சுதந்திர கட்சி, மக்கள் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு | தினகரன்


சுதந்திர கட்சி, மக்கள் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

 

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளான இன்று (14) பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மஹிந்த ஆதரவு அணியான ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் 6 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட தெஹியத்தகண்டி மற்றும் பதியதலாவ பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, அக்கரைப்பற்று மாநகர சபை சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முற்போக்கு சுயேட்சைக் குழுவினது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

அ.இ.ம.கா. கட்சியின் செயலாளரினால் வேட்புமனுவில் ஒப்பமிடப்படாததன் காரணமாகவும், முற்போக்கு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுப் பத்திரத்தில் அவர்களால் குறிப்பிடப்பட்ட வேட்புமனு தாக்கல் செய்யும் உரிய அதிகாரியான அதன் தலைவர் முகைதீன் பாவா ஆதம் லெப்பையால் சமர்ப்பிக்கப்படாமல், சீனி முஹம்மத் தல்ஹாவினால் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த அறிவித்தலைத் தொடர்ந்து தாங்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக முற்போக்கு சுயேட்சைக்குழுவின் பேச்சாளர் சாறுதீன் பிஸ்ரி தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...