'பௌத்த சமயத்துக்கு மாறிவிடப் போகின்றேன்' | தினகரன்

'பௌத்த சமயத்துக்கு மாறிவிடப் போகின்றேன்'

இந்துத் தலைவர்களுக்கு மாயாவதியின் எச்சரிக்ைக!

'இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களான 'தலித்' இன மக்களுக்கு எதிரான துன்பங்கள் இனியும் தொடருமானால் நானும் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல பௌத்த மதத்திற்கு மாறி விடுவேன்' என பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்திலுள்ள நாக்பூரில் நேற்றுமுன்தினம் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநாடு நடைபெற்ற போது மாயாவதி இந்த எச்சரிக்ைகயை விடுத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான மாயாவதி அங்கு பேசுகையில்,

"1935ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத் தலைவர்கள் தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என தெரிவித்திருந்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிலை தொடர்ந்ததால், நாக்பூரில் 1956ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தானும் புத்த மதத்தைத் தழுவினார் புரட்சியாளர் அம்பேத்கர்.

அந்த நிலை இன்றளவிலும் மாறவேயில்லை. பா.ஜ.கவின் தலைமை அமைப்புகளான சங் பரிவாரங்களும், இந்துத் தலைவர்களும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு எதிரான ஆதிக்கத்தை இன்னமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்தத் துன்பங்கள் இனியேனும் தொடரும் என்றால், நானும் அம்பேத்கரைப் போலவே புத்த மதத்திற்கு மாறி விடுவேன்" என்று எச்சரிக்ைக விடுத்தார்.

"இந்துத் தலைவர்களுக்கு நான் காலஅவகாசம் தருகிறேன். அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நானும் எனது கோடிக்கணக்கான கட்சி உறுப்பினர்களும் பௌத்த மதத்திற்கு மாறி விடுவோம் என்பதை எச்சரிக்கையாகவே கூறுகிறேன்" என தெரிவித்துள்ளார் மாயாவதி.


Add new comment

Or log in with...