலாம்.

அது தான் சமஷ்டி, ஆனால், அதிகளவான மாநிலங்கள் என்றால், 7 இல் இரண்டு எங்களுடையது. அந்த இரண்டையும் ஒன்றாக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இடைக்கால அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார். இந்த சொற்கள் தொடர்பாக மக்களுக்குப் பயம் இருக்கின்றது.

ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சி அல்ல என முதலாவது பக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றது.

வடக்குகிழக்கு இணைப்பு இல்லை என ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்கு வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என ஒத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் கேள்வி எழுப்பினார். பொதுவாக கொடுக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும் 3 தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தெரிவு. வடகிழக்கு இணைந்து ஒரு மாநிலமாக இருக்க வேண்டுமென்பது. அவ்வாறு இருக்கும் போது, எப்படி கைவிட்டுவிட்டோம் என்று சொல்ல முடியும். மாகாணங்கள் இணங்கினால் சேர முடியுமென்றும் உள்ளது. மூன்றில் இரண்டு சாதகமாக அனைத்துக் கட்சியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற போது, அதனை எமது நிலைப்பாடாக ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றோம்.

இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என தெளிவாக சொல்லியிருக்கின்ற போது, வடகிழக்கு இணைந்த மாகாணமாக இருப்பது தெரிவு என்று சொல்லியிருக்கின்ற போது, இதுவரையில் மக்களுக்கு என்னத்தைச் செய்தோம் என திடமாக மக்கள் மத்தியில் சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இரண்டு வருடத்தில் அரசியல் தீர்வு என சொல்லியிருக்கின்றீர்கள், இதுவரையில் அரசியல் தீர்வின் இதுவரை வந்திருக்கின்றோம்.

சரி வரும் என நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். சரிவராது என இருந்தால், கடைசி வரை எந்தவிடயங்களும் சரி வராது. இது எமது மக்களுக்குரியதென நம்பி செயற்பட வேண்டும். நம்பிக்கை இல்லாமல் செயற்படாமல் விட்டால் அது நடக்காது.

அரைவாசி தூரத்தில் வந்துள்ள இடைக்கால அறிக்கையில் இருப்பது, இவ்வளவு தூரம் வந்தபின்னர் நிறைவேறுமென எவரும் ஆருடம் சொல்ல முடியாது. நாங்கள் தவறிழைத்தோம் என இருக்கக் கூடாது. காணி அதிகாரங்களில் சில குறைபாடுகள் உண்டு,அதை மீதி அரைவாசிக் காலத்தில் திருத்தி அமைத்துச் செய்வோம்.

எழும்பி நிற்கும் பிள்ளை நடக்கப் பழகிற காலத்தில் செய்வோம். செய்யாமல் விடமாட்டோம். எல்லாம் முடிந்துவிட்டதென்று அல்ல.

பிள்ளை எழுந்து நிற்கவில்லை. தவழ்ந்துகொண்டிருக்கின்றதென்று சொல்வது அப்பட்டமான பொய்.

அது பொய் என்பதை மக்கள் இடத்தில் சொல்வதற்கு தயங்கக்கூடாது. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என எழுத்து மூலம் சொல்லப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள். சமஷ்டியை கைவிட்டுவிட்டார்கள் என்ற கேள்விக்குரிய பதிலை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...