2018 வரவு செலவுத் திட்டம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் | தினகரன்

2018 வரவு செலவுத் திட்டம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

 

3 ஆம் வாசிப்பு 99 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்

2018 ஆம் நிதியாண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், 99  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக155  வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர் கட்சியான  மஹிந்த ஆதரவு  அணியும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நீலப் பசுமைப் பொருளாதாரத்தை கருப்பொருளாக கொண்டதாக  நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் கடந்த 09 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு மீது  கடந்த 10,11,13,14,15, 16 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 93 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (09) வரை அமைச்சுகள் மீது குழுநிலை விவாதம் நடத்தப்பட்டது.  இன்றைய தினம் (09) நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மீதான இறுதி விவாதம் நடைபெற்ற நிலையில் மூன்றாம் வாசிப்பை நிறைவேற்ற ஜே.வி.பியின் தலைவரும் எம்பியுமான அநுரகுமார திஸாநாயக்க வாக்கெடுப்பை கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56  வாக்குகளும் கிடைத்தன.

(லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்)

 


Add new comment

Or log in with...