யாழ். முற்றவெளியில் நாக விகாராதிபதி உடலைத் தகனம் செய்ய அனுமதி | தினகரன்

யாழ். முற்றவெளியில் நாக விகாராதிபதி உடலைத் தகனம் செய்ய அனுமதி

 

யாழ். நாக விகாராதிபதியின் உடலை யாழ். முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதவான் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பில் காலமான யாழ். நாக விகாராதிபதி சங்கைக்குரிய மீகசஜதுரே ஞானரத்னவின் உடலை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்த இராணுவத்தினர் யாழ். நகரின் மத்தியிலுள்ள முற்றவெளிப் பகுதியில் இன்று (22) அவரது உடலைத் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக வரதராஜா பார்த்தீபன் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய சமூக ஆர்வலர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பட்டுக்கமைய யாழ். நாக விகாராதிபதியின் உடலை யாழ். முற்றவெளிப்  பகுதியில் தகனம் செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியான வி. மணிவண்ணன் உள்ளிட்ட பத்து சட்டத்தரணிகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கில் யாழ். முற்றவெளிப் பகுதி மக்களின் அதிக நடமாட்டமுள்ள பொது இடமாகவுள்ள நிலையில் குறித்த பகுதியில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதுடன், இதனால் பொதுமக்களுக்குச் சுகாதார ரீதியான பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக யாழ்.மாநகர சபையிடம் அனுமதி எதுவும் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக இந்தப் பகுதிக்கு அருகில் ஆலயம், பாடசாலை, பொதுநூலகம் போன்ற பொதுவிடங்கள் காணப்படும் நிலையிலும், யாழ். நகரின் மத்தியில் அமைந்துள்ள நிலையிலும் இறந்த உடலைத் தகனம் செய்வதற்குத் தடையுத்தரவு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (22) பிற்பகல் மேற்படி வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது யாழ். பொலிஸாரும் மன்றிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது யாழ். முற்றவெளிப் பகுதி தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியாகவுள்ள நிலையில் அவர்களின் அனுமதியுடனேயே இராணுவத்தினர் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே. இதனைத் தடுத்தால் அமைதிக்குப் பங்கம் ஏற்படும்  எனவும் மன்றிற்குத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து யாழ். முற்றவெளிப் பகுதியில் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, நீதவான் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

(செல்வநாயகம் ரவிசாந்)
 


There is 1 Comment

It is quite ok

Pages

Add new comment

Or log in with...