யாழ். வெள்ள, வரட்சிப் பாதிப்பு முழுவதையும் மக்களே ஏற்க வேண்டும்! | தினகரன்

யாழ். வெள்ள, வரட்சிப் பாதிப்பு முழுவதையும் மக்களே ஏற்க வேண்டும்!

 

சுனாமி நினைவுகூரல் நிகழ்வில் யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச. ரவி காட்டம்

யாழ். மாவட்டத்தில் இயற்கையாகக் கிடைக்கின்ற புவியியல் நிகழ்வுகள் காணப்படுகிறதே தவிர மக்களை மிக வேகமாகப் பாதிக்கக் கூடிய வகையில் இயற்கை அனர்த்தங்கள் எதுவுமில்லை. தென்பகுதியுடனோ அல்லது மத்திய மலைநாட்டுடனோ ஒப்பிடும் போது யாழ். மாவட்டத்தின் புவியியல், பொருளாதார, சமூகப் பின்னணி சிறப்பானதாகவுள்ளது. ஆனால், நாங்களே அதனை ஆபத்தான அனர்த்தமாக மாற்றுகின்றோம். எனவே, யாழில் மாறி மாறி உருவாகும் மழை வெள்ளம் மற்றும் வரட்சிப்  பாதிப்புக்களுக்கான முழுப் பொறுப்புக்களையும் மனிதர்களே ஏற்க வேண்டும் என யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச. ரவி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சுனாமிப் பேரலையின் 13 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று (26) யாழ். காங்கேசன்துறை வீதி தெல்லிப்பழையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்தில் "மீண்டும் எழுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வருடம் தோறும் நாங்கள் அமைந்திருக்கும் புவியியல் பின்னணி காரணமாக வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை காலத்தில் மழைவீழ்ச்சி கிடைக்குமென்ற நிச்சயமான தன்மை யாழ். மாவட்டத்திற்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால், யாழ். மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக மூன்று மாதங்களுக்குள் கிடைக்க வேண்டிய மழைவீழ்ச்சியானது 15 நாட்களுக்குள் கிடைக்கின்ற போது தான் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக எங்களுடைய முன்னோர்கள் மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விறகு சேகரித்தல், புளி மூட்டை சேமித்தல், அரிசி அல்லது உணவு வகைகளைச் சேகரித்தல், குடிசைகள்  அமைப்பதற்கு கிடுகுகள் சேகரித்தல் எனப் பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் முன்னாயத்த நடவடிக்கைகளாக அமைந்திருந்தன.

எங்களுடைய மூதாதையர்கள் தங்களுடைய முயற்சியினால் யாழ். மாவட்டத்தில் பல குளங்கள்,  கேணிகளை அமைத்துள்ளார்கள். அவர்கள் தமது பிரதேசங்களின் ஆலயத் திருவிழாக்களை அண்டியுள்ள காலப் பகுதியில் குளங்கள், கேணிகளைப் புனரமைத்து அதன் ஊடாக நீரைச் சேமிப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். இதனால், வெள்ள அனர்த்த அபாயம் தவிர்க்கப்பட்டது.

தற்போது உலகில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், பல கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அனர்த்த அபாயங்களை எதிர்கொள்ள முடியாத நிலையிலுள்ளோம். அதேவேளையில் மூன்று மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரினை 15 நாள் மழை வீழ்ச்சியின் போது சேமித்து வைக்கக் கூடிய உள்ளார்ந்த  வாய்ப்புக்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.

எமது மாவட்டத்தில் நீரினைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய பல குளங்களும், கேணிகளும் மூடப்பட்டுச் சீமெந்திலான கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே குறுகிய காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சியால் வெள்ளம் ஏற்படுகின்றது. இவ்வாறான காரணங்களாலேயே வெள்ள அனர்த்தம் ஏற்படுகிறதே தவிர வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்குப் புவியியல் நிகழ்வு ஒருபோதும் காரணமல்ல.

ஆகவே, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை நிலவும் காலத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு கிடைக்கின்ற போது தான் அடுத்து வரும் 12 மாதங்களுக்கும் எமது மக்கள் வாழவும், வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியும்.

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் 24 மாவட்டங்களில் மேற்பரப்பு நீர்வளம் காணப்படுகின்றது. ஆனால், யாழ். மாவட்டம் மாத்திரம் தான் சிறப்புத் தன்மை வாய்ந்த தரைக்கீழ் நீரை மாத்திரம் மையமாகக் கொண்ட மாவட்டமாகக் காணப்படுகிறது.அந்தத் தரைக்கீழ் நீருக்கான மூல நீர் வளம் வருடத்தில் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் மாத்திரம் கிடைக்கும் நீராகவேயுள்ளது.  அந்தத் தரைக்கீழ் நீரைச் சரியாக நாம் சேமித்து வைக்க முடியாத பட்சத்தில் அது வரட்சி நிலைமையை உருவாக்கும் பிரதான காரணியாக அமைகிறது. ஆகவே, மழை நீரைச் சேமிப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்பது முக்கியமானது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

(செல்வநாயகம் ரவிசாந்)

 


There are 2 Comments

அனர்தத்தங்களுக்கு மனிதர்ககளே பொறுப்பா.?சுனாமி?

சிறப்பாகச் சொன்னீர்கள்

Pages

Add new comment

Or log in with...