தென்னிந்திய மோகத்திலிருந்து எமது சினிமா விடுபடுவது எப்போது? | தினகரன்

தென்னிந்திய மோகத்திலிருந்து எமது சினிமா விடுபடுவது எப்போது?

நம்பிக்ைக தரும் குறுந்திரைப்பட வளர்ச்சி

உலகின் தமிழ் சினிமாத்துறை வரலாற்றில் இலங்கைக்கும் ஒரு தனிஇடம் உண்டுஎன்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகம் எமது கைக்குள் அடங்கி விட்ட நிலையில் எவருக்குமே எதற்குமே நேரம் இருப்பதில்லை. இவ்வாறான அவசர உலகின் அவிழ்த்து விடப்பட்டதொழில்நுட்பக் கைதியாக மனிதன் மாறி விட்டான்.

மூன்று மணித்தியால திரைப்படம் கூட 30 நிமிடம் அல்லது 3 நிமிடத்திற்குச் சுருங்கி விட்டது. அந்த நிலையில்தான் குறுந்திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன.

நாற்பது நிமிடம் அல்லது அதற்குக் குறைந்த காலஅளவைக் கொண்ட ஓர் அசையும் படமே குறுந்திரைப்படம் எனப்படுகிறது.

இலங்கையில் தற்போதைய இளம் கலைஞர்களால் அதிகம் உருவாக்கப்பட்டு சாதனைக் கனிகளையும் எட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றன இந்த குறுந்திரைப்படங்கள்.

தமிழ் பேசும் இளைஞர்கள் திறமையானவர்கள், தீர்க்கஅறிவு உடையவர்கள் என்பதற்கு தற்கால குறுந்திரைப்படங்கள் தக்கசான்றாக விளங்குகின்றன. இருப்பினும் தமிழ் பேசும் சமூகம் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற இந்த நாட்டில் எமது இளைஞர்களின் படைப்புகள் எந்த இடத்தை வகிக்கின்றன என்ற கேள்விக்குப் பதில் கேள்விக்குறிதான்.

எவரும் உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணம் சினிமாதான் என்ற நா. முத்துக்குமாரின் வரிகளுக்கு இலங்கை தமிழ் சினிமாத்துறை, குறிப்பாக குறும்படத்துறையில் அர்த்தம் இருக்குமா என்பது சந்தேகம்தான். இதற்குஅரசியலும் முக்கிய காரணமாக அமையலாம்.

2002 ஆம் ஆண்டு 'ஸ்க்றிப்ட் நெட்' இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், பெரும்பான்மையினரின் திரைப்படத் துறைக்கு நிகரான தமிழ்த் திரைப்படத் துறையை முஸ்லிம்,தமிழர் சூழலில் உருவாக்குவதற்காக ஆகும்.

அதன் முதற் கட்டமாக குறுந்திரைப்பட படைப்பாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஒரேநாளில் குறுந்திரைப்படம் உருவாக்க முடியும் என்ற அளவுக்கு தமிழ் பேசும் இளைஞர்களின் திறமை வளர்ந்திருக்கிறது.

2007ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் சர்வதேச குறுந்திரைப்பட போட்டியில் ஸ்க்றிப்ட் நெட்டினால் தயாரிக்கப்பட்ட 'அழுத்தம்' திரைப்படம் 2007ம் ஆண்டுக்கான சிறந்த (முதலாவது) திரைப்படத்துக்கான விருதைப் பெற்றமை முக்கிய வரலாற்றுச் சம்பவமாகும்.

அதுபோன்று 2013 டிசெம்பர், 04ம் திகதி மொறட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட சிங்கள–தமிழ் குறுந்திரைப்படப் போட்டியில் அப்பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'கொலையாளி யார்?' எனும் குறுந்திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளமையும் ஒருவரலாற்றுப் பதிவாகும்.

இருப்பினும் போர்ச் சூலுக்கு முன்னர் இலங்கையின் தமிழ் சினிமா வளர்ச்சி கண்டஅளவுக்கு தற்காலத்தில் இல்லாத போதிலும், எமது தமிழ்க் கலைஞர்களின் குறுந்திரைப்படங்கள் தேசிய ரீதியில் விருதுகளைப் பெறும் அளவிற்கு வளர்ச்சி கண்டுதான் இருக்கின்றன.

அதற்கு திருகோணமலை வளாகத்தின் மாணவன் சு. ஜோயல் ஜெரஸின் '2050, Butterfly' அண்மையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றது சிறந்த சான்றாகும்.

சிங்கள குறும்படங்களோடு ஒப்பிட்டு நோக்குமளவிற்கு எமது தமிழ்ப் படங்கள் வளராமைக்கு சில பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எமது இயக்குனர்கள் எப்பொழுதுமே இந்திய சினிமாத்துறையை தழுவியே படங்களைத் தயாரிப்பதும் யுத்தம், இனப்பிரச்சினை போன்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பதும் முக்கிய காரணங்கள் எனலாம்.

மேலும் தைரியமாக முன்னின்று அனுசரணை வழங்குவதற்கு பெரிய மனிதர்கள் யாரும் தயாரில்லை என்பதும் வேதனைக்குரிய விடயம்.

எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் கூட பனைமரக்காடு,கோமாளி கிங்ஸ் போன்ற படைப்புக்கள் (திரைப்படங்கள்) வெளிவந்து நாங்களும் திறமையானவர்கள் என்று இலங்கைத் தமிழ் கலைஞர்களையும் சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு எமது இலங்கைத் தமிழ் சினிமா வளரத்தான் செய்கிறது.

ஆகவே இலங்கைத் தமிழர்களின் சினிமாஆர்வம், எதிர்பார்ப்பு, இரசனை என்பன தென்னிந்தியாவை மாத்திரமே நாடி நிற்காமல் எமதுநாட்டின் சொந்த மண்ணின் படைப்புக்களையும் சற்றுக் கவனித்தால், ஆதரவு வழங்கினால் எமது கலைஞர்களும், படைப்புக்களும் சர்வதேசஅங்கீகாரம் பெறும் என்பது உறுதி.

நஸூஹா கே. றஹ்மான்
(தொடர்பாடல் கற்கைகள்
திருகோணமலை வளாகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்)


Add new comment

Or log in with...