சிரியாவில் இரண்டு நாட்களில் இஸ்ரேல் 2ஆவது தாக்குதல் | தினகரன்

சிரியாவில் இரண்டு நாட்களில் இஸ்ரேல் 2ஆவது தாக்குதல்

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகிலுள்ள அரச படையின் இராணுவ நிலை மீது இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது மூன்று ஏவுகணைகளை சிரிய வான் பாதுகாப்பு கேடயம் இடைமறித்ததாகவும் சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது. “டமஸ்கஸ் புறநகர் பகுதியில் உள்ள எமது நிலையின் மீதான இஸ்ரேலின் ஏவுகணையை எமது வான் பாதுகாப்பு முறை எதிர்கொண்டதோடு மூன்று இலக்குகள் முறியடிக்கப்பட்டன” என்று அரச ஊடகமான சனா குறிப்பிட்டது.

மேற்கு டமஸ்கஸின் ஜம்ரயா பகுதியில் இருந்து திங்கட்கிழமை மூன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அங்கு வானுக்கு மேலால் புகை எழும்பியதையும் பார்்த்தாக குறிப்பிட்டுள்ளனர்.

ஜம்ரயாவில் இராணுவ ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு இஸ்ரேல் 2013 ஆம் ஆண்டும் தாக்குதல் நடத்தியது.

கடந்த சனிக்கிழமை தெற்கு டமஸ்கஸின் இராணுவ நிலை ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் வெளிநாட்டு செய்திகளுக்கு தாம் பதில் கூற முடியது என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய யுத்தத்தில் அரச படைக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் லெபனானின் ஷியா போராட்டக் குழுவான ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த காலங்களில் சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...