அழுத்தம் அதிகரிப்பு: டிரம்பின் 'ஜெரூசலம்' முடிவில் தாமதம் | தினகரன்

அழுத்தம் அதிகரிப்பு: டிரம்பின் 'ஜெரூசலம்' முடிவில் தாமதம்

ஒரு வரலாற்று தவறு மற்றும் பதற்றம் பற்றிய கடும் எச்சரிக்கைகளை அடுத்து ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்து அங்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது திட்டத்தை கடந்த திங்கட்கிழமை ஒத்திவைத்தார்.

டெல் அவிவில் இருந்து தூதரகத்தை மாற்றுவதற்கான காலக்கெடுவை டிரம்ப் தவறவிட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் பொது எச்சரிக்கைகளை அடுத்தே டிரம்ப் இந்த காலக்கெடுவை தவறவிட்டார்.

தொடர்ந்து மெளனம் காத்து வரும் டிரம்ப் தனது இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அதிகாரிகள், ஜெரூசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவதை குறுகிய காலத்திற்கு நிறுத்தி வைப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

டிரம்ப் நிர்வாகம் இந்த விடயம் தொடர்பில் உறுதிமொழி அளித்த நிலையில் ஏற்கனவே ஒரு தடவை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“இந்த விடயத்தை முன்னெடுப்பது என்பதில் ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். அது எப்போது என்பதே விடயமாக உள்ளது” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஹோகன் கிட்லி குறிப்பிட்டார். இந்த பிரகடனம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

பழைமைவாத வாக்காளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அழுத்தம் கொடுக்கும் நிலையில் உள்நாட்டு அரசியல், ஜெரூசலத்தை தலைநகராக அங்கீகரிக்க டிரம்பை வலியுறுத்தி வருகிறது.

இஸ்ரேல்–பலஸ்தீன பிராச்சினையில் ஜெரூசலத்தின் அந்தஸ்்து தீர்க்கமானதாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் இரு தரப்புகளும் ஜெரூசலத்தை தலைநகராக உரிமை கோருகின்றன.

இந்நிலையில் டிரம்பின் முடிவு மத்திய கிழக்கு மற்றும் பல நாடுகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியதோடு, இது பல தசாப்த அமெரிக்க கொள்கையில் மாற்றம் எற்படுத்துவதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிரம்பை இவ்வாறு எச்சரித்தவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனும் உள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை அடிப்படையிலேயே ஜெரூசலத்தின் அந்தஸ்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அவர் டிரம்பை வலியுறுத்தினார்.

வெள்ளை மாளிகைக்குள் இது தொடர்பில் முரண்பாடுகள் இருப்பதால் டிரம்ப் என்ன முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அவரது உதவியாளர்களாலும் கூற முடியாதுள்ளது.

“ஜனாதிபதி அவரது தீர்மானத்தை அறிவிப்பார்” என்று அவரது மத்திய கிழக்கிற்கான ஆலோசகரும் மருமகனுமான ஜரெட் குஷ்னர் குறிப்பிட்டார்.

இந்த வரலாற்று வாய்ப்பை தட்டிப்பறித்துக் கொள்ளும்படி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டொர் லிபர்மன், டிரம்பை கோரியுள்ளார். எனினும் இதனைச் செய்யக் கூடாது என்று பிராந்தியம் எங்கும் டிரம்புக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ஜெரூசலத்தின் அந்தஸ்து மாற்றப்பட்டால் மற்றொரு நடவடிக்கை எடுக்கப்படும், அது பாரிய பேரழிவாக இருக்கும்” என்று துருக்கி துணை பிரதமர் பாகிர் பொஸ்டக் குறிப்பிட்டார்.

“அது அமைதி செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்துவிடும் என்பதோடு புதிய மோதல், புதிய பிரச்சினை மற்றும் புதிய பதற்றத்தை ஏற்படுத்திவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கான அனைத்து வெளிநாட்டு தூதரகங்களும் டெல் அவிவில் இருப்பதோடு ஜெரூசலத்தில் துணைத் தூதரகங்கள் உள்ளன. அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றும் அமெரிக்க சட்டத்திற்கு ஆறு மாத விலக்கு அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட டிரம்புக்கு கடந்த திங்கட்கிழமை வரை அவகாசம் இருந்தது. இந்த சட்ட விலக்கில் முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் கடந்த இரண்டு தசாப்தமாக தொடர்ந்து கைச்சாத்திட்டு வந்தது.

இந்நிலையில் தூதரகம் மாற்றப்படுவதற்கான சாத்தியம் பற்றி கேட்கப்பட்டபோது “தேர்வுகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்” என்று இராஜாங்க திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்ட விலக்கில் டிரம்ப் இந்த வாரத்தில் தயக்கத்துடன் கைச்சாத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் டிரம்ப் நாளை புதன்கிழமை ஆற்றவிருக்கும் உரையில் ஜெரூசலத்தை தலைநகராக கூறும் இஸ்ரேலுக்கு ஆதரவை வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அரபு லீக் குறிப்பிட்டுள்ளது. இந்த நகர்வு மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கும் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பு அபுல் கெயித் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனுடன் தொலைபேசியில் உரையாடிய ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபதி, டிரம்பின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

அமெரிக்க கொங்கிரஸ் 1995 ஆம் ஆண்டு நிறைவேற்றிய இஸ்ரேல் தூதரக சட்டத்தில், ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததோடு அமெரிக்க தூதரகம் அந்த நகருக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டத்தை இதுவரை வந்த ஜனாதிபதிகள் தற்காலிகமாக ஒத்திவைத்து வந்தனர். 


Add new comment

Or log in with...