டிசம்பர் 15; சர்வதேச தேயிலை தினம் இன்று | தினகரன்

டிசம்பர் 15; சர்வதேச தேயிலை தினம் இன்று

 

- தேயிலை தொழிலாளிகள் இன்னும் கொத்தடிமைகளாக...

சர்வதேச தேயிலை தினம் (15) இன்றாகும்.

தேயிலை தினத்தை முன்னிட்டு பல மாவட்டங்களிலும் பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தி காணாதவர்களாக வாழ்ந்து வருவதாக பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

மலையகத்தில் அதிகமானவர்கள் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்து வருவதோடு, இவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் கூட அற்ற நிலையில் பல்வேறுப்பட்ட விடயங்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இன்றைய தினம் (டிசம்பர் 15) தேயிலை தினம் கொண்டாடப்படுகின்ற போதிலும், இவ்வாறான தினம் ஒன்று இருப்பதாக தமக்கு தெரியவில்லை என இவர்கள் கவலையடைகின்றனர்.

நாட்டில் ஏனைய தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், தாம் பாதுகாப்பற்ற ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலோடு, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து விழுதல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என பல்வேறுப்பட்ட துன்பங்களோடு தொழிலை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு கூட பல போராட்டங்கள் செய்து கறுப்பு கொடிகளை பிடித்த போதிலும் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் ஒரு சதத்திற்கு கூட எங்களை மலையக அரசியல் தலைமைகளும், அரசாங்கமும் திரும்பி பார்ப்பதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை பசி, பட்டினியோடு வேலை செய்தும் உறங்குவதற்கு கூட முறையான வீடுகள் வசதி அற்ற நிலையிலும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அவர்களின் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பின்னடைவில் இருப்பதாக தெரிவிப்பதோடும், 15.12.2017 அன்றைய தேயிலை தினத்தில் தமக்கு விடுமுறை வழங்கி பூஜைகள் அல்லது பிராத்தனைகள் செய்வதற்கு கூட தகுதியற்றவர்களாகவும், இவ்வாறான செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகளும் அக்கறை காட்டவில்லை என மக்கள் தங்களது கருத்தை  வெளிப்படுத்தினர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...