ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பழிதீர்க்க சலேஹ் மகன் உறுதி | தினகரன்

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பழிதீர்க்க சலேஹ் மகன் உறுதி

 

யெமன் உள்நாட்டு யுத்தத்தில் மறுபக்கத்திற்கு மாறியதை அடுத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலேஹ்வின் கொலைக்கு பழிதீர்க்க அவரது மகன் அழைப்பு விடுத்துள்ளார். சவூதி அரேபியாவுக்கு சொந்தமான அல் எக்பரியா தொலைக்காட்சிக்கு அவர் இதனை கூறியுள்ளார்.

“யெமனில் இருந்து கடைசி ஹூத்தியும் வீசி எறியப்படும் வரை இந்த போருக்கு நான் தலைமை வகிப்பேன். எனது தந்தையின் இரத்தம் சிந்தப்பட்டது ஈரானின் காதுகளில் நரகமாக ஒலிக்கும்” என்று அஹமது அலி சலேஹ் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு அதரவளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளும்படி அவர் தனது தந்தையின் ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். யெமன் முன்னாள் ஜனாதிபதியான சலேஹ் ஹூத்திக்களுடனான கூட்டணியில் இருந்து வலகி அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை பெற்றதை அடுத்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சலேஹ்வின் மரணம் பல முனை மோதல் இடம்பெறும் யெமன் யுத்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் எதிர்காலத்தில் யாருக்கு ஆதரவாளிப்பாளர்கள் என்பதிலேயே இந்த யுத்தத்தில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் பழங்குடி ஆயுதத் தலைவர்கள் என்று சலேஹ்வுக்கு பரந்த அளவில் ஆதரவு உள்ளது. அவரது கூட்டணி யெமன் யுத்தத்தில் ஓரளவு தாக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

அஹமது அலி சலேஹ் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீட்டுக் காவலில் வாழ்ந்து வருகிறார்.


Add new comment

Or log in with...