ஐ.ம.சு.மு. அங்கத்துவ கட்சிகள் இணைந்து சுதந்திர உடன்படிக்கை வெளியீடு | தினகரன்

ஐ.ம.சு.மு. அங்கத்துவ கட்சிகள் இணைந்து சுதந்திர உடன்படிக்கை வெளியீடு

 

- தேர்தலை தொகுதி முறையில் நடாத்துவதற்கு கிடைத்தமை பெரும்வெற்றி
- தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 'சுதந்திரத்தின் உடன்படிக்கை' வெளியிட்டுவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (28) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஊழல் மோசடியில்லாத தூய ஆட்சிக்கான ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

நேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்ததோர் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாயிலை இந்த தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் செய்யும் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்க முடியாது. அவர்களிடம் இருக்க வேண்டியது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்திற்கான பொது நிகழ்ச்சி நிரலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலை தொகுதி முறையில் நடாத்துவதற்கு கிடைத்தமை பெரும்வெற்றியாகும் என்றும் இதன் மூலம் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்காக அரசாங்கத்திற்குள்ளும் எதிர்க்கட்சிக்குள்ளும் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டி இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியால் வெளியிடப்பட்ட ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ நாட்டினதும் தேசத்தினதும் இன்றிருக்கின்ற மற்றும் நாளை பிறக்கவிருக்கின்ற தலைமுறையின் எதிர்காலத்திற்கான உடன்படிக்கையாகும் என குறிப்பிட்ட ஜனாபதிபதி, சிறந்த எதிர்கால அரசியல் நோக்கும், தூய அரசியல் இயக்கத்திற்கு தேவையான ஆட்களும் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணி தேர்தல் சட்டதிட்டத்திற்கு ஏற்ப வன்முறையற்ற, முன்மாதிரியான தேர்தலுக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சிறந்த உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்களுக்கு வழங்கும் செய்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உடன்படிக்கை குறித்த உறுதிமொழி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டதுடன், அனைவரும் இணைந்து அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 


Add new comment

Or log in with...