ஆசியாவின் போதைப் பொருளற்ற நாட்டுக்கான பிரதிக்ைஞ | தினகரன்

ஆசியாவின் போதைப் பொருளற்ற நாட்டுக்கான பிரதிக்ைஞ

 உலகில் மிகவும் சவால் மிக்கதொரு பிரச்சினையாகக் காணப்படுவது போதைப் பொருள் பாவனையாகும். உலகம் இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுகூட போதைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதேயாகும். இளைஞர் சமுதாயம் போதைக்கு அடிமையாகி இருப்பதன் காரணமாக மனித சமுகத்தின் எதிர்காலம் அச்சம் கொண்டதாகவே காணப்படுகின்றது. போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்காக எவ்வளவு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவற்றால் உரிய பயனை அடைவதில் சவால்களையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. இன்று போதைப் பாவனையால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஆசிய நாடுகளே ஆகும். இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதொன்றாகும்.

தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபை புதன்கிழமை நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் ஆய்வுத் தரவுகளும் அதிர்ச்சி மிக்கதாகவே உள்ளன. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் பாவனை நாளாந்தம் அதிகரித்த வண்ணமிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தவோ, தடுப்பதற்கோ போதுமானதாகக் காணப்படவில்லையென தேசிய அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டிருக்கிறார்.

எமது நாட்டில் போதைப் பொருள் பாவனையானது அண்மித்த காலத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. அரசாங்கத்தின் கொள்கை மற்றும் வேலைத் திட்டங்கள் மூலம் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் உரிய வெற்றியைத் தரவில்லை என்ற கசப்பான உண்மையை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். 2015 ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் போதைப் பொருள் சம்பந்தமான குற்றச் செயல்களுக்காக 82482 பேருக்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் கூடுதலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

2016ல் போதைப் பொருள் பாவனையாளரின் எண்ணிக்கையானது மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. 2017 ல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டறிக்கையின்படி 50 ஆயிரம் பேர் ஹெரோயினுக்கும் ஒரு இலட்சம் பேர் கஞ்சா பாவனைக்கும் அடிமைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2017 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் 27 ஆயிரம் பேர் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காகவும் 47 ஆயிரம் பேர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்குவதால் மாத்திரம் போதைப் பொருட்களையோ, பாவனையையோ முற்றாக ஒழித்துவிட முடியும் என்று எண்ண முடியாதுள்ளது. சட்டங்களாலும், தண்டனை வழங்குவதாலும் இது சாத்தியப்பட முடியாதுள்ளது கடந்த கால அனுபவங்கள் இதனை உணர்த்தியிருக்கின்றன. இதற்காக மாற்று வழிகள் மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ வலியுறுத்தியிருக்கிறார்.

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கு அரச சார்பற்ற அமைப்புகளும், அரச அமைப்புகளும் பகிரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வெற்றி காண வேண்டுமானால் நாம் முக்கிய விடயமொன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துவதைவிட அவர்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் புனர்வாழ்வுத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். 2007ம் ஆண்டின் 54 ம் இலக்க சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுத் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டடுவரவேண்டும்.

இந்த அடிப்படையில் ஜனாதிபதி போதை ஒழிப்பு பிரிவும், பொங்கட நிறுவனம் மற்றும் தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையும் ஒன்றிணைந்து அடுத்த இரண்டாண்டுகளுக்குள் அதாவது 2018/19 ஆண்டுகளுக்குள் கிராமிய மட்டத்திலிருந்து புதிய திட்டத்தை முன்னெடுக்கவிருக்கின்றது. ஆசியாவில் போதை பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் முதற் கட்டமாக பாடசாலை மட்டத்திலிருந்து செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், அறிவுறுத்தல்கள், போதைப் பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் பற்றியதான விரிவுரைகளை நடத்தப்படவிருக்கின்றன.

அடுத்து கிராமிய மட்டத்திலிருந்து போதைப் பொருள் பாவனைக்கு எதிரான கொள்கைப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிகார மட்டத்தில்லாமல் மக்களோடு மக்களாக இரண்டரக் கலந்து இத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய ஔடத கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சபையின் இலக்கை அடைய முடியும் என நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான திட்டமாக இது காணப்படுவதால் மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.

இத்தருணத்தில் நாம் ஒருவிடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால், அரசால் மாத்திரம் இதில் வெற்றி இலக்கை அடைய முடியாது. பொறுப்பு அரசுக்கு மட்டுமானதல்ல பொது மக்களுக்கும் இதில் பாரிய கடப்பாடு உள்ளது. நாட்டையும் எமது இளம் சந்ததியினரையும் இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் கடமை ஒவ்வொருவர் மீதும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டாயமாக இந்த விடயத்தில் எமது பணி என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து எமது குடும்பங்களின் உறுப்பினர்களிடம் ஆரம்பித்து உறவுகள், அண்டைவீட்டார் ஊர் மக்கள் அனைவரையும் அறிவுறுத்தி இந்தச் சீரிய பணியில் பங்களிப்புச் செய்யும் உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நிச்சயமாக 2019 ல் எமது நாடு ஆசியாவின் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக மாற்றியமைக்க முடியும் என்பதை திடமாக நம்புவோமாக!


Add new comment

Or log in with...