நம்பிக்கையூட்டும் மறுபிறப்பு கோட்பாடு | தினகரன்

நம்பிக்கையூட்டும் மறுபிறப்பு கோட்பாடு

 

இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வினிதா கொழும்பு பொது வைத்தியசாலை விபத்து நோயாளர் விடுதியில் பணியாற்றி வந்தார். அவரது மூத்த மகள் ருச்சிரா 1983 மே 24 இல் பிறந்தார். தனது பிள்ளைப் பருவத்திலிருந்தே ருச்சிரா துடிப்பு மிக்கவளாக, விஷமம் நிறைந்தவனாகக் காணப்பட்டாள். ஆண்களுக்கான ஆடைகளை அணிவதில் பிரியமானவளாக இருந்த அவள், தனது தந்தையின் சாரத்தை அடிக்கடி அணிந்துகொண்டிருப்பாள். தனது அயலில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதென்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம். ரீ-சேட்டை அணிந்தபடியே அம்மா, அப்பா முன்னிலையில் வந்து “இது எப்படி இருக்கின்றது” என அவர்களிடம் கேட்பாள். அவளது ஒரு காலில் முற்றிலுமே வேறுபட்ட பிறப்பு மச்சமொன்று காணப்பட்டது.

தந்தையின் மோட்டார் சைக்கிளில் தனது ஏழு வயதிலேயே சவாரி செய்தார்.

அந்த நேரத்தில் ருச்சிரா கொழும்பில் உள்ள மியுசியஸ் கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருந்தாள். அவள் வீட்டிலிருந்து வான் ஒன்றிலேயே பாடசாலைக்கு போய் வந்துகொண்டிருந்தாள். அவள் ஏனைய பதினைந்து பாடசாலைப் பிள்ளைகளுடன் அந்த வானில் பயணித்து வந்தாள். இவ்வாறாக, பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் போதெல்லாம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர்ப் போத்தல் விற்பனை செய்துவந்த பெண்ணொருவரின் கடையில் வாகனத்தை நிறுத்தச் செய்து அவளிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது வாடிக்கையான இருந்தது. வீட்டில் அவளது பெற்றோர் அவளை ‘டிங்கி” என்றே அழைத்து வந்தனர்.

இப்படி வீட்டிற்கு ஒரேயொரு செல்லப் பிள்ளையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்த ருச்சிரா, அன்றும் அதே துடிப்பாட்டத்துடன் வீட்டிலிருந்து அமமா, அப்பாவின் வழமையான காலை நேர ஆசிர்வாதத்தைப் பெற்றதன் பின்னர், அந்தப் பாடசாலை வானில் கிரில்லவல எனுமிடத்திலிருந்து பாடசாலை நோக்கி தனது பயணத்தை கடந்த 1992 மே மாதம் 12 ஆம் திகதி தொடர்ந்தாள். அந்த வாகனம் கின்சி வீதியை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் காலன் வடிவில் வேகமாக வந்துகொண்டிருந்த அந்த வாகனம் பாடசாலை வாகனத்தை முட்டி மோதியதில் அதில் பயணித்துக்கொண்டிருந்த அனேகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஒரேயொரு பிள்ளை மட்டும் கொல்லப்பட்டது.

இந்தத் துயரமான செய்தி விபத்து நோயாளர் விடுதியில் தாதியாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த வினிதாவின் செவிகளுக்கு எட்டியது.

தனது செல்ல மகளும் அந்த வானில் பயணித்திருந்ததால் வினிதாவுக்கு ஒரே பதற்றமாக இருந்தது. நேரத்தை வீணாக்காமல் காயப்பட்டோரைப் பார்க்கவென விழுந்தடித்துக்கொண்டு சென்றார். ஆயினும், அங்கு தனது அன்பு மகளைக் காணாமல் தவியாய் தவித்தார். இறுதியில், பிரேத அறையில் தன்னந்தனியாக அந்த தள்ளுவண்டியில் கண்களை மூடியபடி கிடந்த தனது செல்ல மகள் ருச்சிராவின் அருகே சென்ற வினிதா, கண்கள் குளமாகக் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரினதும் மனங்களைக் கரைய வைத்தது.

ஆமாம்! அன்று இடம்பெற்றிருந்த அந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த ஒரேயொரு மாணவியான ருச்சிராவின் இறுதிப் பயணம் இவ்வாறு முடிந்தது. ருச்சிராவின் பேரிழப்பினால் சொல்லொன்னாத் துயரத்தில் மூழ்கிய வினிதா தனது செல்லமகளின் குணாதிசயங்களை அங்கிருந்தோரிடம் சொல்லிச் சொல்லி அழுது புலம்பினார். ருச்சிராவின் பாடசாலை மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும் கூட அவளின் பிரிவுத்துயர் தாங்காது கதறி அழுதனர்.

தனது குடும்பத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மகளின் மரணத்துயரில் இருந்து வினிதா மீள்வதற்கு அதிக காலம் எடுத்தது. அவர் புனிதஸ்தலங்களுக்கு விஜயம செய்ததுடன் இறந்துபோய்விட்ட தனது மகள் மீண்டும் தன் வயிற்றில் வந்து பிறக்கவேண்டுமென மன்றாடினார். மும்மணிகளின் ஆசிவேண்டி, அவர் அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீமகாபோதி விகாரைக்கு பல தடவைகள் சென்று வழிபட்டாள்.

தனது மகளை மீண்டும் பார்க்கும் பாக்கியத்தை தனக்கு வழங்க வேண்டுமென தனது பிரார்த்தனையின்போது வேண்டிக்கொண்டாள். நாட்கள் உருண்டோடின. அதேவேளையில், வினிதா வேலை பார்க்கும் நோயாளர் விடுதிக்குப் பொறுப்பான டொக்டர், தான் கண்ட கனவொன்று பற்றி வினிதாவிடம் கூறினார். வெள்ளை உடையணிந்த மதகுரு ஒருவர் வினிதாவிடம் வந்து இறந்துபோன அவரது மகள் மீண்டும் அவரது கர்ப்பப்பையில் உண்டாகியிருப்பதாகக் கூறினார். இந்தச் செய்தி வினிதாவுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. நாட்கள் கடந்தோடிய நிலையில், வினிதா உண்மையாகவே மீண்டும் கர்ப்பம் தரித்தார். அதனை மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர்.

ஒத்த தன்மையுள்ள பிறப்பு மச்சம்

வினிதா கடந்த 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்தார். அந்தக் குழந்தையின் தொடைப் பகுதியில் பிறப்பு மச்சமொன்று காணப்பட்டது. அந்த மச்சம் இறந்துபோன மகளின் மச்சத்தை ஒத்ததாகவே இருந்தது. அவனுக்கு ‘ருச்சிர’ எனப் பெயரிடப்பட்டது.

போதுமான நிரூபணம்

இந்தப் பையனுக்கு சுமார் இரண்டு வயதாகும்போது அவன் ‘டிங்கி’ என்ற சொல்லை வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தான். ‘டிங்கி’ என்பது யார்? என தாயார் அவனிடம் கேட்டபோது, ‘டிங்கி வான் ஒன்றில் போய் விபத்தொன்றில் சிக்கினாள்” என்றான். மகனின் இத்தகைய குறிப்புக்களும், நடத்தையும் இறந்துபோன தனது மகள் மீண்டும் வந்து தனது வயிற்றில் பிறந்துள்ளதை நிரூபித்தது. வினிதா தனது மகனிடம் மேலும் பல விசாரிப்புக்களை மேற்கொண்டபோது, ருச்சிரா மியுசியஸ் கல்லூரியில் படித்து வந்ததாக அவன் பதிலளித்தான். அவன் ஒருமுறை தனது அப்பாவின் நண்பரொருவரை அடையாளங்கண்டு அவரை அவரது பெயர் சொல்லி அழைத்தான்.

அத்துடன், காலஞ்சென்ற ருச்சிராவுக்கு தண்ணீர் கொடுத்திருந்த அந்தப் பெண்ணைக் கூட அவன் ஞாபகத்தில் வைத்திருக்கின்றான்.

விபத்து நோயாளர் விடுதியில் கடமையாற்றி வந்த வினிதாவுக்கு தாதிய மேற்பார்வையாளர் பதவி உயர்வு ஓய்வு பெறுவதற்கு முன்னரே கிடைத்தது. விபத்தொன்றில் உயிரிழந்த தனது மகள் மீண்டும் தனது கருப்பையில் தரித்து பிறந்துள்ளதை அவள் ஏற்றுக்கொண்டுள்ளார். தனது மகளை இழந்து பிரிவுத்துயரிலிருந்து அவர் இப்போது மீண்டுவிட்டார்.

அவரது மகன் ருச்சிரவுக்கு இப்போது 24 வயதாகின்றது. மறுபிறப்பு குறித்து அதிகம் நம்பும் ஒருவராக விளங்கும் அவர் பௌத்த மதம் மன அமைதியை வழங்குகின்றதென்பதில் அளவுகடந்த நம்பிக்கைகொண்டவராகவும் காணப்படுகின்றார்.

பௌத்த துறவியாக மாறும் விருப்பம்கொண்டவராகவும் அவர் இப்போது விளங்குகின்றார்.


Add new comment

Or log in with...