எங்கும் அமைதி பிறக்கட்டும்! | தினகரன்

எங்கும் அமைதி பிறக்கட்டும்!

உலகமெங்கும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிகரமான நாள் இது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் யுத்தம், வன்முறை, வறுமை என மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தமது பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். நாளை தீர்வு கிடைக்கும் என பேரெதிர்பார்ப்போடு, ஏக்கங்களோடு காத்திருக்கும் மக்களுக்கு கடவுளிடமிருந்து கருணை கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கும் நாள்தான் இந்த நத்தார் பண்டிகை.

உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதலாவது அடிமட்ட மக்களுக்கே அறிவிக்கப்பட்டது.

“அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய இயேசு எனும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்பதே அந்தச் செய்தி.

அதனைக் கேட்ட மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.

தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறப் போகின்றன என சாதாரண மக்களும், இருளின் அந்தகாரத்திலுள்ள உலகம் ஒளி பெறும் என்று ஞானிகளும் மக்கள் தலைவர்களும் நம்பிக்கை கொண்டனர்.

உலக மீட்பராம் இயேசு மாளிகையில் பிறப்பார் என எதிர்பார்த்த உயர் அதிகார வர்க்கத்தினருக்கு ஏமாற்றமாகியது. இயேசு ஏழையாகப் பிறந்தார், எளிமையாக வாழ்ந்தார், வறுமைநிலை மக்களோடு வாழ்ந்தார். ஏழைகளையும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் பாவிகளையும் தேடிச் சென்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

நோய்களைக் குணமாக்கினார். ஏழைகள் பேறுபெற்றவர்கள், கடவுள் ஏழைகளோடுதான் உள்ளார் என்ற நம்பிக்கையைப் போதித்தார்.

“சிறியோரில் ஒருவனுக்கு நீங்கள் செய்கின்றதை கடவுளுக்கே செய்கின்றீர்கள்” என பகிர்ந்தளிக்க வழிவகுத்தார். கடவுள் அன்பானவர், அவர் பாவிகளை மன்னித்து வாழ்வளிப்பவர், பாவத்திலிருந்து மனந்திரும்பி அவரிடம் வருபவரை அவர் மன்னித்து அவரது பிள்ளையாக ஏற்றுக் கொள்கின்றார்.

‘கண்ணுக்குக் கண் – பல்லுக்குப் பல்’ என பழிவாங்கும் எண்ணங்களைக் கைவிட்டு ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவித்தவர். “உன்னைப் போல் பிறரையும் நேசி. ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் இடது கன்னத்தையும் காட்டுவாயாக” என்ற அவரது போதனை மனித மனதில் குரோதம், வைராக்கியம், பகைமை, விட்டுக்கொடாமை போன்றவற்றை இல்லாதொழித்து எதிரியையும் அன்பு செய்யும் எண்ணத்தை மனங்களில் தோற்றுவித்தது.

அவரது போதனைகள் வெறுமனே வார்த்தைகளாக மட்டுமல்லாமல், அவரே தம் வாழ்க்கையில் அதனை வாழ்ந்தும் காட்டினார்.

இன்று அவரது போதனையை பின்பற்றும் மக்கள் அவ்வாறு வாழ்கின்றனரா? கிறிஸ்தவ நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் நாடுகள் இதனைப் பின்பற்றுகின்றனவா? அவ்வாறு செயற்பட்டால் அவர் எதிர்பார்த்த அன்பும்,நட்பும், அமைதியும், சமாதானமும் உலகில் நிலைத்திருக்கும்.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகின்ற நாம், வர்த்தக ரீதியாகவும், வெளி ஆயத்தங்கள் ஊடாகவும் எமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றோமே தவிர அவர் எதிர்பார்த்ததை நினைத்துக் கூடப் பார்க்கத் தவறி விடுகின்றோம்.

இயேசுவைத் தள்ளி வைத்துவிட்டு ஏனைய அனைத்தையும் அவரது பெயரால் தமது சொந்த நலனுக்காக சந்தோசத்திற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன.

நத்தார் கொண்டாட முன் ஆயத்தமாக ஒரு மாத காலம் 'திருவருகைக் காலமாக' எமக்கு வழங்கப்படுகிறது. அக்காலத்தில் பிறருக்கு உதவுதல் பகிர்தல், நம்மைப் போலவே நம் அயலில் உள்ள ஏழை எளியவரும் மகிழ்ச்சியாக நத்தார் கொண்டாட வழிவகுத்தல், வார்த்தையாக அல்லாமல் செயலில் நன்மைத் தனங்களை வெளிப்படுத்தல் போன்றவற்றை செய்வதே இக்காலத்தின் அவசியமாகும்.

நாம் அதைச் செய்தோமா? எவர் எப்படியானால் என்ன, நாம் உண்டு குடித்து மகிழ்ந்தால் போதும் என்ற மனநிலை எம்மிடமிருந்தால் அதனை மாற்றிக் கொள்வோம்.

நமது தேவைகளுக்காக மன்றாடும் நாம், நம் கண்முன்னே கஷ்டப்படும் குடும்பத்தையும் ஆசீர்வதிக்குமாறு மன்றாடுகின்றோமே தவிர, நாம் அவர்களுக்கு நம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவ முன்வருகின்றோமா?

அத்தகைய மனநிலை நம்மில் வராவிட்டால் எமது இல்லத்திலோ உள்ளத்திலோ நிச்சயம் அவர் பிறக்கப் போவதில்லை.

”கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதற்கிணங்க தட்டப்படுவது எமது வீடாக இருக்கட்டும்.

நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமும் தளிர்விடத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில், அமைதி சமாதானம் நிலைப்பதற்கு நம்மாலான பங்களிப்பை வழங்குவோம். அதற்காக உழைக்கும் தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் நத்தாராக இம்முறை அமையட்டும்.

பிறக்கின்ற புதிய ஆண்டு நாடு இயேசு எதிர்பார்க்கும் அமைதி சமாதானம் நல்லிணக்கத்தில் பலப்படும் நாடாக பிரார்த்திப்போம்.

சமாதானம், அமைதி நல்லிணக்கத்தின் முகவர்களாக நாம் மாறவேண்டிய காலம் இது. ஒவ்வொருவரும் இத்தகைய சிந்தனையுடன் செயற்பட்டால் அடுத்த வருட நத்தாரை அமைதியான நல்லிணக்கம் நிறைந்த நாட்டில் நாம் கொண்டாட முடிவது உறுதி.

எவராவது செய்யட்டும், அது நமக்குரியதல்ல என பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்காமல் நம்மிலிருந்து ஒவ்வொருவரும் அதற்காக உழைத்தால் முயற்சி திருவினையாகும். அதற்கான ஆசீரை இரட்சகராம் இயேசு பிரான் வழங்க வேண்டுமென விசேடமாக பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் அமைதியும் சமாதானமும் இறையாசீரும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்துகள் உரித்தாகட்டும்! 


Add new comment

Or log in with...