அத்துமீறும் தமிழக மீனவர்களிடம் தண்டப்பணம் அறவிட தீர்மானம் | தினகரன்

அத்துமீறும் தமிழக மீனவர்களிடம் தண்டப்பணம் அறவிட தீர்மானம்

படகுகளும் பறிமுதல்

சட்டவிரோதமாக எல்லைமீறி நுழையும் இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் அவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துமீறி நுழையும் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் மீள அவர்களுக்கு வழங்கப்படமாட்டாதெனவும் உறுதிபட அவர் தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

அத்துமீறும் இந்திய மீனவர்களின் பிரச்சினை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடித் தடை என்பன நாடு எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வதே சத்தின் நல்லெண்ணத்தை வென்றதன் மூலமாகவே ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித்தடையை நீக்க முடிந்தது.

இந்திய மீனவர் பிரச்சினையை நூறு வீதம் முடிவுக்குக் கொண்டுவர முடியாதபோதும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான முயற்சிகளை எடுக்கின்றோம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைந்து பெரும் தொகையான வருமானத்தை சூறையாடிச் செல்வது மாத்திரமன்றி, சூழலுக்கு விரோதமான செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். அவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இந்திய மீனவர்ளை கைது செய்வதை விரைவுபடுத்தியிருப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பதில்லையென்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது. இதனால் எல்லைமீறும் இந்திய படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் இவற்றைத்தடுக்க சட்டரீயான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

அமைச்சர்கள் மட்ட மற்றும் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கை என்பதை புதுடில்லி ஏற்றுக் கொண்டிருப்பது பாரிய வெற்றியாகும். இதன் அடிப்படையில் மாற்றுத் தொழிலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் எமது நாட்டுக்குள் நுழையும் இந்திய மீனவர்களிடம் தண்டப்பணம் அறவிட எதிர்பார்த்திருப்பதுடன், அவர்களின் படகுகளை மீள வழங்காது தடுத்துவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...