இரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு | தினகரன்

இரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், போதி பெண் உறுப்பினர்களை உள்ளடக்காததன் காரணமாக, வெலிகம பிரதேச சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மு.கா.வின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அநுராதபுரம் மாவட்டத்தின் - திறப்பனை பிரதேச சபை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவினால் (மஹிந்த அணியின் மலர் மொட்டு) சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சி செயலாளரின் கையொப்பத்தின் மூலம் உரிய முறையில் வேட்புமனு உறுதிப்படுத்தப்படாததன் காரணமாக குறித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்தார்.

அதேபோன்று

  • கொழும்பு மாநகர சபை - ஜாதிக ஜனதா கட்சி
  • ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை - ஐக்கிய சோசலிசக் கட்சி
  • கெஸ்பேவ நகர சபை - சுயாதீன குழு
  • திக்வெல்ல பிரதேச சபை - மவ்பிம ஜனதா கட்சி
  • சீதுவ நகர சபை - ஜனசெத பெரமுண

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரு கட்டமாக இடம்பெற்ற வேட்புமனு தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நிரகாரிக்கப்பட்டுள்ள எந்தவொரு சபை தொடர்பிலும் தாங்கள் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவை வழங்கப் போவதில்லை என, முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தலைவருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

17 மாநகர சபைகள், 23 நகர சபைகள், 208 பிரதேச சபைகள் உள்ளிட்ட 248 உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் இடம்பெற்ற வேட்புமனுக்கள் இன்று நண்பகல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2018 இல் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

முதற் கட்டமாக 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி நிறைவடைந்தது.

இதில் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகள் 466 மற்றும் சுயாதீன குழுக்கள் 57 ஆகியன வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததோடு, அதில் பொது ஜன பெரமுண கட்சியின் 6 வேட்புமனுக்கள் உள்ளிட்ட 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...