O/L பரீட்சை இன்று ஆரம்பம்; 5,116 நிலையங்களில் 688,573 பேர் தோற்றம் | தினகரன்

O/L பரீட்சை இன்று ஆரம்பம்; 5,116 நிலையங்களில் 688,573 பேர் தோற்றம்

 

- ரயில் போக்குவரத்துக்கு பதில், மாற்று வழிகளை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (12) நாடு முழுவதும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சை, 5,116 பரீட்சை நிலையங்களில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

அனைத்து பரீட்சார்த்திகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு காலதாமதம் ஆகாத வகையில் மாற்று வழிகளை கையாளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் நிலையங்களை அண்மித்துள்ள பாடசாலைகள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. இம்மாணவர்கள் மாற்று போக்குவரத்து வழிகளை கையாள வேண்டியதுடன் பாடசாலை சீருடையில் பயணம் செய்வதன் மூலம் பஸ்ஸில் பயணம் செய்வதற்கான தமது ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை கொண்டிருத்தல் கட்டாயமாகும். இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட சேவையை முன்னெடுத்திருந்தது.

அடையாள அட்டை கிடைக்காமை தொடர்பில் எவரிடமிருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைககளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்தை கைவிடுமென நான் எதிர்பார்க்கின்றேன். எவ்வாறாயினும் பெற்றோரும் பாதுகாவலர்களும் மாணவர்களை காலை 8.00 மணிக்கு பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்கும் வகையில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்களுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகூற விரும்புகிறேன். பரீட்சை அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பரீட்சையின் போது பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீ்ட்சைத் திணைக்களத்திற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் அறிவிக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911
பரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கங்கள்:
0112784208, 0112784537, 0113188350, 0113140314
பொலிஸ் தலைமையகம் 0112421111
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119
ஆகியவற்றுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

(லக்ஷ்மி பரசுராமன்)

பரீட்சை நேர அட்டவணை

 

 


Add new comment

Or log in with...