ஜனாதிபதி வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் ஒக்ஸ்போர்ட் குழுமம் | தினகரன்

ஜனாதிபதி வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு அனுசரணை வழங்கும் ஒக்ஸ்போர்ட் குழுமம்

ஹமீட் - அல்- ஹுசைனி கல்லூரியின் எண்பதுகளிலான குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி வெற்றிக்கிண்ணப் போட்டிகளுக்கான -2018 பிரதான அனுசரணையாளராக பங்களிப்புச் செய்வதற்கென ஒக்ஸ்போர்ட் குழுமம் முன்வந்துள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான 11 ஆவது வருடாந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் எதிர்வரும் பெப்ரவரி 3ம் திகதியில் இருந்து 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையில் தரம் வாய்ந்த தோல் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களுள் ஒன்றான ஒக்ஸ்போர்ட் குழுமம் இதற்கான பிரதான அனுசரணையை வழங்கவுள்ளது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஹமீதிய சகோதரத்துவ இராப்போசன விருந்தின்போது மேற்படி அனுசரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

தமது இருபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் ஒக்ஸ்போட் குழுமம் பாரிய சுற்றுப் போட்டியொன்றுக்கு அனுசரணை வழங்குவது இதுவே முதற்தடவையாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் எண்பதுகள் குழுவினரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் உதைபந்தாட்டத்தில் பயங்கரமாக மோதக்கூடிய ஆற்றல் மிக்க 20 முன்னணிப் பாடசாலை அணிகள் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று வருகின்றன.

மேற்படி அங்குரார்ப்பண வைபவத்தில் ஒக்ஸ்போர்ட் குழுமத் தலைவர் இம்தியாஸ் பாருக் கலந்துகொண்டு உரையாற்றுகையில், பாடசாலை நாட்களில் இளம் சிறார்கள் மத்தியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். உதைபந்தாட்டம் போன்ற குழு ரீதியிலான விளையாட்டின் மூலம் அவர்கள் தமது தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

ஒக்ஸ்போர்ட் குழுமப் பணிப்பாளர்களான தனது சகோதரர்களான ரொஷான் பாரூக், ஹிபாஸ் பாரூக் மற்றும் ஷாமில் பாரூக் ஆகியோருடன் கல்லூரியில் கல்வி கற்றவன் என்ற வகையில் அல்- ஹுசைனின் கல்லூரியை பிரபலமாக்கி வரும் இந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு அனுசரணை வழங்குவதையிட்டு தாங்கள் பெருமைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மின்னொளியில் இடம்பெறவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியை 5000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிப்பரெனவும் எதிர்பார்ப்பதாக சுற்றுப போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...