இலங்கையில் இப்போது இயற்கை அனர்த்த காலம் | தினகரன்

இலங்கையில் இப்போது இயற்கை அனர்த்த காலம்

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களை கடும் மழையும் வெள்ளமும் மோசமாகப் பாதித்திருக்கின்றன. நேற்றுமுன்தினம் வீசிய கடும் காற்றினாலும், பெருமழையினாலும் ஒரு நாளிலேயே ஏழு பேர் பலியாகிப் போயுள்ளனர். உடைமைகளுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.

மனித இனம் அவ்வப்போது இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 13 இலட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 440 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நாவின் பேரிடர் குறைப்பு நிலையத்தின் அறிக்கை கூறுகிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட இயற்கை அனர்த்தங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அனர்த்தங்களை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும்தான் இன்றைய உலகம் எதிர்கொண்டுள்ள சவால்.

அனர்த்தங்களை இயற்கை அனர்த்தங்கள் என்றும் மனிதனால் ஏற்படும் அனர்த்தங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். சுனாமி, புயல், பெருவெள்ளம், கடும் வரட்சி, நில அதிர்வுகள், பூகம்பம் நிலச்சரிவு, பனிச்சரிவு, எரிமலை சீற்றம் என இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த சில பத்தாண்டுகளில் மனிதனால் உருவாகும் அனர்த்தங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி காரணமாக நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றை வரம்புமுறையின்றி பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது மனித குலம்.

ஒழுங்குவிதிகளுக்கு உட்படாத கட்டுமானப் பணிகளும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளும் காரியங்களும் அனர்த்தங்களுக்கு வழிவகுக்கின்றன. மனிதன் நினைத்தால் நம்மால் இந்தப் பேரழிவுகளைக் குறைக்கலாம்.எனினும் இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது பெரும் சவாலாகும்.

இயற்கை அனர்த்தம் என்னும் போது நமக்கு நினைவுக்கு வருவது 2004-ஆம் ஆண்டு எம்மைப் புரட்டிப் போட்ட சுனாமிதான். சுனாமி ஏற்படுவதற்கு இயற்கைக் காரணங்கள் ஏராளம் இருந்தாலும், கடலில் நடத்தப்படும் அணு ஆயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் சராசரியாக ஒரு கோடி சிறிய பூமி அதிர்வுகளும் (ரிக்டர் அளவுகோளில் 2.9க்கும் குறைவான அளவு) மிகப் பெரிய பூகம்பம் ஒன்றும் (8 இற்கும் அதிகமான அளவு) ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பூகம்பம் சிலி நாட்டில் 1960ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9.5ஆக பதிவானது.

இயற்கை அனர்த்தங்களில் அதிகளவிலான உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்குக் காரணம் மனிதனின் கவனக்குறைவே ஆகும். இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்திட்டமோ ஏற்பாடுகளோ தயார் நிலையில் இல்லை என்பதால் அழிவுகளைச் சந்திக்கிறோம். இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்புகளுக்குக் காரணம் இயற்கை மட்டுமல்ல, மனிதனும்தான்.

கடலோரப் பகுதிகளில் சுற்றுலாத் தலங்கள் அமைப்பதற்காகவும், இறால் பண்ணை மற்றும் பல கட்டுமானப் பணிகளுக்காகவும் கடலோர தாவரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. 2004-ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக மோசமாக இருந்ததற்கு கடலோர பகுதியிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும்.மண்சரிவைத் தவிர்ப்பதிலும் காடுகள் உதவுகின்றன.

உயரமான இடங்களிலிருந்து மண், பாறைகள், போன்றவை திடீரென சரிதல் மண்சரிவு எனப்படுகிறது. மரம். செடி, கொடிகள் மற்றும் காடுகள் அழிக்கப்படும் போதும் இது நிகழ்கிறது. இவ்வகை அழிவை தடுக்க மலைப்பிரதேசங்களில் அதிக அளவில் மரங்களை நடுதலும் காடுகளை உருவாக்குதலும் அவசியம்.இலங்கையில் காடுகள் அழிக்கப்படும் வேகம் மிக அதிகமாக உள்ளது. மலைப் பிரதேசக் காடுகளை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம்.

அனர்த்தங்களின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனர்த்தங்களின் போது செய்யத் தகுந்த மற்றும் தகாத காரியங்கள் குறித்து மக்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் வாழ்விடங்களிலிருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்லும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தல் அவசியம். அறிவுரைகளை சரியாக பின்பற்றினால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்க்கலாம்.

வெள்ளம், புயல் அல்லது வேறெந்த அபாயமாக இருந்தாலும், அதன் அழிவு மிகவும் தீவிரமாகவும், அபாயமாகவும் இருக்கும். ஏனென்றால் சீற்றங்களைத் தாங்க போதுமான வளம் உலக நாடுகளில் இல்லை. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்கள், இதற்கு ஒரு காரணமாக அமைகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களினால் அதிக அளவு உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுகின்றன.

சூறாவளி புயல் , சுனாமி , பூகம்பம் மற்றும் எரிமலைச் சீற்றங்கள் போன்றவை இயற்கை செயல்பாடுகளினால் ஏற்படும் அனர்த்தங்கள் ஆகும். மண்சரிவு, வெள்ளம், வரட்சி தீ விபத்துகள், போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு மனித செயற்பாடுகளே பெருமளவில் காரணமாக அமைகின்றன.

தன்னை மறந்து மனிதன் எப்போது இயற்கையைப் புறக்கணிக்க ஆரம்பித்தானோ அந்த தருணத்திலிருந்தே இயற்கையும் மனிதர்களை புறந்தள்ளிக் கொண்டிருகின்றது.

நாம் நாகரிகமடைந்த போது, இயற்கையிடமிருந்து விலகி தனித்து வளர்ந்து விட்டோம். பழையனவற்றை மறந்து விட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றிக் கூட நம்முடைய குழந்தைகள் அறியாமல் இருக்கிறார்கள்.

ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘நீரின்றியமையாது உலகு‘ என்றார் வள்ளுவர். நிலம், நீர், காற்று, நெருப்பு, வான்வெளி உள்ளிட்ட ஐந்துபூதங்களின் அவசியத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.

"மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை

போல"

மனிதர்களின், பல்வேறு அடிப்படை தேவைக்காக இயற்கை வளங்கள் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணத்தால் மரங்கள், காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது.

முன்னேற்றம், அதன் போக்கில் பயணிக்கும் நாகரிகம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணத்தால் இந்த உலகம் தன் அழகை மட்டுமல்ல, தன் உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறது.

கடைசியில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்ப்பட்டு உயிர்களுக்கும், உ​ைடமைகளுக்கும் சேதத்தையும், சொல்லொணா சோகத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

-----------------தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிற கரியமிலவாயு பூமியின் மேல்மட்டத்தில் பரவிக் கொண்டு வருவதாலும், புவியினுடைய வெப்பத்தை அதிகரித்து, மேல்மட்டத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்துடைய செழிப்புத்தன்மையை சீரழிந்திருக்கின்றன. மேலும் கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையால் உருவாகியுள்ள சத்தங்கள் புவியை அதிர வைத்திருக்கின்றன. இனி வருங்காலத்தில் நதிகளும் மற்றும் ஆறுகளும் வற்றிப் போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல், பட்டினி, பஞ்சம் போன்ற கொடுமைகளால் பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் இந்த மானுட சமூகம்.

------------------ வங்காள விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்களாலேயே இலங்கை இவ்வாறான அனர்த்தங்களை அவ்வப்போது சந்தித்து வருகின்றது. வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற தாழமுக்கத்தினாலேயே இலங்கையின் காலநிலையில் திடீர் மாறுதல் ஏற்படுகின்றது.

----------------இதுபோன்று அடிக்கடி நிகழும் பேரழிவுகள் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

ஒரு கருத்தை இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. கி.மு. 426 இல் கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், என்பவர்தான் சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை 'பிலோப்போனேசியப் போர் வரலாறு' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார்.

எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும், பின்பு திடீர் பின்வாங்குதல் ஏற்படும்.அதன் பின்னர் இரட்டை சக்தி கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது என்றும் ஆழிப்பேரலை குறித்து உலகுக்கு முதன் முதலில் அறிவித்தார்.

ஒன்று மட்டும் தெளிவு, நாம் என்ன செய்தாலும் இயற்கையின் பேரழிவுகளை தடுக்க முடியாது. கடல்கோளையும், நிலநடுக்கத்தையும் தடுக்கவா முடியும்? வெள்ளத்தை நிறுத்தவா முடியும்? ஆனால், ஒன்று செய்யலாம். இவற்றின் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியும்.முன்னெச்சரிக்கைதான் இங்கு முக்கியம்.

இயற்கைச் சீற்றம் குறித்த விழிப்புணர்வு இன்மையினால் விலைமதிப்பில்லா மனித உயிர்கள் ஏராளமான அளவில் மடிந்து போகும் நிலை ஏற்படுவதால் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் நாம்.

யுவன்


Add new comment

Or log in with...